யாழில் கூட்டு பாலியல் வல்லுறவு – சந்தேகநபர் 10 வருடங்களின் பின்னர் கைது!

யாழ், நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 10 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகநபரை இன்று கைது செய்ததாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 7 ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில்
பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே துன்னாலை மற்றும் கரவெட்டி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய புலோலி – மந்திகையை சேர்ந்த பிரதான சந்தேகநபர், வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றதுடன் பின்னர் கொழும்பிற்கு வந்து தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு – புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சூனியம் செய்வதற்காக புதைக்கப்பட்ட பெண்ணின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள் – விசாரணை ஆரம்பம்

தலகிரியாகம, தென்னகோன்புர மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த 80 வயதான பெண்ணின் உடலிலிருந்து தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என கலேவல பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னகோன்புர பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மயானம் வழியாக சென்ற நபரொருவர் புதைகுழி தோண்டப்பட்டிருந்ததை பார்த்து காலஞ்சென்ற பெண்ணின் புதல்வியிடம் தெரிவித்துள்ளார்.

புதல்வி இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மந்திரம் அல்லது சூனியம் செய்வதற்காக இவ்வாறு தலையை துண்டித்து எடுத்துச் சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

“தேர்தலை எதிர்கொள்ள தயார்” – அறிவிப்பு விடுத்தது காங்கிரஸ்!

” நாட்டில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை வெற்றிகரமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்கொள்ளும். தனிவழியா அல்லது கூட்டணியா என்பது குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும்.” – என்று காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாழ வழியின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே, பொருளாதார நெருக்கடியை சமாளித்து, மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் முதன்மை நோக்காக இருக்க வேண்டும்.

எனினும், உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தேர்தலை நடத்துவதற்கு தயாரென தேர்தல் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது. தேர்தல் வேண்டுமா அல்லது இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

அதேபோல நாட்டில் உள்ளாட்சிமன்ற தேர்தல் அல்ல பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் கூட அதற்கு முகங்கொடுப்பதற்கு காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது. கடந்த உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி வெற்றி நடைபோட்டோம். இம்முறையும் உரிய தீர்மானத்தை தேசிய சபை எடுக்கும்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எஞ்சியுள்ள பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்.” – என்றார்.

ராஜபக்சக்களை வரலாறு மன்னிக்காது – சாபமிடுகிறார் மைத்திரி!

நாட்டை படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்திருந்தால் இந்த நாடு மோசமான நிலைக்குச் சென்றிருக்காது.

ராஜபக்சக்கள் தங்கள் குடும்ப ஆட்சியில் மாத்திரம் கவனம் செலுத்தியதன் விளைவாகவே இந்த நாடு படுமோசமாக வீழ்ச்சியடைந்தது. இறுதியில் ராஜபக்சக்களும் ஆட்சிப்பீடத்திலிருந்து மக்களின் எழுச்சியால் தூக்கி வீசப்பட்டார்கள்.

நாட்டைப் படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ராஜபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைக்காது” – என்றார்.

ஈராண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடின்றி புத்தாண்டை வரவேற்க தயாராகும் ஆஸி.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தன.

இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடனே புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.

புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் முக்கிய நகரங்களில் சிட்னியும் ஒன்றாகும். மேலும் அதன் சின்னமான ஓபரா ஹவுஸில் பொது கவுண்ட்டவுன் மற்றும் வானவேடிக்கைகள் உலகம் முழுவதும் பெரும் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கும்.

இதனால் சிட்னிக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிட்னியின் துறைமுகத்திற்கு வந்து வானவேடிக்கைகளைக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி ஓபரா ஹவுஸின் நான்கு படகுகளில் இருந்து 2,000 வானவேடிக்கைகளும், சிட்னி துறைமுகப் பாலத்தில் முன்பை விட அதிகமான நிலைகளில் இருந்து 7,000 பட்டாசுகளும் ஏவப்பட்டு சிட்னி துறைமுகத்தை ஒளிரச் செய்யும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்பட்டு, கண்கவர் நிகழ்ச்சியை வடிவமைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தொற்றுநோய்க்கு முன்னர், உலகின் பிற பகுதிகளிலிருந்து ஒரு பில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்ததால், சிட்னி மைதானத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விழாக்களில் கலந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

விசித்திரமான கண்களுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டி!

யாழ். புத்தூர் நவக்கிரி மேற்கு பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில்
ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடே இவ்வாறு ஒரு குட்டியைப் பிரசவித்துள்ளது.

அந்தக் குட்டியின் நெற்றிக்கு மேல்,இரண்டு கண்களும் ஒன்றான நிலையில் காணப்படுகின்றன.

டிசம்பர் 29 ம் திகதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன்
பார்வையிட்டு வருகின்றனர்.

இலங்கையில் 4 லட்சம் பேர் கஞ்சா புகைப்பதாக அதிர்ச்சி தகவல்…!

இலங்கை சனத்தொகையில்  சுமார் 4 லட்சம் பேர் கஞ்சா போதைப்பொருள் புகைக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. 

அத்துடன், மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மணி தரப்பு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குப் புதிதாக மேயரைத் தெரிவு செய்ய முற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பதவியிலிருந்து விலகும் மேயர் வி.மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் கடந்த 21 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தை மீளச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் அவர் பதவி விலகுவதாக நேற்றைய தினம் கடிதம் மூலம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

“வரவு – செலவுத் திட்டம் மீளவும் சமர்ப்பிக்கப்பட்டால் தோற்கடிக்கப்படும் என்பதால் பதவியைத் துறக்கின்றேன்” என்று மணிவண்ணன் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய மேயருக்கான தெரிவு இடம்பெறுமாக இருந்தால், அதற்கு எதிராக நீதிமன்றதை நாடுவோம் என்று மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே ( ஆனோல்ட் மேயராக இருந்த காலத்தில்) இரண்டு தடவைகள் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு தடவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகர சபைக் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக, சபை கலைக்கப்படவேண்டும். அதற்கு முரணாக மேயர் தெரிவை நடத்த முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம் ” – என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காதலி திடீர் மரணம் – காதலன் செய்த காரியம்! கண்ணீர் குளமானது மரணவீடு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது.

10வருட காலமாக 22வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும் மதுர்சன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29.12.2022 அன்று காதலி திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் கணவர் மதுர்சன் என பிரசுரித்திருந்தார்.

மேலும் இறுதிச்சடங்கில் காதலியின் உடலத்திற்கு தாலி கட்டி தனது மனைவியாக்கியிருந்தமை இவர்களின் காதல் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருந்தது.

 

வன்முறைக்குழு வாள்களுடன் அட்டகாசம்! – பெற்றோல் குண்டும் வீச்சு

யாழ்., அச்சுவேலி பாரதி வீதியிலுள்ள வீட்டின் மீதும், அச்சுவேலி தென்மூலையிலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தின் மீதும் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அச்சுவேலிப் பொலிஸார் இந்தத் தகவலை இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் வாள்கள் சகிதம் இந்தத் தாக்குதல்களை சில மணி நேரத்துக்குள் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தனிமையிலிருந்த மூதாட்டியின் வீட்டுக் கண்ணாடிகளை அவர்கள் அடித்து உடைத்து, படலையையும் கொத்தி சேதப்படுத்தி, பெற்றோல் குண்டையும் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்தக் குழு, மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்குள் புகுந்து, அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வாள்களால் கொத்தி சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

” பயங்கரமான இரவு” – நால்வர் வெட்டிப்படுகொலை!

மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தக் கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, பதல்கும்புர நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இரு இடங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களையும் தேடி வருகின்றனர்.

 

ஒரே தடவையில் பெருமளவு அரச ஊழியர்கள் இன்று ஓய்வு!

இலங்கை முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதால், அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமிழ் தேசியக் கூட்டணி அமைக்கும் முயற்சி பிசுபிசுப்பு – தமிழரசுக்கட்சி விடாப்பிடி!

புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தை தவிர வேறு கட்சிகளுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனது பாரம்பரிய கூட்டணிக் கட்சிகளுக்கு மேலதிகமாக ஏனைய தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை நிராகரிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த 26 ஆம் திகதி இணைய வழியில் நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக மாத்திரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருப்பதாகவும்
தேர்தல் முறைமையின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறைமையை சரியாக பயன்படுத்தும் நோக்குடனேயே இது தொடர்பில் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி கூடவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காலக்கெடு விதிப்பு!

“அரசுடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும். மொத்தக் கைதிகளின் விடுதலையை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்திற்குள் சாத்தியமாக்க வேண்டும்.”

– இவ்வாறு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழ் அரசியல் கைதிகள் குற்றமிழைத்தவர்களாகக் காணப்பட்டாலும், அவர்களுக்கு மன்னிப்பளித்து, சமூகத்துடன் இணைந்து வாழ வழி காட்ட வேண்டும. இதை விடுத்து தமிழ்த் தரப்பும் இதை வைத்து அரசியலை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இன நல்லிணக்கம் எனும் புதிய விடயத்தைக் கூறினாலும் 31 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்படும் தருணமே இந்த நல்லிணக்க நிலை சாத்தியமாகும்.

சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பிரதிநிதியினர் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை வலியுறுத்தி நல்லிணக்கத்தின் முதற்படியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞையாக அமையும்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன் மற்றும் சித்தார்த்தன் போன்றோரைச் சந்தித்த வேளையிலும் கூட அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அதிக கரிசனை காட்டுமாறு வலியுறுத்தினோம்.

தற்போது 19 பேரின் வழக்குகளே நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏனையவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலே விடுவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகள் துரித கதியில் இடம்பெற்றிருந்தால் அனைத்து கைதிகளும் விடுதலையாகியிருப்பதற்கான சாதக நிலை காணப்படும்.

பொதுவாக ஒரு நாட்டில் போர் நடைபெற்ற பின் அதில் பங்கெடுத்த அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நிலைமை.

நல்லிணக்கத்துக்கான பேச்சுக்கள் ஆரம்பமாக முன்னர் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதிகம் வலியுறுத்தவுள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் தலைவரைச் சந்தித்த வேளை அவர் கூறினார்” – என்றார்.

” பாதீடு தோற்கடிப்பு” – பதவி விலகினார் மணி!

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இரண்டு வருடங்களுக்கு பின்னர் ராஜினாமா செய்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை ; வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகம்

கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) ஆகும். தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை. சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை ; வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் “அற்றார் அழிபசி தீர்த்தல்” என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. நேற்று 29.12.2022 (வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியால் முழு இலங்கையிலும் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் ஏற்கனவே யுத்தத்தினாலும் கொரோனாவாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருகிறது. பசியோடு இருக்கும் மக்களைச் சீன அரிசியை நிராகரிக்குமாறு எவருமே கோரமுடியாதபோதும் இந்த அரிசியிலுள்ள அரசியலை எமது மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும் மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது. வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும். பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும். போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோதுகூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!

மியன்மார் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங்சான் சூகி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இதையடுத்து ஆங்சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்களுக்கு அடுத்தடுத்து தண்டனை வழங்கப்பட்டன. இதில் இதுவரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு இன்று மியான்மர் ராணுவ கோர்ட்டில் வழங்கப்பட்டது. அதன்படி ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு மொத்தம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பே நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள், “ராஜபக்ச குடும்பம் பேரக் குழந்தைகளைக் கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக்குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகின்றோம்”, “கூட்டமைப்பே நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே!”, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத் தா”, “வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு” எனக் கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்கள், “காணாமல் ஆக்கப்பட்டோரை விடுதலைப்புலிகள் கொண்டு சென்றிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்குச் செல்லாது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காகச் செயற்பட வேண்டும்” – என்றனர்.

 

கொழும்பு அரசியலில் குழப்பம் – முக்கிய நியமனங்கள் இழுபறியில்!

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் உறுப்பினர்கள் மூவரை நியமிக்கும் நடவடிக்கை, இணக்கப்பாடின்றி பிற்போடப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசியல் அமைப்பு சபைக்கு மூன்று சிவில் உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட வேண்டும்.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபைக்கு பத்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதில் சிவில் உறுப்பினர்கள் மூவரை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடன் நியமிக்க வேண்டும்.

இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது. எனினும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் அரசியல் அமைப்பு பேரவைக்கு சிவில் உறுப்பினர்களை நியமித்த பின்னரே நியமிக்கப்பட வேண்டும்.

யாழை முற்றுகையிட்டது சிவசேனா!

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக மதமாற்ற கொள்கை உடைய நபரொருவர் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளதாகவும், இவ்வாறு மதமாற்ற கொள்கையுடையவர் யாழ். மாவட்டத்துக்கு வேண்டாம் என வலியுறுத்தியும் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சிவசேனை அமைப்பினரால் யாழ் மாவட்ட செயலக முன்றலில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட அரச அதிபராக செயற்பட்ட மகேசன், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.