அரசுமீது 10 சதவீத மக்களே நம்பிக்கை – அதிர்ச்சி தரும் கருத்து கணிப்பு!

“ நாடு நினைக்கும் விதம்” என்ற தலைப்பின்கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில்,  ஒக்டோபர் மாத முடிவின் பிரகாரம், தற்போதைய அரசுமீது 10 சதவீத மக்களே நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் அரசின் செயற்பாடுகள் குறித்து 7 சதவீதமானோரே  திருப்தியடைந்துள்ளனர்.  

   “வெரிடே ரிசேர்ச்” என்ற ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

காணி சுவீகரிப்புக்கு எதிராக புதனன்று போராட்டம் – யாழ். பல்கலை மாணவர்கள் அறைகூவல்

வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஊடக சந்திப்பை நடத்தி அழைப்பு விடுத்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,

“எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்துக்காகவும் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பை இதன்போது விடுக்கின்றோம்.
கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் எமது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரையும் கட்சி, பேதமின்றி இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுக்கின்றது” – என்றனர்.

இந்த ஊடக சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அ. விஜயகுமார், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். றொபின், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சி.ஜெல்சின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று நள்ளிரவு ஆறுதல் பரிசு….

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை, இன்று நள்ளிரவு முதல் பத்து ரூபாவால் குறைக்கப்படுமென பேக்கரி உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் குறைகின்றது. இதற்கு சமாந்தரமாக ஏனைய கோதுமை உற்பத்தி பொருட்களின் விலையையும் 10 ரூபாவால் குறைக்கும்படி பேக்கரி உரிமையாளர்களிடம் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சூரன் போரில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்! யாழில் பயங்கரம்!!

சூரன் போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை கிழக்கு, சித்தங்கேணியைச் சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகியோரே வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கரத்தை, பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று மாலை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.அதன்போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் தர்க்கம் ஏற்பட்டது. தர்க்கம் கைக்கலப்பாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்தது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வர்த்தக வலயத்தில் உரிமைகளை குறைக்கும் செயற்பாடு தொடர்கிறது

இலாபம் ஈட்டும் தொழிற்சாலைகளின் தொற்றுநோய்களின் போது குறைக்கப்பட்ட உரிமைகளை பொருளாதார நெருக்கடியிலும் இழப்பதற்கு எதிராக சுதந்திர தொழிற்சங்கங்கள் களமிறங்கியுள்ளன.

“கொவிட் நெருக்கடியின் போது, குறிப்பாக தனியார் துறை ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டன. அடிப்படையில் அத்தியாவசிய சேவையாக அவர்களிடமிருந்து உழைப்பு பெறப்பட்டது. ஆனால் பாதி ஊதியமே கொடுக்கப்பட்டது. மேலதிக நேர கொடுப்பனவுகள், வருகை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. ஊழியர்களில் பாதி பேர் மாத்திரமே வேலைக்கு அழைக்கப்பட்டனர். பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போது பொருளாதார நெருக்கடியிலும் அதேதான் நடக்கிறது,” என்கிறார் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் (FTZGSEU) இணைச் செயலாளர் லலித் கருணாதிலக.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலாபம் தேடும் முதலாளிகள் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க இணங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தொழிலாளர் உரிமைகளை இல்லாமல் செய்வதை நிறுத்தி, கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் இழந்த கொடுப்பனவுகளை வழங்குமாறு உலகப் புகழ்பெற்ற “அடிடாஸ்” போன்ற நாமங்களை கொள்வனவு செய்வோர் மற்றும் உள்ளூர் முதலாளிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.”

பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் மேலதிக நேரம், போக்குவரத்து வசதிகள், ஊக்கத்தொகைகள், ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை குறைத்து அடிப்படை சம்பளத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக FTZGSEUஇன் இணைச் செயலாளர் குறிப்பிடுகிறார்.

“பொருளாதார நெருக்கடியை அடுத்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கொள்வனவாளர்களும் முதலாளிகளும் இலாபம் அடைந்தனர்.”

தொழிற்சங்கங்களால் வென்றெடுக்கப்பட்ட 10,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை சில நிறுவனங்கள் குறைக்கும் சூழ்நிலையில் “மேன் பவர்” தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வலய தொழிற்சங்க இணைச் செயலாளர் கருணாதிலக சுட்டிக்காட்டுகிறார்.

“நெருக்கடி காணப்படுவதாக தெரிவித்து, தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து இழப்பீடு வழங்காமல் பணிநீக்கம் செய்து, கொடுப்பனவுகளை நீக்கி, எங்கள் ஊதியத்தை குறைத்து, முதலாளிகளுக்கு சலுகை கொடுத்து, தொழிலாளர்களுக்கு வரி விதிக்கின்றார்கள். ” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தக வலய ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

‘முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல்’ – வேலுகுமார் காட்டமான அறிவிப்பு

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைத்துவங்கள் தன்னிச்சையான முறையிலும், ஏதேச்சாதிகாரமாகவும் செயற்பட்டால் கூட்டணி குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி அலை உருவாகி, இறுதியில் அது ஆபத்திலேயே முடியும். எனவே, விட்டுக்கொடுப்புகளுடன் ஜனநாயக வழியில் பயணிப்பதற்கு தலைமைகள் முன்வர வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும்கூட.”

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அடக்கி ஆளும் தனிக்காட்டு ராஜா அரசியலை மலையக மக்கள் நிராகரிக்கின்றனர். கொள்கை ரீதியிலான அரசியலையே அவர்கள் விரும்புகின்றனர். அதன்காரணமாகவே உரிய கொள்கைகளுடன் உதயமான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். எனவே, மக்களின் மனநிலை என்ன, அவர்கள் எதிர்பார்ப்பது எத்தகைய அரசியல் என்பதை புரிந்துகொண்டே – தவறுகளை திருத்திக்கொண்டு பயணித்தால் மாத்திரமே மக்கள் மத்தியில் நீடித்து நிலைக்க முடியும். எனவே, மக்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான வழிகாட்டலையே தலைமைத்துவங்கள் வழங்க வேண்டும். ஜனநாயக பண்புகளுக்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் பின்னடைவு ஏற்படும்.

தென்னிலங்கையில் இருந்த இரு பிரதான கட்சிகள்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன. இவ்விரு கட்சிகளின் நிலையும் இன்று கவலைக்கிடமாக உள்ளது. காரணம் தலைமைத்துவங்களின் தன்னிச்சையான முடிவும், மக்களின் மனநிலை அறியாத செயற்பாடுகளுமே.

எனவே, மலையக மக்கள் விரும்பும் – ஏற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளித்துவிடக்கூடாது.” – என்றார் வேலுகுமார்.

” தொற்றா நோய்களால் நாட்டில் 83 வீத மரணங்கள்”

நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்ற போதிலும், அநேகமானோர் அதிகளவான உப்பை சேர்ப்பதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்பிற்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதி ஆகிய இரு தினங்கள் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம், இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தமாக இன்று முதல் (31) அமுலுக்கு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலை பிற்போட அரசு முயற்சி! எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!!

” ஈரானில் இருந்த அழுக்கு மனிதன் குளிப்பதற்கு அஞ்சியதுபோல, தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கமும் அஞ்சுகின்றது. ஆனால், ஈரான் மக்கள் ஒன்றுகூடி அழுக்கு மனிதனை குளிப்பாட்டியதுபோல, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கும்.”

இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு கூறினார்.

” திட்டமிட்ட அடிப்படையில் உள்ளாட்சி சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் ஓர் அங்கமாகவே தெரிவுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

ஈரானில் வாழ்ந்த நபரொருவர் 5 சதாப்தங்கள்வரை குளிக்கவில்லை. ஏனெனில் தலையில் தண்ணீர் பட்டால் இறந்துவிடுவோம் என அவர் நம்பியுள்ளார். இறுதியில் உலகம் அவரை, அழுக்கான மனிதன் என அடையாளப்படுத்தியது. அதுபோலவே தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கமும் அஞ்சுகின்றது. அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் டலஸ் குறிப்பிட்டார்.

‘போதைப்பொருள் கடத்தலின் மையமாக வடக்கு’ – நீதி அமைச்சர் பகீர் தகவல்!

“ இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் உயிர்கொல்லி போதைப்பொருளை கடத்துகின்ற – விநியோகிக்கின்ற மையமாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது.”

– இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவரது அமைச்சு ஊடாக முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவையில் கலந்துகொள்ள வந்துள்ள அமைச்சர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை – விற்பனை வடக்கில் – யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. எனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது இது தொடர்பிலும் ஆராயவுள்ளளேன். பொலிஸார் உள்ளிட்ட பொறுப்புக்கூறும் சகல தரப்பினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளேன்.

வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் உயிர்கொல்லிப் போதைபொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதால் மிகப்பெரும் சமுதாயப் பிரச்சினை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெருமளவான உயிர்கொல்லி போதைப்பொருள் முகவர்கள் வடக்கு மாகாணத்தின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் உயிர்கொல்லி போதைப்பொருளைக கடத்தி வருகின்றனர்.

இதனை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்” – என்றார்.

வழக்குக்காக சென்ற இருவர் சுட்டுக்கொலை! ஹிக்கடுவையில் பயங்கரம்!!

ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை – திராணகம பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

முற்போக்கு கூட்டணிக்குள் ‘ஜீவன்’ சூறாவளி! கூட்டணி உடையும் அபாயம்!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் பங்கேற்றதை பலரும் வரவேற்று, “மலையக அரசியலில் இது புதிய திருப்பம்…” என பாராட்டிவரும் நிலையில், முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பீடத்துக்கு அறிவிக்காமல் – அனுமதி பெறாமல், இ.தொ.காவினருக்கு அழைப்பு விடுத்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தன்னிச்சையான முடிவு, ‘கூட்டணி ஒன்றுமை’க்கு ஆரோக்கியமானதல்ல என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார் என தெரியவருகின்றது.

தலைமையக திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து கூட்டணிக்குள் முன்கூட்டியே கலந்துரையாடப்பட்ட நிலையில், இ.தொ.காவினரை அழைப்பது குறித்து ஏன் அறிவிக்கப்படவில்லை எனவும் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

” திறப்பு விழாவுக்கு காங்கிரஸை அழைப்பது பிரச்சினை இல்லை, ஆனால் பொது விடயங்களின்போது கூட்டணிக்குள் தன்னிச்சையான முடிவு ஏற்புடையது அல்ல. இது தொடர்பில் உரிய தரப்புகளிடம் விளக்கம் கோரப்படும்.” – என ராதாகிருஷ்ணன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழா ஹட்டனில் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழா முடிவும்வரை ராதாகிருஷ்ணன் மேடையில் இருக்கவில்லை. ஆலய நிகழ்வு எனக்கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் அகழ்ந்த மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று டிப்பர்கள் மற்றும் ஒரு பெக்கோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், இச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

முன்னாள் போராளிகளிடம் தகவல் திரட்டப்படுவது ஏன்?

” முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும்.”

– இவ்வாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாகச் செய்திகள் வந்துள்ளன. என்ன நோக்கத்துக்காக இந்தத் தகவல்கள் திரட்டப்படுகின்றன என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர்.

இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அத்தோடு வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்குத் தெளிவூட்டல் பெற்றுக்கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனில் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.

அண்மையில் கொழும்பில் வெள்ளத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிஸார் தகவல் திரட்டுகின்றனர் எனவும், அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பகிரங்கமாகக் கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாகவும் கூறியிருந்தார்.

இது இவ்வாறு இருக்க தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும். இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயகச் செயற்பாட்டை மட்டுப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச் சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும் மக்களின் எதிர்ப்பும் சட்டச் சிக்கலும் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்தச் சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?

தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாகப் பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசுக்கு எதிரான வீதிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரையும் விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?

இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான மாற்று அரசியல் செயற்பாட்டையும் அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தைக் கூடப் பாதிக்கும்.

அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாகப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களைத் திறந்த வெளி புனர்வாழ்வு கிராமங்களாக்கவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்” – என்றுள்ளது.

இரட்டை குடியுரிமையை கைவிடுவாரா பஸில்? வெளியான அறிவிப்பு!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, இரட்டைக் குடியுரிமையைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லை.” – என்று மொட்டு கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்ததாலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை. நான் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயம் ஆதரவாக வாக்களித்திருப்பேன். ஏனெனில் 19 ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் வர வேண்டும் என எமது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார்.

இரட்டை குடியுரிமை தடையால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வரும்போது அது தொடர்பில் பஸில் ராஜபக்சவிடம் கலந்துரையாடினேன். இதன்போது, இரட்டை குடியுரிமையை கைவிடும் முடிவை நான் தற்போதே எடுக்கப்போவதில்லை, எனவே, 22 குறித்து நீங்கள் முடிவை எடுங்கள். இது விடயத்தில் என்னை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

இரட்டை குடியுரிமை இருந்தபோதுதான் முக்கிய தேர்தல்களை பஸில் ராஜபக்ச வழிநடத்தினார். தற்போது வழிநடத்துகின்றார்.
மக்கள் போராட்டத்தை சிலர் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டனர். எமது தரப்பிலும் சில தவறுகள் இருந்திருக்கலாம். அவற்றை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்வோம்.” – என்றார்.

தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 140 பேர் பலி! குஜராத்தில் சோகம்!!

இந்தியா, குஜராத், மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 130 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26 ஆம் திகதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றுக்குள் விழுந்தவர்களில் பலர் நீரில் மூழ்கி இறந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும், இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்த, இன்று அதிகாலை 3 மணிக்கு ராணுவ வீரர்கள் குழு, சம்பவ இடத்திற்கு சென்றடைந்தது என்று குஜராத் தகவல் துறை இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

இரட்டை குடியுரிமை உடைய எம்.பிக்கள் குறித்து விசாரணை!

இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சோதனையிடுவதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிறந்தநாள், பெயர்கள் மற்றும் தேசிய அடையாள இலக்கங்கள் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பான ஆவணம் நாடாளுமன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நபர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனும் சரத்து உள்ளடங்கிய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது

தமிழரசுக்கட்சி சுமந்திரனின் கம்பனி அல்ல – தவராசா சீற்றம்

“சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது தனிப்பட்ட கம்பனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சி முடிவு என்பது மத்திய குழு அழைக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும். அந்த முடிவே இறுதியான முடிவாக இருக்கும். ஆனால், சுமந்திரனுடைய கருத்துக்கள் இப்போது தன்னிச்சையாக அமைகின்றது. அது கட்சி முடிவு அல்ல. இவ்வாறான முடிவு கட்சிக்கு மட்டும் பாதிப்பு அல்ல. தமிழ் மக்களுக்கும் மண்ணுக்கும் நமது நிலத்துக்கும் மொழிக்கும் இது பாதிப்பு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது சுமந்திரன் வாக்களிக்காமல் சபையிலிருந்து வெளியேறி சென்று விட்டார். இந்த முடிவு கட்சியில் எப்போது எடுக்கப்பட்டது? அவரே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கான தெரிவு நாடாளுமன்றில் இடம்பெறும்போது வாக்களிப்பில் நடுநிலை வகிப்பது முதுகெலும்பு இல்லாதவர்களின் செயல் என்று சுமந்திரன் கூறினார். அவ்வாறு கூறியவர் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வாக்களிப்பைப் புறக்கணித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்ப்பதற்காகவே சுமந்திரன் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வாக்களிப்பைப் புறக்கணித்தார்.

சம்பந்தன் எப்போது விலகுவார், அந்தக் கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை. கட்சிக்குள் கொள்கைகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறுமாக இருந்தால், நான் கட்சியை விட்டு வெளியேறுவேன்.

கட்சித் தலைமை சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால், இவ்வாறு பலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, கட்சியையும், மக்களையும் திசை திருப்பி விடுவார்கள்.

கட்சியில் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்தக் கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கடந்த பல ஆண்டுகளாகக் கூறிக் கொண்டு வருகின்றேன்.

இது தனிப்பட்ட கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியினுடைய அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கட்சித் தலைமையை மதிக்க வேண்டும்.

இந்த மண்ணுக்கும் என்னுடைய தாய்மொழிக்கும் என்னால் செய்யக்கூடிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர வேறெந்த நோக்கமும் தனிப்பட்ட இலாபமும் எனக்குக் கிடையாது.

என்னுடைய சொத்துக்களை கௌரி சங்கரி தவராசா எனும் அறக் கட்டளை மூலம் மக்களுக்காக வழங்கப்போகின்றேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசியப்பட்டியல் தருமாறு நான் கேட்கவில்லை. ஆனால், தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டேன். தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாகக் காணப்பட்டது. எனினும், அடுத்த நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தை அழைத்து, அம்பிகா சற்குணநாதனுடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

பின்னர் சுமந்திரன், சம்பந்தனைச் சந்தித்து ஒரு முடிவு எடுத்து தேசியப்பட்டியல் அம்பாறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தவராசா கலையரசனுக்குக் கொடுப்பதாக தீர்மானித்து அதனையும் ஊடகங்களை அழைத்து அறிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் சுமந்திரன் தீவிரமாக இருந்தார். ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்குத் தமிழ்த் தேசிய உணர்வுள்ள ஒருவர் தலைவராக வர வேண்டும்” – என்றார்.

‘மலையக மக்களின் எதிர்காலத்தை பொறுப்பேற்பேன்’ – சஜித் சபதம்!

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனத்தின் வெளிப்படாகும். இதற்கு முற்றுபுள்ளி வைத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலுயே சஜித் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவேன் என நான் கூறியபோது, அதற்கு எதிராக இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டினர். இந்நாட்டில் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்ககூடாது. நாம் அனைவரும் இலங்கையர்களாக பயணிக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இத்தனை கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், அதிகளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனமாகும். இந்த அடிமைத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.

சிலர் தோட்டத் தொழிலாளர்களை அப்படியே வைத்திருக்கவே முற்படுகின்றனர். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். மலையகத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வீடுகளும் நிர்மாணிக்கப்படும். எமது ஆட்சிக்கு பிறகு அடுத்த அரசுக்கு அதற்கான பணிகளை மிச்சம் வைக்கமாட்டோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்.” – என்றார்.

உள்ளாட்சி தேர்தலை பிற்போட சூழ்ச்சி! அம்பலமானது அரசின் திட்டம்!!

” உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலேயே தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரியுள்ளார். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் முற்போக்கு கூட்டணிக்கான மக்கள் ஆதரவு அலை இன்னமும் குறையவில்லை. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது இது நிரூபனமானது. மக்கள்தான் கூட்டணியின் ஆலமரம். அந்த சக்தி எமது பக்கம் உள்ளது.

எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார் என ராஜபக்சக்கள் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைப்பதே இதன் நோக்கம். ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரமே விஜயதாச ராஜபக்ச இவ்வாறு செயற்பட்டிருப்பார். எனவே, தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு உள்ளது.

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.