இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்த நபர் கைது!

யூடியூபில் துப்பாக்கி தயாரிப்பது தொடர்பான காட்சிகளை பார்த்து ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கியொன்றை தயாரித்த நபரொருவரை   வாத்துவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாத்துவ, தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக  நபர் போதைப்பொருளுக்கு  அடிமையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு திரும்பிய நபரென தெரியவந்துள்ளது.

பாவனைக்குதவாத பிளாஸ்டிக் துண்டுகள், எவர்சில்வர் துண்டுகள், ஸ்ப்ரிங், இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவற்றை பாவித்து இந்த ஸ்னைப்பர் துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. தூரப்பார்வைக்காக கண்ணாடி குமிழ்கள் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் பூனைகள், நாய்கள், பறக்கும் பறவைகள் போன்றவற்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.  

” தமிழினம் தோற்றுவிட்டதாக கருத வேண்டாம்” – மைத்திரிமீது டக்ளஸ் பாய்ச்சல்!

பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(29.11.2022) நாடாளுமன்றில் தெரிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை தீர்க்கும் வகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, மாகாணங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவே அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சூழலில் 80 களின் ஆரம்பத்திலேயே தமிழ் மக்களினால் ஏகோபித்த குரலில் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பாக பிரஸ்தாபிப்பதற்கு நாம் தயாராக இல்லை.

2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நிறைவடைந்த யுத்தம் என்பது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் சிலரால் முன்னெடுக்கப்பட்ட தவறான வழிமுறைக்கு கிடைத்த தோல்வியாகவே அனைவரும் கருத வேண்டுமே தவிர, தமிழ் மக்கள் தோல்வியுற்ற சம்பவமாக அதனை யாரும் கருதக்கூடாடது.

தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற சில இனவாத சக்திகள், தங்களின் அரசியல் நலன்களுக்காக, தமிழ் மக்கள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவே பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

எவ்வாறெனினும், தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாட்டினை தற்போதைய ஜனாதிபதி தெளிவாக புரிந்து வைத்திருக்கின்மை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

‘கைது, தேடுதல் வேட்டை தொடரும்’ – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

“வடக்கு மாகாணத்தில் ஆறு விதமான போதைப்பொருட்களைப் பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும்தான் கடல் வழியாக இங்கு வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள் தரை வழியாக வருகின்றன. இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வடக்கில் பூதாகரமாக மாறியுள்ள போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நாம் மிகவும் அவதானம் செலுத்தியுள்ளோம். இது மிகவும் துக்கமான விடயம்.

இங்கு சில ஆட்கள் – சில இளைஞர்கள் போதைப்பொருளை ஊசி மூலமும் உடலில் செலுத்துகின்றார்கள். தேசியக்காய் பானத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்துகின்றார்கள். இது மிகவும் மோசமான செயல்.

வடக்கில் ஆறு விதமான போதைப்பொருட்களைப் பாவிக்கின்றார்கள். அதில் ஒன்று மட்டும்தான் கடல் வழியாக இங்கு வருகின்றது. ஏனைய போதைப்பொருட்கள் தரை வழியாக வடக்குக்கு வருகின்றன. இது மிகவும் பெரிய பிரச்சினை.

நான் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு போதைப்பொருள் பிரச்சினையால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைப்பட்டுள்ள இளைஞர்களைக் கண்டேன். அது ஓர் துக்கமான கதை.

வடக்குக்கு யார் போதைப்பொருள் கொண்டு வருகின்றார்கள், யார் விற்பனை செய்கின்றார்கள் என்பது தெரியக்கூடிய ஆட்களுக்குத் தெரியும். அது தெரிந்தால் அடுத்த கேள்வி அதைத் தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள் என்பதே.

இப்போதைக்கு நாங்கள் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றோம். போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் கைதான பாவனையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் விற்பனையிலும் பிரச்சினை இருக்கின்றது. பணப் புழக்கம் அதைக் காட்டிக் கொடுக்கின்றது. அதனூடாகப் பலர் சிக்குவார்கள். எனவே, இந்த நடவடிக்கையை நாம் கைவிடமாட்டோம். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குப் பின்னால் செல்வோம். அவர்களையும் கைது செய்வோம்.

வடக்கில் போதைப்பொருள் பிரச்சினையை இலகுவாக நிறுத்த முடியாது. இந்தப் பிரச்சினை இங்கு மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. போதைப்பொருள் பிரச்சினை முழு இலங்கையிலும் இருக்கின்றது.

நான் முதல் சொன்ன மாதிரி ஒரு போதைப்பொருள்தான் கடல் வழியாக வடக்குக்கு வருகின்றது. ஏனையவை இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வடக்குக்கு வருகின்றன.

வடக்கில் ஒவ்வொரு நாளும் சராசரி 500 படகுகள் கடலுக்குப் போய் வந்தால் அவற்றில் குறைந்தது ஒன்றில் அல்லது இரண்டில் குறித்த போதைப்பொருள் வடக்குக்கு வருகின்றது.

இந்த நுட்பமான வலையமைப்பை இலகுவில் நிறுத்த முடியாது. இது மிகவும் பெரிய பிரச்சினை. எனினும், இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்” – என்றார்.

 

திருமலையில் விபத்து – தாதி பலி! ஆசிரியை படுகாயம்!!

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் தாதியரொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்திய சாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (44வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காக சென்று கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியை படுகாயமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்துல்சலாம் யாசீம்

ரூ. 1,620 கோடி போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தல்- தி.மு.க. உறுப்பினர்கள் இருவர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 1,620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (26), ராமேஸ்வரம் அருகே மண்டபம் – வேதாளை வீதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, குறித்த காரில் இருந்து 30 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த கொக்கேய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம், இந்த போதைப்பொருள், இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

போதைப்பொருளை பறிமுதல் செய்த பொலிஸார், காரில் இருந்த சகோதரர்களான திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழக்கரை நகராட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஜெய்னுதீன் (45), தற்போது ராமேஸ்வரம் 19 ஆவது தொகுதி உறுப்பினரான சர்ப்ராஸ் நவாஸ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

சந்தேகநபர்களான சகோதரர்கள் சரக்கு பாரவூர்தி சேவை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழுக்களுடன் தொடர்பு உள்ளதா என இந்தியாவின் மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை மேற்கொள்கின்றன

‘மாவீரர் நினைவேந்தலுக்கு இடமளிப்பதை ஏற்கமுடியாது’ – கொக்கரிக்கிறார் வீரசேகர

“ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வு பகிரங்கமாக நடைபெற்றுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மரணித்த விடுதலைப்புலிகளை அவர்களின் உறவுகள் இனிமேல் வீடுகளுக்குள் வைத்து நினைவேந்த வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“இலங்கையில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். புத்தசாசனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தேரவாத பௌத்த நாடாக இலங்கை பாதுகாக்கப்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (29) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன. இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கின்றார்கள்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு. அரசமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் பௌத்த சாசனம் அமுல்படுத்தப்பட்டது. ஆகவே, பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட்டால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். பௌத்த விகாரைகள், தேரர்கள் மற்றும் பௌத்த மரபுரிமைகள்தான் பௌத்த சாசனம்.

சிங்கள இனத்தவர்கள்தான் பௌத்த சாசனத்தைத் தோற்றுவித்தார்கள். ஆகவே, புத்தசாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் ‘சிங்கலே’ என அழைக்கப்பட்ட இலங்கை காலப்போக்கில் ஸ்ரீ லங்கா என எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியவில்லை. இலங்கையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களில் இருந்துபாதுகாக்க சிங்களவர்கள்தான் முன்னின்று போராடினார்கள்.

புத்தசாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நாட்டின் ஒருமைப்பாடு உறுதியாகப் பேணப்பட வேண்டும்.

சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் நாட்டைப் பிளவுபடுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை. தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை. பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்துக்குச் சென்று “வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை” என்று சொல்கின்றார். இது வெறுக்கத்தக்க கருத்தாகும்.

வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது?

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள கோயில்களில் தேர் வீதி வலம் வந்தது. சிங்களவர்களும் அதில் கலந்துக் கொண்டார்கள். அதுவே சிங்கள இனத்தின் பொறுமையாகும். ஆனால், வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்துக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள்.

குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்தவதையிட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவேந்தும் நிகழ்வு பகிரங்கமாக நடைபெற்றுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போரில் மரணித்த விடுதலைப்புலிகளை அவர்களின் உறவுகள் இனிமேல் வீடுகளுக்குள் வைத்து நினைவேந்த வேண்டும். விடுதலைப்புலிகள் மூன்று இலட்சம் தமிழர்களைப் பகடைக்காயாக வைத்து போர் செய்தார்கள்.

இராணுவத்தை நோக்கி தமிழர்கள் வரும் போது அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். இராணுவத்தை நோக்கி 12 வயது சிறுவன் வரும் போது அந்தச் சிறுவனைப் பிடித்துக் கால்களை வெட்டினார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். இவ்வாறானவர்களையா தாம் நினைவுகூர வேண்டும் என்பதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் நெருக்கடி செய்தார்களா அல்லது இராணுவத்தினர் நெருக்கடி செய்தார்களா என்பதைத் தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோரிடம் உண்மைகளைக் கேட்டறிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

நெதர்லாந்து ,செனகல் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

கட்டாரில் 22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செனகல் – ஈகுவடார் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் செனகல் 3 போட்டிகளில் 2 வெற்றி ,1 தோல்வி என ( ரவுண்ட் 16 ) அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து – கட்டார் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என வெற்றி பெற்றது.இதனால் 3 போட்டிகளில் 2 வெற்றி ,1 டிரா என்று நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஏ பிரிவில் மற்ற 2 அணிகள் (கத்தார் ,ஈகுவடார்) தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

‘அதிகாரப் பகிர்வு’ – மைத்திரி முன்வைத்துள்ள யோசனை!

” மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்கி, அதற்கு அதிகாரப்பகிர்வு வழங்கினால் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

” வடக்குப் பிரச்சினை, மாகாணசபைத் தேர்தல், அதிகாரப்பகிர்வு மற்றும் காணி விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் தற்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. நான் ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கில் மக்களுக்கு உரித்தான காணிகளில் 95 வீதத்துக்கும் மேல் விடுவித்தேன். தற்போது இரண்டு, மூன்று விகிதங்களே எஞ்சியுள்ளன.

மாகாணசபைகளுக்கான அதிகாரம், அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவந்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. எம்மை பொறுத்தமட்டில், மாகாணசபை முறைமைக்கும் கீழ்சென்றதொரு அதிகாரப்பகிர்வு அவசியம். அதாவது மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபை முறைமைக்கு மேலதிகமாக நிதி செலவளிக்க வேண்டியதில்லை. தற்போது உள்ள மாவட்ட அபிவிருத்திக்குழுவை, மாவட்ட அபிவிருத்தி சபையாக இயங்க வைக்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தலாம். பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். சண்டையிட தேவையில்லை.

இந்நாட்டில் மீண்டும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் ஒரு சில கருத்துகளை தூக்கிபிடிக்க வேண்டாம் என வடக்கு மாகாணத்திலுள்ள எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். சகோதரத்துவத்துடன் செயற்படுவோம்.” – எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

கோபமெனும் பொல்லாப் பெருந்தீ!

மனிதர்கள் எல்லோருக்குமே கோபம் என்ற உணர்வு வராமல் இருக்காது. அப்படி அடிக்கடி மனிதர்களால் வெளிப்படுத்தப்படும் கோபம் தான் , உலகில் பல பிரச்சினைகளுக்கு , முக்கியமாக யுத்தங்களுக்கு வித்திடுகின்றது. கோபமென்ற உணர்வை இயல்பான ஒன்றாக நினைத்து சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் உளநோய்கள் பலவற்றுக்கும் கோபமே முன்னறிகுறியாகவும் கொள்ளப்படுகின்றது. அப்படிப்பட்ட கோபத்தை எப்படித் தவிர்க்கலாம், கோபத்தால் உண்டாகும் விளைவுகள் யாவை என்பன பற்றி எதிரொலி வாசகர்களுக்காக விரிவாக எடுத்துரைக்கிறார் மனோதத்துவ நிபுணர் ரைஸ்.

கோபம் என்பது என்ன? அது ஒரு உணர்வு , ஆற்றல். அது பெரும்பாலும் அழிக்கும் ஆற்றலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அறச்சீற்றம் என்பதும் கோபம் தான், அது சமுதாயத்தில் நடக்கும் தவறுகளைப் பார்த்து வருவது. அதனால் தான் பாரதியார் கூட ‘ரௌத்திரம் பழகு’ என்கிறார்.

ஆனால் சினம் எனும் கோபம் அடுத்தவர்களை தாக்க எறியப்படும் ஆயுதமானாலும் அது எய்தவனையே அதிகம் தாக்குகிறது. அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்,

‘தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்’

அதாவது, ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

சில பேர் சினத்தை மற்றவர்களிடம் காட்ட விரும்பாவிட்டாலும் அதை தம்மை நோக்கிச் செலுத்தி ,தம்மையே காயப்படுத்திக் கொள்வர். உதாரணமாக சங்க காலத்து புலவர் சீத்தலை சாத்தனாரைச் சொல்லலாம். அவர் பிற நூல்களில் ஏதாவது பிழைகள் காணப்பட்டால், அந்தப் பிழைகளை ஏற்படுத்தியோரை குற்றம் கூறுவதற்கு பதிலாக ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று வருந்தித் தமது தலையை தானேக் குத்திக் கொள்வாராம். அதனால் அவரது தலை புண்பட்டுச் சீழோடிருந்தமையால் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டாராம்.

தன் மீதே திருப்பிவிடப்படும் கோபம் தான் தற்கொலை என மனநல இலக்கியத்தில் கூறப்படுகிறது.

கோபம் எதனால் ஏற்படுகிறது? கோபம் என்பது ஒரு மனிதனின் பதற்றம் மற்றும் இயலாமையின் வெளிப்பாடு தான். பெரும்பாலும் கோபம் அப்படி இயலாமையில் ஏற்பட்டாலும் சில மனநோய்களிலும் கோபம் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. பொதுவாக ஆளுமைக் கோளாறு கொண்டவர்களின் மனநிலையில் ஏற்படும் சடுதியான மாறுதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற காரணங்களால் கோபம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் இருப்பவர்களுக்கும் பதற்ற நோய் இருப்பவர்களுக்கும் பருத்திக் கொட்டையிலிருந்து பட்டென பஞ்சு வெடிப்பது போல கோபம் வெளிப்படும். அது போல இருமுனைப் பிறழ்வு நோய் இருப்பவர்களுக்கு மனவெழுச்சி இருக்கும் போது கோபம் தான் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. மனச்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு மாயக்குரல் கேட்பதாலோ, மாய எண்ணத்தினாலோ கோபம் வரலாம். அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அது போலத் தான் மனவளர்ச்சி குன்றியோரும் ’டிமன்ஷியா’ எனும் மறதி நோய் உள்ளவர்களுக்கும் இயலாமையாலும் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாததாலும் கோபம் வரலாம்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் என்னென்ன?

முதலில் கோபம் என்பது மற்ற உணர்ச்சிகள் போல ஒரு உணர்ச்சி தான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எப்படி சிரிப்பு வந்தாலும் நாகரிகம் கருதி சில இடங்களில் சிரிப்பை அடக்கிக் கொள்கிறோமோ அது போல கோபத்தையும் அடக்க முயற்சிக்கலாம். எதையும் சொல்லும் முன்னும் ,ஒரு சில நொடிகள் என்ன சொல்லப் போகிறோம்?,எதனால் அதை சொல்லப் போகிறோம்? என யோசிக்கலாம்.
யோசிக்கக் கிடைத்த அந்த சில நொடிகள் முடிந்தவுடன் தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக மற்றவருக்கு புரியும் படி எப்படி சொல்லலாம் என யோசிக்கலாம். சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகச் சொல்ல வந்ததை மற்றவரின் மனம் புண்படாதவாறு சொல்லலாம்.

சொல்ல வந்ததை அந்தச் சூழ்நிலையில் நிதானமாக,தெளிவாகச் சொல்ல முடியாது என நினைக்கும் பட்சத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேறி ஒரு சிறு நடை போட்டுவிட்டு வரலாம்.

இன்னும் சொல்லப் போனால், சில சமயங்களில், சொல்ல வந்ததை உடனே சொல்ல வேண்டுமென அவசியமில்லை. இன்னும் சற்று நேரம் எடுத்து, சிந்தித்து அல்லது தெளிவாக ஒரு காகித்தில் எழுதிப் பார்த்து, அதைப் பயிற்சி செய்து பின் சொல்லலாம்.

கோபப்படுத்திய விடயத்தை மறந்து, அதற்கு காரணமாக இருந்த பிரச்சினைக்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என யோசிக்கலாம். உங்களால் எதனை மாற்ற முடியும் எதனை மாற்ற முடியாது எனும் உண்மை நிலையை ஆராய்ந்து உணர முயற்சிக்கலாம். கோபம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தும் என்பதை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம்.

நமது கோபத்துக்கு நமது செயலுக்கு மற்றவர் மீது பழி போடுவதை விடுத்து முதலில் நம் செயலுக்கோ கோபத்துக்கோ நாம் பொறுப்பெடுத்து பழக வேண்டும். உதாரணமாக அலுவலகத்துக்கு தினம் நேரம் கழித்து போவதால் கடிந்துகொண்ட முகாமையாளர் மீது கோபப்படுவதை விடுத்து முதலில் உங்கள் செயலுக்கு பொறுப்பெடுத்தால் கோபத்தின் வீச்சு குறையும், தீர்வு பிறக்கும்.

கோபம் நம்மை நாமே காயப்படுத்தும் செயல் என நாம் அறிவோம். கோபப்படுவதால் நமது உடலில் ’கார்டிசால்’ எனும் இரசாயனம் அதிகம் சுரந்து உடல் உறுப்புகளைக் காயப்படுத்துகிறது. பலருக்கு கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் நம்மை அழிக்கும் கோபத்தை விட்டு, மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதும் அவர்களை மன்னிப்பதும் தான் நமக்கு நல்லது அப்படித் தானே? அது உறவையும் மேம்படுத்துமல்லவா?

கோபத்தை சில நேரங்களில் நகைச்சுவையாக மாற்றி வெளிப்படுத்தலாம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்த மாதிரியும் இருக்கும், மனக்காயம் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். சார்லி சப்ளின் போன்ற நகைச்சுவை கலைஞர்கள் ஃபாசிசத்தின் மீது உள்ள கோபத்தை நகைச்சுவை மூலமே வெளிப்படுத்தினர். இன்றைய காலத்தில் பல மீம்ஸ் வகை நகைச்சுவைகள் இந்த வகையைச் சார்ந்தவை என சொல்லலாம். ஆனால் உருவக் கேலி செய்வதையோ எள்ளல் வகையில் கிண்டல் செய்வதையோ தவிர்க்க வேண்டும். அது பகையை அதிகரிக்கும்.

கோபம் வரும் போது சில பேருக்கு இசை கேட்பதோ, தியானம் செய்வதோ, ‘நான் அமைதியை விரும்புகிறேன்’ எனத் திரும்ப திரும்ப மனதுக்குள் சொல்வதோ, முறையான மூச்சுப் பயிற்சி செய்வதோ உதவும். சில பேருக்கு தனது எண்ணங்களை ஒரு டயரியில் எழுதுவதால் கோபம் குறையலாம். பொதுவாக உடல் நலத்தை பேணி, தூக்கத்தையும் பேணி, தினமும் தேவையான அளவு உடற்பயிற்சியும் செய்து ஆரோக்கியமான உணவு உண்டு வந்தாலும் நல்லது தான்.

கோபம் என்பது சில பேருக்கு கட்டுக்கடங்கா வெள்ளம் போல அல்லது ஒரு எரிமலை போல வெளிப்படும். தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும் பட்சத்திலும் கோபத்தால் தனது அமைதியும் சுற்றி இருப்பவர்களின் அமைதியும் கெடுகிறது எனும் பட்சத்திலும் உதவியை நாடுங்கள். கோபம் என்பது எல்லா உணர்ச்சிகளையும் போல ஒரு உணர்ச்சி தான். அதை நல்ல முறையில் மடைமாற்றி அமைதியடைய எல்லோராலும் முடியும் எனும் உண்மையை நம்புவோம் .

புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்த விசேட அலுவலகம்!

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் புலம் பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொடர்பு அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ள நிலையில் அவை சாத்தியமானதாக அமைந்துள்ளதாகவும் சபையில் தெரிவித்த அவர், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து மேற்படி அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் யுத்தம் முடிவுற்று பல ஆண்டுகள் கடந்துள்ள போதும் எம்மால் இன்னும் முழுமையான சமாதானத்தைக் கட்டி யெழுப்ப முடியாமல் போயுள்ளது.

” பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொ ழித்து புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதே வேளை நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் பலரை விடுவிக்கவும் முடிந்துள்ளது.

20 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் தமிழ் மக்கள் பெரும்பாலானோர் காணப்படுகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் கீழ் அவர்கள் மூலம் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர்களுடன் நான் இணைப்பை முறையாக முன்னெடுக்கும் வகையில் சர்வதேச தொடர்பு அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்ததாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – எனவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊசி மூலம் ஹெரோயின் பாவனை – யாழில் 15 வயது மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 15 வயது மாணவன் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்தவாரம் சேர்க்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டபோதும் நேற்று அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் சடலத்தை நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசிமூலம் இந்த மாணவன் பயன்படுத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா பறந்தார் அலிசப்ரி!

வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(29) அதிகாலை அமெரிக்கா பயணமானார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கனின்(Antony Blinken) அழைப்பிற்கு அமைய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.

அமைச்சரின் இந்த விஜயத்தில் 03 அரச அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமெரிக்காவில் தங்கவுள்ள வௌிவிவகார அமைச்சர், அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடமளித்த ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு!

வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை எத்தகைய நெருக்கடிகளும் இன்றி சுமுகமாக நடத்துவதற்கு இடமளித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகளுக்கு இடமளித்தமை நல்லிணக்கத்திற்கான சிறந்த சமிக்ஞையாக அமைந்ததாக செல்வம் அடைக்கலநாதன் எம். பியும் இது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புரிதலை வெளிப்படுத்துவதாகவும் அது மேலும் பலம் பெற வேண்டும் என்றும் ஸ்ரீதரன் எம் பியும் சபையில் தெரிவித்தனர்.

சில இடங்களில் தடைகள் இடம் பெற்ற போதும் பொதுவாக அந்த நிகழ்வுகள் மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றன என்பதை சபையில் சுட்டிக்காட்டிய செல்வம் அடைக்கலநாதன் எம்பி ,அதற்கு இடமளித்ததன் மூலம் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையை வெளியிட்டுள்ளமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை, போக்குவரத்து, வெளிவிவகாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தாம் நினைவு கூரும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றன. இந்த விடயத்தில் நல்லிணக்க சமிக்ஞையாக ஜனாதிபதி செயற்பட்டமை வரவேற்கத்தக்கது.

நடுவருடன் வாக்குவாதம் செய்த தென்கொரியா பயிற்சியாளருக்கு சிவப்பு அட்டை

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு ‘எச்’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் தென்கொரியா-கானா அணிகள் சந்தித்தன.

முதல் பாதியில் கானா வீரர்கள் முகமது சலிசு, முகமது குடுஸ் ஆகியோர் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தனர். பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட தென்கொரியா அணியில் சோ கியூ சங் 58 மற்றும் 61 நிமிடங்களில் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். ஆனால் தென்கொரியாவின் உற்சாகம் நீடிக்கவில்லை. 68-வது நிமிடத்தில் கானாவின் முகமது குடுஸ் மறுபடியும் கோல் போட்டு அசத்தினார். கடைசி கட்டத்தில் தென்கொரியா அணியினர் ஒட்டுமொத்தமாக எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டு முயற்சித்தும் கோல் வாய்ப்பு கனியவில்லை. முடிவில் கானா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.

ஆப்பிரிக்க நாடான கானா உலகக் கோப்பை கால்பந்தில் ஒரு ஆட்டத்தில் 3 கோல் அடிப்பது இதுவே முதல் முறையாகும். 3 புள்ளிகளுடன் உள்ள கானா அணி கடைசி லீக்கில் உருகுவேயை வீழ்த்தினால் அடுத்த சுற்றை அடையலாம். ஒரு புள்ளியுடன் உள்ள தென்கொரியா தனது கடைசி லீக்கில் போர்ச்சுகலை அதிக கோல் வித்தியாசத்தில் சாய்த்தால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இதற்கிடையே, இந்த ஆட்டத்தில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் சற்று முன்கூட்டியே நடுவர் அந்தோணி டெய்லர் விசில் ஊதி ஆட்டத்தை முடித்து விட்டதாக கூறி தென்கொரியாவின் தலைமை பயிற்சியாளர் பாலோ பென்டோ (போர்ச்சுகலை சேர்ந்தவர்) நடுவருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி எச்சரித்தார். இதன் மூலம் அடுத்த ஆட்டத்தில் பயிற்சியாளர் பாலோ பென்டோ வீரர்களின் பகுதியில் அமர முடியாது.

எனக்கு எவரும் வகுப்பெடுக்க வேண்டாம் – வடக்கு ஆளுநர் சீற்றம்

” வடக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். எனக்கு எவரும் வகுப்பெடுக்கக் கூடாது.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ ஆளுநர் தான் நினைத்தபடி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி வெளியிடுகின்றார் என என் மீது குற்றம் சாட்டி, சிலர் தம்மை மக்கள் மத்தியில் தலைவர்களாகக் காட்ட முயல்கின்றனர்.

வடக்கு மாகாண சபை செயற்பாட்டில் இல்லாத காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல நியாதிச்ச சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தாமல் உள்ளது.

ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 154C மாகாண சபையொன்றுக்கு நியதிகளை இயற்றும் அதிகாரம், அவற்றில் உள்ள விடயங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகாரம், அந்த மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட மாகாண ஆளுநரால் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையின் அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது கீழ்நிலை அதிகாரிகள் மூலமாகவோ செயற்படுத்தப்படும்.

பிரிவு 154F அதைத்தான் அரசமைப்புச் சட்டம் சொல்கின்ற நிலையில் ஒவ்வொரு சட்டமும் மாகாண நிர்வாகத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.

பல சட்டங்கள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு மறுபரிசீலனை தேவைப்படுகின்றதோடு தமது அதிகார வரம்பு தெரியாமல் பேசுகின்றனர்.

அரசமைப்பில் எழுதப்பட்ட மாகாண அதிகாரங்கள் பல தமது செயற்பாடுகளைச் செய்யாத நிலையில் அவை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

நிர்வாக ரீதியாகவும் இடைவெளிகள் உள்ளதோடு அதிபர், ஆசிரியர்களின் இடமாற்றங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சாதகமான கொள்கையைக் கொண்டிருந்தன.

கடந்த காலங்களில் மாகாண அரச சேவை சில வட்டத்துக்குள் முடக்கிவிடப்பட்ட நிலையில் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, ஆளுநர் என்ற வகையில் வடக்கு மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள உரிய சட்ட திட்டங்களைச் செயற்படுத்துவேன். யாரும் எனக்குக் கற்பிக்க வேண்டாம் ” – என்றுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் தான் நினைத்தவாறு நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார் எனக் கூறி அதற்கு எதிராகத் தான் ஜனாதிபதியிடம் முறையிடத் தீர்மானித்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நேற்றுமுன்தினம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்கு சர்வதேச தலையீடு அவசியம்!

அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வலியுறுத்தியுள்ளன.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திர தினத்துக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக சர்வக்கட்சி கூட்டத்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் நடத்தப்படவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியமா என எழுப்பட்ட கேள்விக்கு தமது கட்சி – கூட்டணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனும், கூட்டணியின் எம்.பி. மனோ கணேசனும் மேற்கண்டவாறு கூறினர்.

” சர்வதேச தலையீடு அத்தியாவசியம். இது வரலாறு எமக்கு கற்று தந்துள்ள பாடம். முழு நாட்டையும் சிங்கள, பௌத்த நாடாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. எனவே, ஏதோவொரு வடிவில் சர்வதேச தலையீடு அவசியம். அதனை தட்டிக்கழிப்பதற்கு ஜனாதிபதி முற்பட்டால் – தீர்வு திட்ட பேச்சுகள் ஆரம்பத்திலேயே குழம்பும்.” – என்றார் மனோ.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட செல்வம் எம்.பி.,

” தந்தை செல்வா காலம் முதல் தோற்று போன பேச்சுகள்தான் இடம்பெற்றுள்ளன. ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச தலையீடு அவசியம். இந்திய தலையீட்டை நாம் கோருகின்றோம். நோர்வோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கலாம். உள்ளக பொறிமுறை என்பது தோல்வி கண்டுள்ளது.”   – என்றார்.

பொன்னியின் செல்வனும் கூட்டமைப்புச் சம்பந்தரும்!

‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்தவர்களுக்கு அல்லது திரைப்படமாக வெளிவந்துள்ள பகுதி ஒன்றை பார்வையிட்டவர்களுக்கு சுந்தர சோழரின் நிலை நன்கு புரிந்திருக்கும். மருத்துவம், பாதுகாப்பு என்ற போர்வையில் அவர் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்தார். சோழ வம்சத்தின் உண்மையான பாதுகாவலர்கள் என நம்பப்பட்ட பழுவேட்டையர்கள்கூட சிற்சில விடயங்களில் அரசருக்கு விசுவாசமாகச் செயற்படவில்லை.

அட, பொன்னியின் செல்வன் படமாகவும் வந்துவிட்டது, அது பற்றி பல தகவல்களும் ஏற்கனவே வெளிவந்துவிட்டன, தற்போது எதற்காக மீண்டும் அதைப்பற்றி எழுத வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆம். பொன்னியின் செல்வனில் வருவதுபோல சிற்சில சம்பவங்களும் தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது அரங்கேறிவருகின்றன.மணி மகுடத்துக்கான உள்ளக மோதல்கள் முடியாட்சியிலும் சரி, குடியாட்சியிலும் சரி தொடரவே செய்கின்றன.

சுந்தர சோழர் நோய்வாய்ப்பட்டு முடங்கியிருந்ததுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இப்போது நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். வெளியில் தலைகாட்ட முடியாத நிலை. பாதுகாப்பான அறைக்குள்ளேயே அவரின் அந்திம காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. சோழப் பேரரசில் நடக்கும் சில விடயங்கள் சுந்தர சோழருக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. அதுபோல தமிழரசுக்கட்சிக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் விடயங்கள் சம்பந்தருக்கு தற்போது அறிவிக்கப்படுவதில்லை. சிலவேளை பத்திரிகைகளைப் பார்த்தே சில விடயங்களை அவர் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை.

சுந்தர சோழர் மரணிக்கும் முன்னரே, அடுத்த அரசன் பற்றி சிற்றரசர்கள் ஆராயத் தொடங்கியிருந்தனர். இப்படிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதாவது நடந்தால், அடுத்த தலைவர் யார் என்பது குறித்து தற்போதே தமிழரசுக்கட்சியும், கூட்டமைப்பும் கவனம் செலுத்தி வருகின்றன.( சம்பந்தர் குணமடைய வேண்டும், நலமுடன் வாழ வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையும்கூட. அதற்காக அரசியல் வட்டாரங்களில் நடைபெறும் விடயங்களை குறிப்பிடாமல் இருக்க முடியாதே.)

இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்கு, தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா திரைமறைவில் திட்டம் தீட்டி வருகிறாரெனத் தெரியவருகின்றது. இதற்கான ஆதரவு அலையையும் அவர் திரட்ட ஆரம்பித்துள்ளார் என தமிழர் தாயகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறங்கி மண்கவ்விய மாவை சேனாதிராஜா, சுமந்திரன் தரப்புடன் முரண்பட்டு, செயற்பாட்டு அரசியலுக்கு சற்று விடை கொடுத்து – விலகி நின்று வேடிக்கை பார்த்தார். அவ்வப்போது யாழில் நடைபெறும் சில நிகழ்வுகளில் பங்கேற்றும் வந்தார். எனினும், தற்போது அவருக்கு திடீரென நாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசை வந்துள்ளது. இந்த இலக்கை – கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு சுமந்திரன் தரப்புடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொள்வதில் மாவையார் தீயாக செயற்பட்டுவருகின்றாராம்.

இதன் ஓர் அங்கமாக கடந்த காலங்களில் யாழ்ப்பாண எல்லைக்குள்ளேயே முடங்கியிருந்த மாவையார் , சுமந்திரனை குளிர்விப்பதற்காக, அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கையிலும் பங்கேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். எரிபொருள் இல்லை, உடல்நிலை சரியில்லை என வவுனியாவுக்குகூட வரமறுக்கும் மாவையார், அம்பாந்தோட்டைவரை வந்தது தமிழரசுக் கட்சிக்காரர்களையே விழிபிதுங்க வைத்ததாம்.

அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனின் எம்.பி. பதவியை தனக்கு வழங்கினால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, அடுத்த மாநாட்டின்போது சுமந்திரனுக்கு வழங்குவதற்கும் மாவை பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். மாகாண அமைச்சுப் பதவியை காட்டி, கலையரசனுக்கும் சமரசத் தூது அனுப்பட்டுள்ளது.

சம்பந்தன் ஐயாவுக்கு, ஏதேனும் நடந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை குறிவைத்தே, அதற்கான பிள்ளையார் சுழியாக எம்.பியாவதற்கு மாவை முயற்சிக்கின்றார்.

ஏனெனில் சுமந்திரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை வழங்குவதற்கு செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் போர்க்கொடி தூக்குவார்கள், உள்ளகப் போராட்டம்கூட நடத்துவார்கள். ஆனால் மாவை வந்தால் அவர்களும் ஆமாம் சாமி போடக்கூடும். தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் பதவியைவிட, தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியே சுமந்திரனுக்கு முக்கியம். ஆக – மாவையை கூட்டமைப்பின் தலைவராக்குவதில் சுமந்திரனுக்கு ‘டபிள் ஓகே’யாம்.

தலைவராகுவதற்கு அனைத்து தரப்புகளின் ஆதரவை திரட்டும் பணியில் மாவை ஈடுபட்டுவருகின்றார். இதற்கிடையில் அடுத்த வருடம் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறும். அந்தக் காலப்பகுதியில் ’பொன்னியின் செல்வன்-2’ ஆம் பாகமும் வெளிவந்திருக்கும். அப்போது இங்கு நடைபெறும் அரசியல் சூழ்ச்சி பற்றியும் பகுதி -2 ஐ எழுதக்கூடியதாக இருக்கும்.

சுழியன்

21/4 தாக்குதல் – சந்தேக நபர் வெட்டிப்படுகொலை! கொழும்பில் பயங்கரம்!!

 

கொழும்பு – மட்டக்குளி, மத்திய வீதி பகுதியில் பட்டப்பகலில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காரொன்றிலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் பின்னால் மற்றுமொரு காரில் வந்த இரு நபர்கள், அவர்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவின் மாநிலமாக மாறுமா இலங்கை?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – என்று ‘உத்தர லங்கா சபாகய’வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வில் வீரவன்ச தெரிவித்தார்.

‘உத்தர லங்கா சபாகய’வின் நுவரெலியா மாவட்ட மக்கள் சந்திப்பு ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச கூறியவை வருமாறு,

” இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது. இதனை வைத்து பலம்பொருந்திய நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கி பிடிக்க முற்படுகின்றன. தமது உபாயத்துக்குள் இலங்கையை கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலைமை தானாகவே உருவாகிவிடும்.

மறுபுறத்தில் நாட்டில் போராட்டங்களை தூண்டிவிட்டு, அராஜக நிலைமையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன. ‘ஹெட்டி’யில் போன்று இலங்கையிலும் ஆட்சி கட்டமைப்பு இல்லாத நிலைமையை தோற்றுவித்து, நாட்டை சீரழிக்க முற்படுகின்றன. இதற்காக ‘என்ஜீஓ’ காரர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் எனக் கூறுவது இந்த நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும்.” – என்றார்.

ரயில் மோதியலில் குடும்பப் பெண் பலி – திருமலையில் சோகம்!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் மோதியதில் பெண்ணொருவர் இன்று (28) காலை பலியாகியுள்ளார்.

திருகோணமலை பூம்புகார் வீதியில் வசித்து வரும் மேரி சாந்தி (47வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.