‘கொரோனாவால் 30 பேர் உயிரிழப்பு’

நாட்டில் ஜுலை மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் காரணமாக இவ்வாறு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முகக் கவசம் அணிதல் போன்ற சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காய்ச்சல், தடுமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் சுகாதார சட்ட திட்டங்களுக்கு அமைய வீட்டில் இருந்தபடியே நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் பொதுமக்களை சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

திருத்தப்பட்ட ’22’ அமைச்சரவையில் நாளை முன்வைப்பு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், அமைச்சரவையில் நாளை சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த சட்டமூலத்தை விட மேலும் சில திருத்தங்களை உள்ளடக்கி புதிய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடம் தக்கவைத்துக்கொள்ளும் வகையில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்ட இடைக்கால விதிகள், புதிய திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.

ஞாயிறு ஆராதனையின்போது மின்னல் தாக்கம்!

யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று (31) காலை 6.30 மணியளவில் ஆராதனை இடம்பெற்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வீழ்ச்சி பதிவான நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

தேவாலயத்தில் நடந்த மின்னல் தாக்கத்தால் மேற்கூரைப் பகுதிகளும், மின் இணைப்புக்களும் சேதமடைந்தன. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

20 எம்.பிக்கள் கட்சி தாவல்!

ஆகஸ்ட் 03 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவ உள்ளனர் என தகவல் வெளியாகவுள்ளது.

எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது. ஆளுங்கட்சி பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் ரணிலுடன் சங்கமிக்கவுள்ளனர்.

அதேபோல ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பட்டி, சரத் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.

ரணிலின் உரைக்காக காத்திருக்கும் சம்பிக்க!

சர்வக்கட்சி அரசு தொடர்பான தமது நிலைப்பாடு எதிர்வரும் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று தெரிவித்தார்.

” அரசமைப்பு மறுசீரமைப்பு, நாடாளுமன்ற குழுக்கள் தொடர்பிலேயே ஜனாதிபதி எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சர்வக்கட்சி அரசுக்கான அழைப்பு விடுக்கவில்லை.

ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரை 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது அவர் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்வைப்பார் என்பதை அறிய காத்திருக்கின்றோம். தற்போதைய அரசுமீது நம்பிக்கை இல்லை. எனினும், ஜனாதிபதியின் திட்டங்கள் பற்றி தெரிய வேண்டும். அதன்பின்னரே எமது முடிவு அறிவிக்கப்படும். “- எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.

அடுத்து என்ன? 3 ஆம் திகதி முக்கிய அறிவிப்பு!

” சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி அறிவிப்பொன்றை வெளியிடுவார்.” – என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பிரதமர் இன்று கண்டிக்கு சென்று, தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்போது ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றுவார். இதன்போது சர்வக்கட்சி அரசு தொடர்பில் அவர் விளக்கமளிப்பார் என பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டுக்கு உதவிகளை பெறுவது தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

ரணிலின் அழைப்புக்கு சம்பந்தன் பச்சைக்கொடி!

“ தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசு அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்றுமுன்தினம்தான் அவரின் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துக்கு நான் இன்னமும் பதில் அளிக்கவில்லை.

எனினும், சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள மாநாட்டில் நாம் பங்கேற்போம். எம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

நாட்டினுடைய பிரச்சினை – நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனச் சகல தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பை சர்வகட்சி அரசுக்கு வழங்குவோம்.

ஏனெனில் ஒரு பிரச்சினையைத் தீர்த்து மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்காது விட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது. ஆனபடியால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜனாதிபதிக்கும் அவர் தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

எனவே, அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் ஒரு ஒழுங்கு முறையில் தீர்வைக் காண ஜனாதிபதி தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசு முன்வரவேண்டும்” – என்றார்.

சீன உளவு கப்பல் குறித்து இலங்கை விழிப்பாகவே இருத்தல் அவசியம்!

சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசு அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (31) கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. குறிப்பாக அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், எரிபொருட்களின் விலையேற்றம் தட்டுப்பாடு என்பன முக்கிய விடயங்களாக மாறியிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்திய அரசு தொடர்ந்தும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சீனா உடைய உளவு கப்பல் ஒரு வாரத்திற்கு இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இன்றைய சூழ்நிலையில் எந்தளவு பொருத்தமாக அமையும். குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா? இதனை இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எவ்வாறான கண்ணோட்டத்துடன் பார்க்கும். குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது.

இதனை அந்த நாடுகள் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலாக அமையுமா, அல்லது இந்திய பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக அமையுமா? என்பதை மிகவும் உன்னிப்பாக இந்த நாடுகள் கவனித்து வருகின்றது.

இந்திய அரசு இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏனெனில் இந்தியா சீனாவுடன் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்ற சூழ்நிலையில் இந்த விடயத்தை இலங்கை அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை மிகவும் உண்ணிப்பாக கவனத்து வருகின்றது.

இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசின் உதவிகள் இலங்கைக்கு கிடைப்பது தடைப்படுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்திய அரசு தற்பொழுது இலங்கைக்கு தொடர்ச்சியாக செய்து வருகின்ற உதவிகள் கேள்விக்குறியாகுமா? எனவே இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.

சீன கப்பல் எங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையோ, மருந்து பொருட்களையோ கொண்டு வருமாக இருந்தால் அதில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட போவதில்லை.

மாறாக உளவு பார்க்கும் விடயத்திற்காக இலங்கை வருவது பலருக்கும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே இந்த விடயத்தை இலங்கை அரசு நிதானமாக கையாளவிட்டால் பல்வேறு சிக்கல்களுக்கு எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்க வேண்டி வரும். எனவே இதனை சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிக்கள் வந்துசெல்ல 2 லட்சம் ரூபா!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லட்சம் ரூபாவிலிருந்து 2 லட்சம் ரூபாவரை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட தூர பகுதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரும் உறுப்பினர்களுக்கு 2 லட்சம் ரூபாவும், கொழும்பு உட்பட அண்மித்த பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்படும்.

இலங்கையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. எனினும், மக்களுக்கு நிவாரணம் இல்லை.

‘கோட்டாவின் முடிவை மாற்றினார் ரணில்’

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் காலி முகத்திடல் வளாகத்தில் போராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், போராட்டம் நடத்த இடமளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் அந்த இடத்தில் போராட்டம் நடத்துவதையோ, அனுமதியின்றி தங்குவதையோ தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் ,விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கம், புதிய நகர மண்டபம் மற்றும் ஹைட் பார்க் மைதானம் ஆகிய இடங்களை பொது மக்களுக்கு ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கு அரசு இலவசமாக வழங்கவுள்ளது.

அனுமதியின்றி இந்தப் போராட்டத் தளங்களில் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘சர்வக்கட்சி அரசு’ -ரணிலின் அழைப்புக்கு சுமந்திரன் வரவேற்பு!

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்பினால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாடு மீண்டெழ சர்வகட்சி ஆட்சிதான் ஒரே வழி. ஆனால், அது உண்மைத்தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதிக்கத்தில் இருக்கின்ற சர்வகட்சியாக அது இருக்கக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“சர்வகட்சி அரசில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதம் எனக்கும் கிடைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வர வேண்டுமாக இருந்தால் குறுகிய காலத்துக்காவது சர்வகட்சி ஆட்சி அமைய வேண்டும். இல்லையெனில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேண முடியாது.

அப்படியொரு சர்வகட்சி ஆட்சி வேண்டும் என்பதற்காகத்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு நாம் ஆதரவு கொடுத்தோம்.

எதிர்க்கட்சியில் அமைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள சிலரும் இணைந்து ஆட்சி அமைத்தால்தான் அது சர்வகட்சியாக இருக்க முடியும்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்கள் முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சிக்காரர்கள். அவர்கள் ஒன்றாகச் செயற்பட்டமையால் சர்வகட்சி ஆட்சியை அமைக்க முடியாமல்போனது.

ஆனால், தற்போது ஜனாதிபதியாக வந்த பின் ரணில் விக்கிரமசிங்க ஒரு சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்பினால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாடு விடுபட அதுதான் ஒரே வழி. ஆனால், அது உண்மைதன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதிக்கத்தில் இருக்கின்ற சர்வகட்சியாக அது இருக்கக்கூடாது. ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஆணையை இழந்த கட்சி. அதனாலேயே அந்தக் கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகியிருந்தார்கள்” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

ரஞ்சனின் விடுதலைக்காக காத்திருக்கும் சஜித்!

ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுவிக்கப்படுவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் அந்நாளுக்காக காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார்.

மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மனிதாபிமானமிக்க அரசியல்வாதியாக, மக்கள்சார் கலைஞராக, மக்கள் செல்வாக்குள்ள பிரபலமாக திகழும் ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர குடிமகனாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்ப்பதே ஒரே நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இலங்கையில் பாசிச தீவிரவாதம் – ஜனாதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.

” எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது. அதனை மீள் நிர்மாணம் செய்யும்வரை ,’ரணில் கோ ஹோம்’ என கோஷம் எழுப்புவதில் பயன் இருக்காது, முடிந்தால் மக்களை திரட்டிவந்து, வீட்டை நிர்மாணித்து தாருங்கள்.” – என ஜனாதிபதி நகைச்சுவை பாணியில் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.

கண்டிக்கு இன்று (30) பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும் பெற்றார்.

அதன்பின்னர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் உண்மையான தன்னெழுச்சி போராட்டத்தை, ஒரு சிலர் வன்முறை நோக்கி அழைத்துச்சென்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

” இலங்கை வரலாற்றில் முதன்முதலில் பாசிச தீவிரவாத குழுவொன்றை சந்திக்க நேரிட்டது, வீடுகளை கொளுத்துவதும், புத்தகங்களுக்கு தீ வைப்பதும் ஹிட்லரிடமிருந்து கற்றுக்கொண்டதாகும்.

புலிகள் துப்பாக்கிச்சூடும், குண்டு தாக்குதலும் நடத்தினர். எனினும், முதன்முறையாக பாசிசவாத குழுவை எதிர்கொள்ள நேரிட்டது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீடித்தால் எம்மால் மீண்டெழ முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நிதியை திரட்ட வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென.” குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, சர்வக்கட்சி அரசு அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை மகாநாயக்க தேரர்களுக்கும் ஜனாதிபதி வழங்கினார்.

ஆஸி.செல்ல முற்பட்ட 12 பேர் யாழில் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த 12 பேர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று அதிகாலை அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 8 ஆண்களும், 4 பெண்களுமே சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்று குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க அனுமதித்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அச்சுறுத்தும் குரங்கு அம்மை! ஐரோப்பாவில் முதல் உயிரிழப்பு!

பிரான்ஸின் பெரு நிலப்பரப்பில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றினால் பாரிஸ் பிராந்தியமே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் ஆயிரத்து 300 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். நாளாந்தம் 60 முதல் 70 வரையான புதிய தொற்றுக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

நாட்டின் பொதுச் சுகாதார நிர்வாகம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாரிஸ் தொற்றாளர்களில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் அல்லது ஓரினப் பாலியல் தொடர்பை வைத்துள்ள ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தகையோருடன் உடலுறவு கொள்கின்ற பெண்களுக்கும் அம்மை வைரஸ் தொற்றியுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் சிலரும் அதில் அடங்கியுள்ளனர். அம்மை தொற்றிய குழந்தை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறியும் விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதலாவது குரங்கு வைரஸ் மரணம் பிறேசில் நாட்டில் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

உடல் எதிர்ப்புச் சக்திக் குறைபாடுடைய 41 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். பிறேசிலில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்றியுள்ளது என்ற தகவலை அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குரங்கு வைரஸுடன் தொடர்புடைய மற்றொரு உயிரிழப்பு ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. அது இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆபிரிக்காவின் சில பகுதிகளில் மாத்திரம் உள்ளூர் தொற்று நோயாக இருந்து வந்த குரங்கு அம்மை கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் பரவுகின்ற தொற்று நோயாக மாறியுள்ளது.

75 நாடுகளில் சுமார் 18 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உலக சுகாதார நிறுவனம் கடந்த சனியன்று குரங்கு அம்மை நோயைச் சர்வதேச சுகாதார அவசரகால நிலையாகப் பிரகடனம் செய்தது.

அதிக காய்ச்சல், நிணநீர் வீக்கம் மற்றும் உடலில் – குறிப்பாகப் பாலுறுப்புப் பகுதிகளில்- சொறி என்பன குரங்கு அம்மை நோய்த் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.

இதேவேளை – பெரியம்மைக் குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கைகள் பாரிஸ் பிராந்தியத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. 18 இடங்களில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தொற்றுச் சூழ்நிலையில் இருப்போர், தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் மற்றும் நோயாளர்களைப் பராமரிக்கும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கலாக சுமார் 8 ஆயிரம் பேருக்குப் பெரியம்மைத்(smallpox) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

யாழ். மக்களை கிலிகொள்ள வைத்த ‘மொபைல்போன்’ திருட்டு கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 அலைபேசிகளும் ஒன்றரை பவுன் நகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவர கோட்டா திட்டம் – வைகோ பகீர் தகவல்

” தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையை இந்திய மத்திய அரசு தவறிவிட்டது.” – என்று வைகோ குற்றஞ்சாட்டினார்.

ராமேஸ்வரம், பாம்பனில் மதிமுக கட்சி பிரமுகரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது. இலங்கை இறுதி கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர் இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய இந்தியாவிற்கு வர முயற்சி செய்வதாகவும் தெரிய வருகிறது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசு குறிப்பாக ராஜபக்ச கொண்டாடியபோது எனக்கு தெரியும், இன்னும் சில ஆண்டுகளில் ராஜபக்ச குடும்பம் உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை விட்டு தப்பி செல்வார்கள் என நான் அன்று சொன்னது இன்று நடக்கின்றது.

அதேவேளை, கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசிடம் உள்ளது ஆனால் அதனை மத்திய அரசு தவறவிட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. எனவே மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.” – என்றார் வைகோ.

‘தபால்மூலம் அனுப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு’

நெதர்லாந்திலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான 2,973 மெத்தம் பெட்டமைன் மாத்திரைகளை இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

நெதர்லாந்திலிருந்து கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு கால்ளை மசாஜ்செய்யும் இயந்திரம் என அனுப்பப்பட்ட இந்தபொதி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இயந்திரத்தை திறந்து பார்த்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சுதத் த சில்வா மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அதிரடி – நாடாளுமன்ற கதிரையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலச்சினை முதல் முறையாக அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அந்த ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது நாடாளுமன்றத்துக்கு தலைமைதாங்கி, ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றவுள்ளார். சபாபீடத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தே ஜனாதிபதி உரையாற்றுவார்.

அந்த ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலட்சியையே அகற்றப்படவுள்ளது.

ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும், ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகமாக பரவத் தொடங்கியுள்ள ஒமிக்ரோன் துணை மாறுபாடு

ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு பிஏ.5 தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரிக்கையை விடுத்துள்ளார்

தற்போது தொற்றுநோயின் மிகப்பெரிய கொரோனா அலைகளில் ஒன்று உலகத்தை பாதித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜீவந்தர, இது, நோயெதிர்ப்பு தவிர்க்கும் கொரோனா வைரஸ் விகாரங்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய பிஏ.5 தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின்எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவும் குறைந்தபட்சம் மூடிய அறைக்குள் முகக்கவசங்களை அணியவேண்டும் என்றும் சந்திம ஜீவந்தர கோரியுள்ளார்.