தலைவர் சம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம், மருத்துவ கண்காணிப்புக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

” வழமையான பரிசோதனைக்காகவே ஐயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்முறை மூன்று நாட்கள் கண்காணிப்பு இடம்பெற வேண்டும். அதனால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.” என சம்பந்தனின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றை படமெடுத்த யாழ். இளைஞனுக்கு மறியல்!

நாடாளுமன்ற அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ஔிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் அத்துமீறி நுழைந்த குறித்த நபர்கள் நாடாளுமன்றத்தை ஔிப்படம் எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கருவாத்தோட்டத்தை சேர்ந்த 22 மற்றும் 31 வயதானவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மைத்திரிகோரிய மன்னிப்பை ஏற்க முடியாது – கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிய மன்னிப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

சமூக தொடர்புக்கான தேசிய கத்தோலிக்கப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடமும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல். மன்னிக்கவே முடியாத கொடூர தாக்குதல். எனவே, இந்தத் தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக் கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது” – என்றார்.

பனை மரங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு

பனை  மரங்களை வெட்டும் நிறுவனங்கள்  மற்றும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு  வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் மகிந்த குணரத்ன,  மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி. கிறிசாந்த பத்திராஜ  விடுத்த வேண்டுகோளுக்கமையவே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் வட மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது பெருமளவு பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை அவதானித்த பின்னர் இது தொடர்பாக சிரேஷ்ட  பொலிஸ்  அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 

சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு சிப்பாய்கள்  உட்பட 15 பேர் கைது! 

புளத்சிங்ஹல, ஹல்வத்துர பகுதியில்  மிகவும் சூட்சுமமான முறையில் நீண்ட காலமாக இயங்கிவந்த  பாரிய சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்து, நான்கு இராணுவ சிப்பாய்கள்  உட்பட 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரவுவேளையில் நடத்தப்பட்டு வந்த இந்த சூதாட்ட நிலையத்துக்கு தூர இடங்களிலிருந்தும் பலர் வந்து செல்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

கடும் நிதி நெருக்கடி – அரச செலவீனங்களை குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

2023 ஜனவரி மாதத்துக்கான செலவீனங்களைவிட அரச வருமானம் மிகக் குறைவாக இருப்பதால் செலவீனங்களை மேலும் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் குறிப்பு ஊடாக இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரித் திருத்தங்களின் மூலம் வருமானம் ஈட்டத் திட்டமிடப்பட்டிருக்கும் வருமானங்கள் கிடைக்கும் வரை, அரசசெலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரியால் முன்னுரிமை அளவுகோல்கள் அமைக்கப்படும் எனவும் அதுவரை சிறு செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை விடுவிப்பது மட்டுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அதனை மீறும் எந்தவொரு அதிகாரியும் தனிப்பட்ட முறையில் செலவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளார் என அறிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

 தனது இந்த முடிவுக்கு கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் மைத்திரி!

” 2019 இல் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

” 15 வயதில் இருந்து பைபல் வாசித்தவன் நான். எனது ஆட்சிகாலத்தில், வேறு நபர்கள் இழைத்த தவறால் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றது. அதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடமும், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமும், கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருகின்றேன்.

நான் தவறிழைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பிலும் இது உறுதியானது. என்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்தான் தவறிழைத்தனர். அதற்கு நான் பொறுப்பு கூற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

என்னை முடக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்.” – எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

சுதந்திர தினம் கரிநாளா? சீறிய ஜனாதிபதி

“இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும் – தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்றோ – கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள். அப்படியானவர்கள் தேசிய சுதந்திர தின நிகழ்வை வைத்து அரசியல் நடத்தவும் மாட்டார்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வது – கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே. அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க – நாட்டை நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்” – என்று ரணில் மேலும் குறிப்பிட்டார்.

 

வன்முறைக் கும்பல்களுக்கு வடக்கு ஆளுநர் சிவப்பு எச்சரிக்கை!

வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் வகையில் சட்டத்தை மீறும் ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையைகுழப்பும் வகையில் செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்கள் அனைவரையும் ஆளுநர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

அதன்படி பல சட்ட விரோத செயல்களை நாம் பார்த்திருக்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு நபர் மீது தாக்குதல், வீதியில் இரு குழுக்களிடையே மோதல், தற்போது நீதிமன்றத்தில் உள்ள தனியார் நிலத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைதல் மற்றும் அத்துமீறி நுழைதல் மற்றும் அரசு நிலத்தில் ஊழியர்கள் பஸ் மீது கல்லெறிதல் ஆகியவை அடங்கும்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்து வரும் நிலையில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கும் சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்கிவிப்பதற்கும் யாருக்கும் இடம் வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வாடி ஒன்றில் வேலைக்காக வந்திருந்த பதின்ம வயது சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி குடும்பமாக வாழ்ந்து வந்த திருகோணமலையை சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்களின் தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில்   அவ் இளைஞனை கைதுசெய்தனர். அத்துடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றமை அதிகரித்துக் காணப்படுவது சுட்டிக்காட்டத்தக்கது.

தீர்ப்புவரும்வரை தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆப்பு!

பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்து இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கிண்ணத்தில் ஆடுவதற்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் நடத்தை தொடர்பில் இடம்பெற்ற ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்தே சட்டமா அதிபர் சஞ்சை ராஜரத்னமின் பரிந்துரை வந்துள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்திருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் தனுஷ்க குணதிலக்க அது தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்து வருகிறார்.

தனுஷ்க தொடர்பில் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபை தற்காலிகத் தடை ஒன்றை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வைத்தியசாலையில் வரலாற்று சாதனை!

யாழ். போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு, அவருடைய தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்திருந்தார். அதற்கான சத்திர சிகிச்சை கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலமாக இடம்பெற்றது. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

“பிரிட்டன் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த புடின்”

” ரஷ்ய ஜனாதிபதி புதின் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.” – என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைன்மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு இங்கிலாந்தின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.

இந்த நிலையில் போர் தொடங்குவதற்கு முன், அதை தடுக்க ரஷிய அதிபர் புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இதில் பேசியுள்ள போரிஸ் ஜான்சன், புதின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- போருக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய புதின், என்னை மிரட்டும் தொனியில் பேசினார். ஒரு கட்டத்தில் “போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடத்தில் நடக்கும் அல்லது அதுபோல வேறு ஏதும் நடக்கும்” என மிரட்டினார். இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

‘வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா’ – கரிநாள் பேரணிக்கு அழைப்பு!

‘வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா’ என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது.

வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்தப் பேரணி மட்டக்களப்பில் 7ஆம் திகதி நிறைவுறும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்காக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஒழுங்கமைக்கப்படவுள்ளது.

பேரணிக்கான ஆதரவு கோரி சிவில் சமூகத்தினர், மாணவர்கள், மதத் தலைவர்கள், பல தரப்பட்டவர்களையும் மாணவர் ஒன்றியத்தினர் மாவட்டம் தோறும் சந்தித்து வருகின்றனர். பேரணிக்கான ஆதரவை பல தரப்பினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பெரும் எடுப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலிலிருந்து பேரணி – இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி – கரிநாள் அன்று ஆரம்பமாகவுள்ளது.

கிளிநொச்சி வரையில் முதல் நாள் பேரணி நடைபெறும். மறுநாள் 5 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து பேரணி ஆரம்பமாகி மாங்குளம் சந்தியைச் சென்றடையும். அதே நேரம் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து புறப்படும் பேரணிகளும் மாங்குளம் சந்தியை வந்தடையவுள்ளன. சகல பேரணிகளும் ஒன்றிணைந்து அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் இரண்டாம் நாளை நிறைவு செய்யும்.

மூன்றாம் நாள் – பெப்ரவரி 6 ஆம் திகதி – முல்லைத்தீவிலிருந்து புறப்படும் பேரணி, தமிழர் தாயகத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமான தென்னமரமாவடி ஊடாகச் சென்று திருகோணமலையைச் சென்றடையும்.

நான்காவது இறுதி நாளுமான பெப்ரவரி 7ஆம் திகதி திருகோணமலையிலிருந்து புறப்படும் பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்து அங்கு நிறைவடையும். இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து புறப்படும் பேரணியும் அங்கு வந்தடையும்.

ஊடகர் நிபோஜன் ரயில் விபத்தில் பலி

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் ரயில் விபத்தில் பலியாகியுள்ளார்.

ஊடக அலுவலுக்காக காலிக்கு சென்று, மீண்டும் ஊருக்கு செல்வதற்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தவேளையிலேயே, தெஹிவளையில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வலை – சிக்கினார் ‘டிஸ்கோ’!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரியான “டிஸ்கோ” என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தற்போது பிரான்சில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ரூபன்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பெண் நேற்று (29) கொழும்பு 15, டெம்பிள் வீதி, மோதரையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலர் பலி!

பாகிஸ்தானின் பெஷாவர்(Peshawar) நகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மீண்டும் மிரட்டுகிறது டெங்கு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வைப் பதிவு செய்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4 ஆயிரத்து 387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20 ஆயிரத்து 334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் – திகா வலியுறுத்து!

” உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு பலவழிகளிலும் முயற்சித்து வருகின்றது. தோல்வி பயத்தாலேயே யானை – மொட்டு கூட்டணி இவ்வாறு இழுத்தடிப்பு செய்ய பார்க்கின்றது. ஆனாலும் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என நான் நம்பவில்லை.

தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது. ஆனால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நம்புகின்றோம்.

இந்த தேர்தலில் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. களநிலைவரம் மாறியுள்ளது. தேர்தலில் மாற்றுக் கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து – தெளிவுபடுத்தி பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாம் ஆதரவு. அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நான் அமைச்சரவையில் இருந்தபோதும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். ” – என்றார்.