” பாடசாலைகளுக்கு முன்பாக நாளை கறுப்பு கொடி”

அரசின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அதிபர், ஆசிரியர் கூட்டணியும் ஆதரவு வழங்கும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன்படி, அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கறுப்பு நிற ஆடைகளை அணிந்து அல்லது கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், பாடசாலைகளுக்கு முன் கறுப்பு கொடி ஏற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

” பட்ஜட் தோற்கடிப்பு” – யாழ். மேயர் மீண்டும் பதவி இழப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதன் மூலம் இம்மானுவேல் ஆனோல்ட் மேயர் பதவியை இழந்தார்.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இன்று மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார். 5 உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ். மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

” சந்தையில் இருந்து மீளப்பெறப்பட்டன இருமல் மருந்துகள்”

உயிருக்கு ஆபத்தான மூலப்பொருள் காரணமாக பெருமளவிலான இருமல் மருந்துகள் மற்றும் லோசன்ஜ்கள் என்பன ஆஸ்திரேலியாவில் மீளப்பெறப்பட்டுள்ளன.

55 வகையான மருந்து பொருட்களே இவ்வாறு மீளப்பெறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

” சில மருந்துகளுக்கு அனாபிலாக்டிக் எதிர்வினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.” என்று TGA தெரிவித்துள்ளது.

வரி இரட்டிப்பாகும்!

superannuation வங்கிக் கணக்கில் $3 மில்லியனுக்கு மேல் வைப்பு தொகை இருந்தால், செலுத்தப்படும் வரி இரட்டிப்பாக்கப்படும் என்று நிதி அமைச்சர் Jim Chalmers தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஸ்தீரத்தன்மையை பேணும் வகையிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய வரி வகிதம் 15 இல் இருந்து 30 வீதமாக அதிகரிக்கப்படலாம்.

அத்துடன், சூப்பர் வரிச் சலுகை மாற்றங்கள் அடுத்த தேர்தல் முடியும் வரை அமுலுக்கு வராது எனவும் அவர் கூறினார்.

“ராஜபக்சக்களைக் காக்கவே ரணிலுக்கு ஜனாதிபதி பதவி”

(அப்துல்சலாம் யாசீம்)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலை கண்டால் பயம், அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

திருகோணமலை சல்லி சாம்பல்தீவு பகுதியில் இன்று (28) நடை பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் , ”

வடக்கு கிழக்கில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரங்களை நடாத்தி வருகின்றோம். இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் சில பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும் மக்கள் மத்தியில் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல் என்றாலே அச்சம் வந்துவிடுகின்றது. அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி. மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே கதிரையில் அமர்ந்திருக்கின்றார்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் மாறிவிட்டது என்று தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் போலி பிரச்சாரம் பரப்பிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் இவ்வாறான ஒரு தேர்தல் நடந்தால் தமிழ் மக்களுடைய ஆதரவு எமக்கு கிடைக்கும் என உறுதியாகிவிட்டது.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை தமிழரசு கட்சி முன்னெடுக்கும்.” -என்றார்.

தாதி மாணவியின் மார்பைத் தடவிய பொலிஸ் பரிசோதகர் கைது!

பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த யுவதியொருவரின் மார்பகத்தை தடவிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் பிரதேசத்திலுள்ள , பொலிஸ் நிலையமொன்றில் பொலிஸ் பரிசோதகராக கடமையானற்றும் 54 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில்,   களுத்துறை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறும் தாதி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருக்கு அருகில் நின்ற இந்த பொலிஸ் பரிசோதகர் தனது மார்பு பிரதேசத்தை தடவியதாக அவர் சக பயணிகளிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பஸ் வண்டியில் பயணம் செய்த பயணிகள் ஆத்திரமுற்று பொலிஸ் பரிசோதகரைத் தாக்கி  பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

நிதி அமைச்சின் செயலாளர் குறித்து சபாநாயகரிடம் கூட்டாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர் G.L.பீரிஸ் உள்ளிட்ட சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(28) சபாநாயகரை சந்தித்துள்ளனர்.

 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

” இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்குமாயின் 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அச்சடிக்கும் இயலுமை எமது நிறுவனத்திற்கு உள்ளது.” -எனவும் அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புடினுக்கு பீபியை எகிற வைத்துள்ள உக்ரைன் ஓவியம்!

ஜூடோ கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவரே ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின்.

எனினும், ஜூடோ போட்டியொன்றில் சிறுவன் ஒருவனால் பூட்டின் தோற்கடிக்கப்பட்டு, தூக்கிவிசப்படுவது போன்று சித்தரிக்கும் ஓவியம் ஒன்று, உக்ரேனில் வரையப்பட்டுள்ளது.

உக்ரேன் தலைநகர் – கீவுக்கு அருகேயுள்ள போரோடியங்கா (Borodyanka) என்ற கிராமத்தில் ரஷ்யத் தாக்குதலால் சிதைவடைந்த வீடு ஒன்றின் சுவரில் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் பாங்க்ஸியின் (Banksy) என்பரே அதனை வரைந்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரேனியர்களின் கடும் எதிர்ப்பை அந்த ஓவியம் சித்திரிப்பதாக உக்ரேனியர்கள் பலர் கருதுகின்றனர்.

இதனையடுத்து, ரஷ்ய – உக்ரேன் போர் ஆரம்பமாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டதைக் குறிக்கும் பொருட்டு, உக்ரேன் வெளியிட்ட சிறப்பு முத்திரையில், மேற்படி ஓவியம் இடம்பிடித்துள்ளது.

தற்போது, அந்த முத்திரையை வாங்க உக்ரேனியர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என AFP சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வெளியிடப்பட்டுள்ள சிறப்பு முத்திரையில் அந்த ஓவியத்துடன் புட்டினைச் சாடும் சொற்களும் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 

இலங்கைக்கு நேசக்கரம் நீட்டுகிறது ஆஸ்திரேலியாவின் ‘Sight for All’ நிறுவனம்!

ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு  செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் கண் சிகிச்சை அலகுகளுக்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை  உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.

அத்துடன், சுகாதாரப் பணியாளர்களின் திறன்  விருத்திக்கு உதவி வழங்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய பதுளை  வைத்தியசாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் களுபோவில போன்ற போதனா  மருத்துவமனைகள் மற்றும் தங்காலை ஆதார வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைக்குத்  தேவையான நவீன வசதிகளைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கண் சிகிச்சை அலகுகளில் கண்  சுகாதார ஊழியர்களின் திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கும்,
மற்றும் உபகரணங்களை  மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கருத்திட்டத்தின் கீழ் 99.42 மில்லியன் ரூபா   கிடைக்கப் பெறவுள்ளது.

” சிட்னியில் மின்சார வாகன சார்ஜர் நிலையம் ஆரம்பம்”

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆறு வருடங்களுக்குள் 33 ஆயிரம் மின்சார வாகன சார்ஜர் நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக சிட்னியில் முதலாவது மின்சார சார்ஜர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

” மின்சாரத்தில் ஓடக்கூடிய கார்களை வாங்கலாமா என சிந்தித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இத்திட்டம் நம்பிக்கையளிக்கும்.” – என்று சிட்னி மேயர் Clover Moore தெரிவித்தார்.

சிட்னியில் கத்தியுடன் காவல் நிலையத்துக்குள் புகுந்தவர் சுட்டுக்கொலை!  

சிட்னி மேற்கு பகுதியில் நள்ளிரவில் கத்தியுடன் காவல் நிலையத்துக்கு சென்ற நபரொருவர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

32 வயதான அந்நபர்மீது மார்பு பகுதியில் இருமுறை சுடப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அதிகாலை 1.32 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் வந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Auburn ரயில் நிலையத்தில் 28 வயது இளைஞர் ஒருவர்மீது இவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதன்பின்னர் பொலிஸ் நிலையத்தை அணுக முற்பட்டவேளையிலேயே அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (28.02.2023)

மேஷம் – மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். சுய தொழிலில் லாபம் அதிகம் காண புதிய முயற்சிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம் – ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நன்மைகள் நடக்கும்.

மிதுனம் – மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடகம் – கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத இழப்பை சந்திக்கலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.

சிம்மம் – சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் பணி சார்ந்த ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும்.

கன்னி – கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேடிய ஒரு விஷயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

துலாம் – துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புணர்வு தேவை.

விருச்சிகம் – விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நட்பு வட்டம் வளரக்கூடிய வாய்ப்பு உண்டு. எதிர்பாராத திருப்பங்கள் வரலாம். குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் முன் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

தனுசு – தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்காத பணவரவு காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் மூலம் சில தொந்தரவுகளை சந்திக்கலாம்.

மகரம் – மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உள்ளம் நெகிழும் படியான நிகழ்வுகள் நடக்கவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத பயணங்களில் மூலம் பலன்களை பெற வாய்ப்பு உண்டு.

கும்பம் – கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தையில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைக்கு ஏற்ப பலன்கள் பெறுவீர்கள்.

மீனம் – மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் நன்மைகள் நடக்கும்.

“LGBTQIA+ சமூகத்தினரின் பேரணியில் பங்கேற்ற முதல் அரச தலைவர்”

LGBTQIA+ சமூகத்தினர் நடத்திய நிகழ்வொன்றில் பங்கேற்ற முதலாவது ஆஸ்திரேலிய அரச தலைவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் பிரதமர் Anthony Albanese.

பெப்ரவரி 17 முதல் மார்ச் 5 ஆம் திகதிவரை இவர்களின் நிகழ்வு சிட்னியில் நடைபெற்றது.

LGBTQIA+ சமூகத்தினரின் அடையாளம், பன்முகத்தன்மை என்பன உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தியே இம்முறை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Malcolm Turnbull 2016 இல் நடைபெற்ற LGBTQIA+ சமூகத்தினரின் நிகழ்வில் பங்கேற்றிருந்தாலும் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. எனவே, பேரணியிலும் பங்கேற்ற முதல் அரச தலைவர் என்ற பெருமையை பிரதமர் Anthony Albanese பெற்றுள்ளார்.

Queensland மாநில அரசுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை…

விசேட தேவையுடைய 13 வயது சிறுவனை, Queensland தடுப்பு நிலையத்தில், சிறையில் அடைத்து வைத்தமை கொடூரமாகும். இந்த பொறுத்தமற்ற நடவடிக்கை இளைஞர் நீதிக்கொள்கையை மீறியுள்ளது  – என்று சிறார் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Queensland மாநிலத்தில் இளைஞர் குற்றம் தொடர்பில் தற்போது சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், மேற்படி செயலுக்கு Queensland மாநில அரசு பொறுப்புக்கூற வேண்டும் என நீதிபதி Tracy Fantin வலியுறுத்தியுள்ளார்.

” குழந்தையை நீங்கள் விலங்குபோல் நடத்தினால், அவர்கள் ஒரு மிருகத்தை போல நடந்துகொள்வது ஆச்சரியமல்ல.” எனவும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார். குற்றத்தை ஒப்பு கொண்டதையடுத்து அவர், தடுத்து வைக்கப்பட்டார்.

சிறுவன் கடந்த 87 நாட்கள், இளைஞர் தடுப்பு மையத்தில் கழித்தது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன,  இதில் 78 நாட்கள் அவன் ஒவ்வொரு நாளும் 20 மணி நேரத்திற்கும் மேலாக அவனது அறையில் அடைக்கப்பட்டிருந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 10 நாட்கள் அவர் முழு நாளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவின் கூட்டத்தில் பங்கேற்று காயமடைந்த வேட்பாளர் உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தியால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு அனுமதி வேண்டாம்!

“தமிழக மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடிக்கும் முறைமையை அனுமதித்தால் அவர்கள் இழுவைமடிப் படகுகளில் வந்தே வடக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பார்கள்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அனுமதிபெற்று மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சிலர் இழுவைமடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்கு செய்தாலும் சரி ,எங்கு செய்தாலும் சரி அது இல்லாதொழிக்கப்படவேண்டும். இழுவைமடித் தொழிலை தடைசெய்யும் சட்டத்தை தனிநபர் சட்டவரைவாக நான் சமர்ப்பித்திருந்தேன். அது நல்லாட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனைப் பிரயோகிக்கவில்லை. அதற்காக இழுவைமடித் தொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

தமிழக – வடக்கு மீனவர்கள் சிறிய நீர் நிலையால் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இரு தரப்பினரும் நாட்டுப் படகில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டுவது சகஜமான விடயம். எனவே, இந்தப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில்தான் அணுகவேண்டும்.

அனுமதி பெற்று மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் இந்திய மீனவர்கள் இழுவைமடியிலேயே வந்து மீன்பிடிப்பார்கள்” – என்றார்.

ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து ‘ஐஸ்’ பாவித்த மூன்று யுவதிகள் கைது!

கண்டி, பஹிரவகந்த பிரதேசத்தில் ஹோட்டல் அறையொன்றை வாடகைக்கு எடுத்து அதில் “ஐஸ்”போதைப் பொருளை பாவித்துக்கொண்டிருந்த மூன்று யுவதிகளை கண்டி பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வட்டபுலுவ, அம்பிட்டிய மற்றும் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதிகள் ஹோட்டலில் 3 ஆயிரம் ரூபாவுக்கு அறையொன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த மூன்று யுவதிகளும் “ஐஸ்”போதைப் பொருள் பாவிப்பதற்காக இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் யுவதிகள் மூவரையும் போதை வஸ்து புகைத்துக் கொண்டிருந்தபோது கைதாகியுள்ளனர்.

யுவதிகளை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவர்களை மார்ச் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

NSW நாடாளுமன்ற தேர்தல் – வெற்றி யாருக்கு? வெளியாகியுள்ள புதிய கருத்து கணிப்புகள்…

New South Wales மாநில நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், புதிய இரு கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய இரு பிரதான கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவிவருகின்றது. ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்படக்கூடும்.

ஆயிரத்து 14 வாக்களர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், லேபர் கட்சிக்கு செப்டம்பர் காலப்பகுதியில் இருந்த ஆதரவு 4 வீதத்தால் குறைவடைந்து, தற்போது 36 வீதமாக காணப்படுகின்றது. லிபறல் கூட்டணிக்கான ஆதரவு இரண்டு சதவீதம் அதிகரித்து தற்போது 37 வீதமாக காணப்படுகின்றது.

எனினும், விருப்பு வாக்கு விகிதத்தில் லேபர் கட்சி 52-48 என்ற வகையில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலைமை நீடித்தால் இரு பிரதான கட்சிகளாலும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறமுடியாமல் போகக்கூடும் எனவும், மாற்று தரப்பின் ஆதரவை பெற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை, திங்கட்கிழமை வெளியான இரண்டாவது கருத்து கணிப்பின் பிரகாரம், லேபர் கட்சிக்கான ஆதரவு தளம் ஏறுமுகம் காட்டியுள்ளது. எனினும், லிபறல் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சி கடுமையாக போராட நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.