வடக்கில் எயிட்ஸ் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

வடக்கில் இவ்வருடத்தில் ஆரம்பம் முதல் எயிட்ஸ் (AIDS) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பாலியல் நோய் மற்றும் HIV தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார்.

அதிகரித்த போதைப்பொருள் பாவனையும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 11 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நோயாளிகளுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் பல சவால்கள் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

 

 

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகம் – உதவி கோருகிறார் ரணில்!

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (ADB)முன்மொழிந்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa-வை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கடந்த காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரிடம் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டுக்குள் புகுந்து மனைவியின் தங்க சங்கிலி அறுப்பு

வாதுவ,  பொத்துபிட்டியவிலுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நபரொருவர்,  குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

கொள்ளையன் வீட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் கான்ஸ்டபிளின் மனைவி குளியலறையில் இருந்துள்ளார். ஏதோ கேட்பது போல் திடீரென குளியலறைக்குள் புகுந்த கொள்ளையன் கான்ஸ்டபிளின் மனைவி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பகல் இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நால்வர் கைது!

17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7 கிலோ 500 கிராம் எடையுடைய 16 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.
சூட்சமமான முறையில் தங்கள் பயணப்பையில் தங்கத்தை மறைத்துக் கொண்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
அத்துடன் குறித்த விமானத்திலேயே இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்..
கைது செய்யப்பட்டவர்களைக் கட்டுநாயக்கப் பொலிஸாரிடம் ஒப்படைக்கச் சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு குமார வெல்கம அறைகூவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ஹெரோயினுடன் வவுனியாவில் இருவர் கைது!

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வவுனியாவில் பல்வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தோணிக்கல், கோயில்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளிலே ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

தோணிக்கல் பகுதியி்லிருந்து 219 மில்லி கிராம் ஹெரோயினும், கோயில்குளம் பகுதியிலிருந்து 129 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

ஹெரோயினை வைத்திருந்த 51, 44 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு!

யாழ்ப்பாணத்தில், திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் மாதம் 20,21ஆம் திகதிகளில் யாழ் மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால், மாநகரசபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்கு கடைகளில் திகதி காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டன,

அத்துடன் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் ஓர் கடையில் திகதி காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கினை விசாரித்த நீதவான் 11 கடை உரிமையாளர்களிற்கும் மொத்தமாக 185,000/= தண்டப்பணம் அறவிட்டு தீர்ப்பளித்தார்.

யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை ‘சீல்’!

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.

யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து 09.09.2022 அன்று யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டது.

அதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடாத்துனருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களால் மீண்டும் 28.09.2022ம் திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிற்றுண்டிசாலை நடாத்துனரிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் மன்றில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சிற்றுண்டிச்சாலை நடாத்துனர் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்டதையடுத்து 60,000/= தண்டம் நீதிமன்றால் விதிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிசாலையினை சீரமைக்கும் வரை சீல் வைக்குமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலை மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டது.

மர்ம ட்ரோன்கள் பறந்ததால் அச்சம்! நோர்வேயில் எரிசக்தி மையங்களுக்கு பாதுகாப்பு!!

நோர்வே நாட்டின் மின் மற்றும் எரிபொருள் மையங்கள் மீது மர்மமான முறையில் சில ட்ரோன்கள் பறந்துள்ளன என்று அந்நாட்டின் நீர் மற்றும் எரிசக்தி இயக்குநரகம் (Water and Energy Directorate – NVE) தெரிவித்திருக்கிறது. அதனையடுத்து டென்மார்க் ஊடாக போலந்துக்கு எரிவாயுவை விநியோகிப்பதற்காக அண்மையில் நிறுவப்பட்ட கடலடிக் குழாய்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகடலில் உள்ள நோர்வேயின் இயற்கை எரிவாயு வயல்களில் இருந்து எரிவாயுவை போலந்துக்கு விநியோகிப்பதற்காக நிறுவப்பட்ட குழாய் இணைப்பு டென்மார்க்கின் ஜூலான்ட் (Jutland) ஃபுனென் (Funen) ஷீலான்ட் (Zealand) வழியாக பால்டிக் கடலுக்குள் சென்று பின்னர் போலந்து நாட்டை அடைகின்றது. நோட் ஸ்ட்ரீம் குழாய்கள் தகர்க்கப்பட்டிருப்பதை அடுத்து நோர்வே அதிகாரிகள் தங்கள் பால்டிக் கடல் குழாய் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம ட்ரோன் பறப்புகள் அவதானிக்கப்பட்டிருப்பது அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ட்ரோன்கள் எங்கே, எப்போது அவதானிக்கப்பட்டன என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பால்டிக் கடலில் நோட் ஸ்ட்ரீம் குழாய்களில் மர்மமான வெடிப்பு நிகழந்திருப்பதை அடுத்து நோர்வேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகிய Equinor நாட்டில் உள்ள அதன் எரிசக்தி நிலையங்களது பாதுகாப்பு அளவை அதிகரித்திருக்கிறது. அதேசமயம் பால்டிக் கடல் ஊடாகச் செல்லுகின்ற நோர்வேயின் எரிவாயுக் குழாய்கள் தொடர்பில் கவலை எழுந்துள்ளது.

நிலைமையின் விரிவாக்கத்தைப் பொறுத்து நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்கு நேட்டோவின் உதவி கோரப்படலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை என்று நோர்வே பாதுகாப்பு அமைச்சர் பியோன் ஆறில்ட் கிராம் (Bjørn Arild Gram) தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, வட கடலில் உள்ள டெனிஷ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்கள் மீதும் (Halfdan B) புதன்கிழமை அனுமதிக்கப்படாத ட்ரோன்கள் பறந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

‘ரிக்ரொக்’கால் வந்த வினை – 10 சிறுமிகள் யாழ் வைத்தியசாலையில் சேர்ப்பு!

யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 16 சிறுவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் பெற்றுவருகின்றனர் .

அவர்களில் 10 பேர் சிறுமிகள் . இவர்கள் ரிக்ரொக் செயலியைப் பயன்படுத்தி காலப்போக்கில் அதற்கு அடிமையாகி , பின் அதன்மூலம் காதல் வயப்பட்டு உளநலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதர 6 சிறுவர்கள் , நாளின் கணிசமான பகுதியை அலைபேசிக்குள் தொலைத்துக் கொண்டவர்கள் . அலைபேசிப் பயன்பாட்டில் இருந்து மீளமுடியாத நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் .

அதீத அலைபேசிப் பாவனை தொடர்பில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது :

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற அதேநேரம் தொலைபேசிப் பாவனையும் அதன் ஆபத்துக்களும் மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களையும் சிறுவர்களையும் விழுங்கி வருகின்றது .

அலைபேசிப் பாவனையால் சிகிச்சை பெறும் 16 பேர் இந்த வருடத்தில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களே , அத்துடன் இந்தப் பிரச்சினைக்குத் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகமிகக் குறைவே .

எனவே அலைபேசிப் பாவனையால் தம் உளநலத்தைத் தொலைத்த மாணவர்கள் சமூகத்தில் இன்னும் பல மடங்கு இருக்கலாம் . பெற்றோர் தமது பிள்ளைகளின் அலைபேசிப் பாவனை தொடர்பில் உச்சபட்சக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனர் .

யாழ். வைத்தியசாலை வளாகத்தில் கைபேசிகளை கொள்ளையிட்டு வந்த இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தொடர் கைபேசித் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நாவற்குழியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்றும், அவரிடம் இருந்து 23 கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திருடப்பட்டவை என்று கூறப்படுகின்றது.

சந்தேகநபர் மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைக்குச் வருவோரிடம் இருந்து கைபேசிகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவர் என்று கூறப்படுகின்றது.

பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ரணிலின் நாடகத்தை அம்பலப்படுத்தும் அநுர!

” சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசியப் பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்த பேரவை பயனற்றதாகும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. மறுபுறத்தில் தனக்கு தேவையான அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் தேசியப் பேரவை எதற்கு? பெயரளவில் மட்டுமே அது இருக்கப்போகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. தற்போதைய அரசாங்கமும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனர். எனவே, சர்வதேச மட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே ஆளுங்கட்சி தேசிய பேரவையை பயன்படுத்த முயற்சிக்கின்றது.” – என்றார்.

போராட்டக்காரர்களை பழிதீர்க்கவா புனர்வாழ்வு சட்டமூலம்?

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிடப்படுவதாக சிவில், அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி, நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள், நாசகார செயலில் ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செய்வதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பணியகத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், முகாமைத்துவம் என்பவற்றுக்கு சபையொன்றை ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்புக் கல்வி , சுகாதாரம் , புனர்வாழ்வு உள்ளிட்ட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் அதற்கென நியமிக்கப்படவுள்ளனர்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் அதில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய விமானப்படை, கடற்படை, இராணுவத்தின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பிற்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்ற உத்தரவின்றி குறித்த பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடுவதாக அமையும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழி தவறிய போராளிகளுக்கு புனர்வாழ்வு என முன்னுரையில் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட வரையறை எதுவும் உள்ளடக்கப்படாமையின் காரணமாக கடந்த கால தவறுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூட புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் , அமைதியான போராட்ட சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் நசுக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலமே நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதயசுத்தியுடன் தீர்வு திட்ட பேச்சை ஆரம்பிக்கவும்! ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை!!

‘நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம்; அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம்’ என்று கூறி தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் இலங்கை அரசு நடத்த வேண்டும்.

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதில் முதன்மையானது தேசிய இனப்பிரச்சினை.

1949ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தீர்வு விடயம் சம்பந்தமாகத் தமிழ்த் தரப்பினர் திறந்த மனதுடன் இலங்கை அரசுகளுடன் பேச்சை நடத்தியுள்ளனர்; ஒப்பந்தங்களையும் செய்துள்ளனர்.

கொழும்பிலும், சென்னையிலும், டில்லியிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பேச்சுக்களின்போது நியாயமான கோரிக்கைகளை இலங்கை அரசுகளிடம் தமிழ்த் தரப்பினர் முன்வைத்திருந்தனர்.

ஆனால், அந்தக் கோரிக்கைகள் இலங்கை அரசுகளால் நிராகரிக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இலங்கை அரசுகளால் கிழித்தெறியப்பட்டும் உள்ளன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் தீர்வு விடயம் தொடர்பில் 17 சுற்றுப் பேச்சுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தியிருந்தனர்.

18 ஆவது சுற்றுப் பேச்சுக்குச் சென்ற நாம், காத்திருந்து ஏமாந்து வந்தோம். அந்தப் பேச்சு மேசைக்கு மஹிந்த அரசு வரவில்லை.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசில் தீர்வுக்கான பேச்சை முன்னெடுக்கப் பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் சதியால் அவையும் தோல்வியும் முடிவடைந்தன.

ஆனபடியால், ‘நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம்; அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம்’ என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி மேலும் எங்களைக் காத்திருக்க வைக்காமல், ஏமாற்றாமல் ஒரு முறையான ஒழுங்கின் பிரகாரம் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்; பிரச்சினைகளுக்கு விரைந்து நியாயமான தீர்வைக் காண வேண்டும்.

பிரச்சினைகளை அரசு விரைவாகத் தீர்க்காவிட்டால் உள்ளக சுயநிர்ணய உரிமை எமக்கு மறுக்கப்படுகின்றது என்றே அர்த்தம். அதன் நிமித்தம் வெளியக சுயநிர்ணய உரிமையை நாங்கள் நாட வேண்டி வரும்” – என்றார்.

 

மக்கள் எழுச்சியை மறந்துவிட்டது அரசு – நினைவூட்டுகிறது சஜித் அணி!

” மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசாங்கம் செயற்படுகின்றது. பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, அரசியல் நடத்தப்படுகின்றது. எனவே, தேசியப் பேரவையை புறக்கணிக்கும் முடிவையே எமது கட்சி பெரும்பாலும் எடுக்கும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியல்ல நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குறுகிய காலத்துக்கு அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும், அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட வேண்டும், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உட்பட முக்கிய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஒரு அங்கமே தேசியப் பேரவையாகும்.

தேசியப் பேரவை அமைப்பதற்கே 3 மாதங்கள் எடுத்துள்ளன. அதற்கிடையில் ஆளுங்கட்சி அரசியலும் நடத்திவருகின்றது. அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். போராட்ட காலத்தில் இருந்த அக்கறை தற்போது அரசாங்கத்திடம் இல்லை. எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக அது கருதுகின்றது.

குறிப்பாக கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிகள் வழங்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்தார். தற்போது முடியாது என்கிறார். எனவே, தேசியப் பேரவை குறித்தும் எமக்கு ஐயப்பாடு உள்ளது. எனவே, அதனை புறக்கணிக்கும் முடிவையே கட்சி பெரும்பாலும் எடுக்கும்.” – என்றார்.

 

போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை ஒழிக்கவும் – யாழில் பேரணி!

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ். பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக சுண்டுக்குளிச் சந்தியை அடைந்து பழைய பூங்கா வீதியூடாக யாழ். மாவட்ட செயலகத்தை அடைந்தது.

இதன்போது யாழ். மாவட்ட செயலர் க.மகேசனுக்கு யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
இந்தப் பேரணியின் போது யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

‘உக்ரைன் போரால் பொருளாதார நெருக்கடி உச்சம்’

கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று (29) காலை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான அமர்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் ஆர்.மார்கஸ் ( ஜூனியர்) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை குறைத்துள்ளதுடன், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் வசிக்கும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கடனை நிலைநிறுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஆழமான மற்றும் அழுத்தமான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப சமூகப் பாதுகாப்பிற்கு அதிக நிதி மற்றும் வளங்களை ஒதுக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

எமது பொருளாதாரத்தை இன்று நாம் ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் எவ்வாறு இந்த நெருக்கடியை தீர்க்கிறோம் என்பதை பல நாடுகளைப் போலவே பங்குதாரர்களும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.’’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் ஷோபினி குணசேகர மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மதிய விருந்து வழங்கினார். இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

வவுனியாவில் விபத்து – வயோதிபர் பலி!

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்தார்.

இன்று பிற்பகல் மன்னார் வீதியூடாகச் வந்து கொண்டிருந்த வயோதிபரை அதே திசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் நோயாளர் காவு வண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (வயது 68) என்ற வயோதிபரே மரணமடைந்தார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகப் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மார்ச்சில் நாடாளுமன்றை கலைப்பாரா ஜனாதிபதி?

” எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது.” – என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை.

எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும்.

நவம்பர் மாத நடுப்பகுதியின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொலையாளியை காட்டிக்கொடுத்தது DNA பரிசோதனை!

இரத்தினபுரி , எஹலியகொட பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியொருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், மரபணு (DNA) பரிசோதனையின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பலிகல பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று எஹலியகொட பொலிஸார் தெரிவித்தார்.

எஹலியகொட, கொஸ்கஹமுகலன பகுதியில் பாடசாலை முடிவடைந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் அவிசாவளை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே, சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.