மஹிந்தவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றார்.

மே – 09 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர், பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றாலும் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. கட்சி தலைமையகமும் செல்லவில்லை. கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு, அரசியல் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

இலங்கையில் உச்சம் தொட்டது பணவீக்கம்!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பணவீக்கமும் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு எனப்படும் உணவிற்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாத இறுதியில் 93.7% வரை அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதுதான் நிலைமை மிகமோசமாக உள்ளது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘போனால் போகட்டும் போடா’ – டலஸ் அணியை வறுத்தெடுக்கிறது மொட்டு கட்சி!

” டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 எம்.பிக்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது.” – என்று நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” எதிரணி பக்கம் சென்றவர்களில் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவானவர்களே அதிகம், அவர்களின் வெளியேற்றத்தால் கட்சிக்கு தாக்கம் இல்லை. தவிசாளர் எனக் கூறிக்கொள்ளும் பீரிஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவர் எமது கட்சி செயற்பாட்டில் பங்கேற்பதில்லை. விரைவில் கட்சி சம்மேளனம் நடைபெறும். அதன்போது இவர்கள் நீக்கப்படுவார்கள்.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்து!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு எமனானது தந்தை பறித்த தேங்காய்!

தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்ததால் மகன் சம்பவ இடத்திலேயே பலியான பெருந்துயர் சம்பவமொன்று நமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நமுனுகுல, மியனகந்துர மகா வித்தியாலயத்தில்
10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் எச்.எம்.சமீர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மாலை 6.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளியில் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோதே மகனுக்கு இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.

தாமரை கோபுரத்துக்குள் நுழைய ரூ. 2000!

இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த
கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின்
செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு
லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்
கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி
முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் அமெரிக்கடொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின்
கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர்
நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு
பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை
அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய
தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார்நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க
தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee
jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு
முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200
மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக்
கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும்
முடியும். நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை
2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க
டொலர்களாகும்.

அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை
அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

10.5 ஏக்கர் நிலப்பரப்பில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 58
முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 15 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிவரை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாமரைக்கோபுர செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாகமுன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub)
மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல
முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம் , அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப்பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை
வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு
அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாகஇயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும் மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்தை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மருதானையில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முடிவு!

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார்.

இந்த தீர்மானத்தை வலுவற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாட்டை நீதிமன்றில் அறிவித்தார்.

விஜித் மல்லல்கொட, எல்.ரீ.பி. தெஹிதெனிய மற்றும் முருது பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று (30) ஜனாதிபதியின் நிலைப்பாட்டை வினவியபோது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தனது கையொப்பத்தை, இனிமேல் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளதா என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதியரசர் குழாமின் தலைமை நீதியரசர் விஜித் மலல்கொட மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர் குழாம், இந்த மனுக்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் திகதி ஆராய தீர்மானித்தது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளின் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு தாம் கையொப்பமிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஜூன் 26 அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் இந்தத் தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கைதிகளைப் பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதியின் முடிவு அரசாங்க கொள்கைக்கு எதிரானது என்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த்து. மேலும், இது சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரானது, நியாயமற்றது என்றும் மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுக்கள் ஊடாக நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

நீர் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன. 

பணம் கொடுக்க மறுத்த தாயின் கழுத்தை நெறித்த மகன் கைது!

தான் கேட்ட பணத்தை தாய் கொடுக்காததால் ஆத்திரமுற்ற மகன், தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்யபோவதாக மிரட்டிய சம்பவமொன்று திரப்பன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், தாய்க்கு சொந்தமான ஆட்டோவையும் தீவைத்து கொளுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 42 வயதான மகன், திரப்பன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தாய், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.

ரூ. 15 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது!

15 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியின்றிய வர்த்த வளாகமொன்றின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

6 கிலோ 995 கிராம் நிறையுடைய 60 தங்க பிஸ்கட்களை சந்தேகநபர் விமான நிலையத்திலிருந்து வௌியே கொண்டுசெல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ஜா-எல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

பல்கலை மாணவர்கள்மீது பாயுமா பயங்கரவாத தடைச்சட்டம்?

” கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” – என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த ஏதேச்சதிகார செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டம் நடத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதனை ஒடுக்க முற்படுவது ஜனநாயக விரோதச்செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் திட்டம் உள்ளதா..” என சஜித் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர்,

” அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை எமது அரசாங்கம் பாதுகாக்கும். உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. தனி நபருக்குரிய உரிமை, ஏனையவர்களின் உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும். ” – என்றார்.

யாழ். பல்கலை மாணவர்கள் சீனாவுக்கு எதிராகப் போர்க்கொடி

யாழ். பல்கலைக்கழகத்துக்கும், சீன விவசாயப் பல்கலைக்கழகத்துக்குமிடையில் இடம்பெறவிருந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு மறு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒத்திவைக்கப்பட்டதாக சீனத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் ருவிட்டரில் கருத்துத் தெரிவித்ததை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சலசலப்பின் வெளிப்பாடாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிற்போடப்பட்டது என அறியவருகின்றது.

மாணவர்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான எதிர்ப்புணர்வு காரணமாக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

சீன விவசாயப் பல்கலைக்கழகத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடம் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான நிகழ்வு நேற்றுக் காலை 10 மணியளவில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அதுவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் இங்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சீனாவிலும் ஆய்வு செய்வதற்குரிய வகையிலேயே கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘காகத்தின் கூட்டில் குயில் முட்டையிடுவதுபோலவே மொட்டு ஆட்சியில் ரணிலின் பட்ஜட்’

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இடைக்கால வரவு – செலவு திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” காகத்தின் கூட்டில்தான் குயில் முட்டையிடும். சிறிதாக இருக்கும்போது, குயிலும் காகம்போல இருக்கும். வளர, வளரதான் பிரச்சினை ஆரம்பமாகும். குயில் விரட்டியடிக்கப்படும்.
மொட்டு கட்சி ஆட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள பாதீடும், காகத்தின் கூட்டியில் குயில் முட்டை கதைபோல்தான். பாரிய ஆபத்து காத்திருக்கின்றது.

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது. அவரின் சில திட்டங்களுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தருணம்வரும்போது வேலையைக் காட்டுவார்கள்.

நாட்டு பொருளாதாரத்தை ராஜபக்சக்கள் சீரழித்துவிட்டனர். ஒருவரிடம் ஒரு லட்சம் சேமிப்பு இருந்தால் அதன் தற்போதைய பெறுமதி 30 ஆயிரம் ரூபாதான். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கைதியாகவே ஜனாதிபதி இருக்கின்றார்.” – என்றார் ஹர்ஷ டி சில்வா.

உடைந்தது மொட்டு கட்சி – 13 எம்.பிக்கள் வெளியேற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் முக்கியமான 13 எம்.பிக்களே இவ்வாறு, ஆளுந்தரப்பில் இருந்து வெளியேறி, எதிரணி பக்கம வந்து, சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தமது அணி ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தது, அதற்கான காரணங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்களை விபரித்தார். விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள மொட்டு கட்சி எம்பிக்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். இதனால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.

சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டு கட்சி எம்பிக்கள் விபரம்

 1. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
 2. டலஸ் அழகப்பெரும
 3. பேராசிரியர் சன்ன ஜயசுமன
 4. பேராசிரியர் சரித ஹேரத்
 5. கலாநிதி நாலககொடஹேவா
 6. கலாநிதி குணபால ரத்னசேகர
 7. வைத்தியர் உபுல் கலப்பதி
 8. வைத்தியர் திலக் ராஜபக்ச
 9. சட்டத்தரணி டிலான் பெரேரா
  10.சட்டத்தரணி உதயன கிரிந்திகொட
  11.சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார
  12.கே.பி.எஸ். குமாரசிறி
 10. லலித் எல்லாவல

ஆர்.சனத்

பாதீடு குறித்து கூட்டமைப்பு அதிருப்தி!

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது செலவினங்களை குறைப்பதே நோக்கமாக கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் வற் வரி அதிகரிப்பு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதுடன், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணங்களும் இந்த வரி அதிகரிப்பினூடாக கிடைக்காது போகலாமென்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

” வரவு செலவுத் திட்டத்தில் வற் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வழங்கப்படும் சலுகைகள் இந்த வரி அதிகரிப்பின் ஊடாக இல்லாமல் போய்விடும்.

இது நேரடியான வரி அல்ல என்பதனால் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும். ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இதில் இல்லை. அதன்படி வறுமை நிலைமையில் உள்ளவர்களுக்கு இதில் சலுகை கிடைக்கப் போவதில்லை.

அதேவேளை செலவினங்களை குறைப்பதே இந்த வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.ஆனால் பாதுகாப்பு செலவினம் இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தை விடவும் அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைக்கப்பட வேண்டிய முக்கியமான செலவினங்கள் குறைக்கப்படவில்லை.

குறிப்பாக அனைவரையும் பாதிக்கும் மறைமுக வரிகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரி அதிகரிப்பால் அந்த நிவாரணங்களும் கிடைக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மொட்டு கட்சி எதிர்க்கும் 80 வீத திட்டங்கள் ரணிலின் ‘பட்ஜட்’டில்! எப்படி திட்டங்கள் நிறைவேறும்?

அதிக வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் தொடர்பில் அதிகரித்த வரி அறவிடும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வரிக்கொள்கையால் குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரும் என குறிப்பிட்ட அவர், அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி அறவிடும் வகையில் வரிக்கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

” நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டத்தை தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்ட யோசனையாக முன்வைத்துள்ளார்.

நாம் முன்வைத்துள்ள பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சி எதிர்ப்பு தெரிவித்த விடயங்களே நூற்றுக்கு 80 வீதமாக இதில் காணப்படுகிறது. அதனால் இதனை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதே பிரச்சினையாக உள்ளது.

ஜனாதிபதி அறிவித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாமே ஆரம்பத்திலிருந்து கூறி வருகின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு 2020இல் நாம் தெரிவித்திருந்தோம். ஆனால் தமது சடலங்களுக்கு மேலாகவே செல்லவேண்டிவரும் என பொதுஜன பெரமுன கட்சியினர் தெரிவித்து வந்தனர். அதனால்தான் நாடு தற்போது அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. எனினும் தற்போது இந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி முன்வைத்துள்ள வரிக்கொள்கையில் எமக்கு பூரணமாக இணங்க முடியாது. வற் வரி 12வீதத்தில் இருந்து 15வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் வருமான வரியாக நூற்றுக்கு இரண்டரை வீத வரி அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வரி நூற்றுக்கு 20வரை அதிகரிக்கப்படுகின்றது. இந்த வரியால் குறைந்த வருமானம் பெறுபர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அதிக இலாபம் பெறுபவர்களிடம் அதிக வரி அறவிடும் வகையில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும். என்றே நாம் எதிர்பார்த்தாேம். அதனால் இந்த வரிகொள்கை தொடர்பில் எமக்கு திருப்தியடைய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதீடுமீது இன்று முதல் விவாதம் – 2 ஆம் திகதி வாக்கெடுப்பு!

2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாகின்றது.

செப்டம்பர் 02 ஆம் திகதிவரை 2 ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புகள்மீதான விவாதம் தொடரும். 2 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு இடம்பெறும்.

2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.

விக்னேஸ்வரனுக்கு பைத்தியம் – பொன்சேகா காட்டம்!

” புலிகளுக்காக குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கப்பட்டதுபோல, புலிகள்மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாரே… என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பொன்சேகா இவ்வாறு காட்டமாக பதிலளித்தார்.

” புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா, அவருக்கு வயதுபோய் விட்டது, நீதியரசர் பதவியை வகித்த ஒருவர் அவர். எதற்காக இப்படி கதைக்கின்றார், அவருக்கு பைத்தியமாக இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

சனத் நிஷாந்தவுக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்!

திமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(30) மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி விஜித் குமாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெயரிடப்பட்டுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(29) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.