” இது அரச பயங்கரவாத சட்டம்” – ரணிலுடன் முட்டிமோத தயாராகிறார் மனோ!

” உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது ஜனாதிபதிக்கு கடுமையான – கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைவிடவும், புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை. எனவேதான் அதனை பயங்கரவாத தடைச்சட்டம் என சொல்வதைவிட, அரச பயங்கரவாத தடைச்சட்டம் எனக்கூறுவது பொருத்தமாக இருக்கின்றது.

ஜனாதிபதிக்கு கடுமையான – கொடுமையான அதிகாரத்தைக் கொடுக்கின்றது. தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளை தடைசெய்யலாம். அது உறுப்பினர்களுக்கு பாதகமாக அமையும். மக்களுக்கு பிரச்சாரம் செய்யவும், ஒன்றுகூட முடியாத சூழ்நிலையும் உருவாகும்.” – என்றார்.

 

” மரண சான்றிதழ் வேண்டாம் – நீதியே வேண்டும்” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இப்போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தந்தையை கொலை செய்த இரு மாணவர்கள் உட்பட மூவர் கைது – யாழில் பயங்கர சம்பவம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் தமது தந்தையை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கொலையானவரின் இரு மகன்களும், அவர்களது நண்பன் ஒருவருமான மூவர் கைது செய்யப்பட்டனர்.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று காலை கழுத்தில் பாரிய வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாகக் குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றை அமைத்து அங்கு தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் இன்று அவரது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கொலையாவனவரின் இரு மகன்கள் மற்றும் கொலைக்கு உதவிய குற்றத்தில் மகன்களின் நண்பன் ஒருவரும் கைது செய்யப்பட்டு , கொடிகாமம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரு மகன்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் இருவரும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் என்றும், பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வருகின்றனர் என்றும், தந்தை மிக மோசமாக நடந்து கொண்டமையால் அவரைக் கொலை செய்வதற்கு முடிவு செய்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள் இரண்டு அருகில் உள்ள குளம் ஒன்றினுள் வீசப்பட்டு இருந்த நிலையில், சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மீட்கப்பட்டது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தலமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த சம்பவம் வியாழக்கிழமை (30) பதிவாகியுள்ளது.

இந்தூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கிணற்றுக்கு மேல் வழிபாடுகளில் ஈடுபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கிணற்றுக்கு மேலேயுள்ள காங்ரீட் (concrete) தளமொன்றில் பக்தர்கள் ஏறி நின்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனால், பாரம் தாங்காமல் காங்ரீட் தளம் உடைந்ததிலேயே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது.

40 அடி ஆழமான அந்தக் கிணறு, 4 தசாப்தங்களுக்கு முன்னர் மூடப்பட்டதன் பின்னரே இந்த வழிபாட்டுத்தலம் நிர்மாணிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan)இறந்தவர்களின் குடும்பத்திற்கு 500,000 இந்திய ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆபாசப்பட நடிகை விவகாரம் – ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரகசியமாக பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நடிகையுடன் தொடர்பில் இருந்ததை மறைத்ததாக எழுந்த முறைப்பாட்டில் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ட்ரம்ப்பும், ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாச நட்சத்திரமும் ஆபாச உறவில் இருந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே ட்ரம்ப் மீது பல பெண்கள் பாலியல் முறைப்பாடுகள் தெரிவித்துள்ள நிலையில், அதனை மறைப்பதற்காக ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பாக டிரம்ப் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது டிரம்ப் மீதான் இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆபாச நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரங்களையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் கூறப்படுகிறது.

ந்த நிலையில், கிரினிமல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ட்ரம்ப் அவராகவே முன் வந்து சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் அவரை அமெரிக்க காவல்துறையே நேரில் சென்று கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் அமெரிக்காவில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படுவது போலவே, ட்ரம்ப் கையிலும் விலங்கு மாட்டி, சட்ட விதிகளுக்கு உட்படுத்தி கைது செய்வார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு 2024 -ஆம் ஆண்டு வர இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் குற்றம் சாடியுள்ளார். மேலும் இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

” ரயில் வலையமைப்பு குறித்து சுயாதீன விசாரணை” – NSW

சிட்னி ரயில் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று New South Wales மாநில லேபர் அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட New South Wales மாநிலத்தின் புதிய போக்குவரத்து அமைச்சர் கூறியவை வருமாறு,

” சிட்னி ரயில் வலையமைப்பில் பல பிரச்சினைகள் உள்ளன. தாமதம், செயழிலப்பு, கட்டமைப்பு சிக்கல் என சிற்சில பிரச்சினைகள் கடந்த காலங்களில் நிலவின. இதனால் உரிய சேவையை வழங்க முடியாமல்போனது.

சிக்கல்களை இனங்கண்டு சேவைகளை இலகுப்படுத்தும் வகையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதே இதன் நோக்கம். மாறாக மறுசீரமைப்பு என்பது ‘வேட்டை’ கிடையாது.” – என்றார்.

யாழில் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாகக் குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றை அமைத்து அங்கு தங்குவதை வழமையாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் பாரிய வெட்டுக் காயங்களுடன் சடலமாக அவர் மீட்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாழ்க்கை துணையான கர்ப்பிணி பெண்ணை கொலை செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

தனது வாழ்க்கை துணையை கொலை செய்த நபருக்கு 25 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்படும்போது அவர் கர்ப்பம் தரித்திருந்தார். ஏற்கனவே அவருக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர்.

Michelle Darragh கருணை உள்ளம் படைத்தவர். சமூக சேவைமூலம் பலரின் அன்பை தேடியவர்.

தனது வாழ்க்கை துணை தற்கொலை செய்ய முற்பட்டபோதுகூட அவரை காப்பாற்றியுள்ளார்.

ஆனால் 2021 ஒக்டோபர் மாதம் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய Benjamin Coman (வயது 31) கைது செய்யப்பட்டு, அவர் தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் Victorian உயர் நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவரை 25 ஆண்டுகள் சிறையில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் நீதிமன்றம் வந்திருந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் Darraghவின் தாயாரின் கண்களில் இருந்து விழிநீர் வடிந்தது.

” ஜனாதிபதியும் சொத்து விபரத்தை வெளியிட வேண்டும்”

” புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.” – என்று நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இச்சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்று.

இந்நிலையில் இச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர்,

” புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கான, சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவடைந்துள்ளது. எனவே, அந்த ஆணைக்குழுவுக்கு புதிய சட்டத்தின் பிரகாரம் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையைக்கருதி ஓய்வுபெற்றவர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால் சேவைகள் சிறப்பாக இடம்பெறவில்லை. எனவே, சிறப்பாக செயற்படக்கூடியவர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன.

சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டுவந்தது. எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

13 ஆண்டுகளாக தாயாரின் உடலை ‘மம்மி’ போல் பாதுகாத்தவருக்கு சிறை!

போலந்து நாட்டில் 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை முதியவர் ஒருவர் சோபாவில் வைத்து பதப்படுத்தி, பாதுகாத்து வந்து உள்ளார்.

போலந்து நாட்டின் ராட்லின் பகுதியில் வசித்து வருபவர் மரியான் (வயது 76). இவரது தாயார் கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்து உள்ளார். அவரது இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன.

இந்த நிலையில், அவரது உடலை எடுத்து வந்து தனது வீட்டில் சோபாவில் வைத்து ரசாயன பொருட்களை கொண்டு எகிப்தின் ‘மம்மி’ போன்று பதப்படுத்தி, மரியான் பாதுகாத்து வந்து உள்ளார்.

அவரது மீது கொண்ட அன்பு மிகுதியால், இதுபோன்று அவர் செய்தபோதும்,பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அவரது வீட்டுக்கு உள்ளூர் பொலிஸார் சென்றனர். இதில், 13 ஆண்டுகளாக மரியானின் தாயாரின் உடல் பாதுகாக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. சோபாவின் மீது பழைய செய்தித்தாள்களின் குவியலின் மீது உடலை வைத்து இருந்து உள்ளார்.

இதுபற்றி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் ஜோவான்னா ஸ்மார்க்ஜீவ்ஸ்கா கூறும்போது, மரபணு பரிசோதனை அறிக்கைகளின்படி, ஜாத்வீகா என்ற அந்த பெண் 2010-ம் ஆண்டு ஜனவரியில் உயிரிழந்து உள்ளார்.

அதே மாதத்தில் 16-ந்தேதி உடலை புதைத்து உள்ளனர். ஆனால், உடனே அந்த உடலை அவரது மகனான மரியான் எடுத்து சென்று ‘மம்மி’ போன்று பதப்படுத்தி வைத்து உள்ளார். 2010-ம் ஆண்டில் இருந்து அந்த உடல் அவரது வீட்டில் இருந்து உள்ளது என கூறியுள்ளார்.

எனினும், 13 ஆண்டுகள் கழித்தும் அந்த உடல் சிறந்த முறையில், அப்படியே பாதுகாப்பாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த முதியவர் ரசாயன பொருட்களை பயன்படுத்தி, பாதுகாத்து வந்திருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.

“மாணவிமீது வன்கொடுமை – அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை”

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட – அம்பலங்கொட,
கொடஹேன கனிஷ்ட வித்தியாலய முன்னாள் அதிபருக்கு 30 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு மேலதிகமாக 15 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்த நீதியரசர், 30 வருட சிறை தண்டனையை 10 வருட காலத்தில் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டார்.

2004 ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப் பகுதியில் வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த 16 வயதுக்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக இந்த அதிபருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

” லிபறல் கட்சி காணாமல்போய்விடும்”

” நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி செயல்திறனுடன் செயற்படவில்லை. இப்படியே போனால் லிபறல் கட்சி காணாமல்போய்விடும். எனவே, மக்கள் அவர்களுக்கு தேர்தல் ஊடாக சிறந்த பதிலை வழங்க வேண்டும்.” –

இவ்வாறு ஆஸ்திரேலிய பிரதமர் Albanese தெரிவித்தார்.

கிழக்கு மெல்போர்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” லிபறல் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதால் எதுவும் நடக்கபோவதில்லை. அவர்கள் நாடாளுமன்றில் வெறுமனே அமர்ந்திருக்கத்தான்போகின்றனர்.” எனக் குறிப்பிட்டு அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர்.

” தமிழர்களுக்கு அபிவிருத்தி அல்ல – அரசியல் தீர்வே முக்கியம்” – சந்திரிக்கா

” தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வை காண வேண்டியது அவசியம்.” – என்று இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையார் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எனக்கு இன்று வயதாகிவிட்டது, இளம் வயது முதல் இன்றுவரை இனப்பிரச்சினை பற்றி கதைத்துக்கொண்டிருக்கின்றோம். அப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியில் நிலையானதொரு தீர்வு அவசியம்.

வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்து, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால்போதும், வேறொன்றும் அவசியமில்லை என சிலர் கூறுகின்றனர். இது ஏற்புடையக்கருத்து அல்ல. இவ்வாறான கருத்தை நம்ப வேண்டாம்.

அவர்களுக்கான (வடக்கு, கிழக்கு மக்கள்) உரிமைகளை ஏன் வழங்க முடியதா? உரிமைகளை வழங்காவிடின் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. இனப்பிரச்சினையை இனியும் நீடிக்க இடமளிக்ககூடாது.

13 பற்றி கதைக்க வேண்டாம் என எனக்கு சொல்கின்றனர். அவ்வாறு கதைக்காமல் இருக்கமுடியாது. 13 போதுமென மக்கள் கூறுவார்களாயின் குறைந்தபட்சம் அதை செய்வதற்காவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டை நேசிப்பவர்கள் போராடியாவது 13 ஐ அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ” – என்றார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.03.2023)

மேஷம் – மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். சுயதொழிலில் லாபம் அதிகரிக்க கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றியில் இடையூறுகள் வரக்கூடும்.

ரிஷபம் – ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய முடிவு எடுப்பது பல வகைகளில் நன்மை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் நட்புகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்கும்.

மிதுனம் – மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் தவறவிடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் செலவுகளை செய்யாதீர்கள்.

கடகம் – கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிலருக்கு உங்கள் செயல் அதிருப்தியாக இருக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து சொல்லுங்கள்.

சிம்மம் – சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட போகிறது, மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு துறை சார் நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

கன்னி – கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் குறையும். சுய தொழிலில் நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசரம் வேண்டாம்.

துலாம் – துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பாசம் மற்றவர்களுக்கு புரியக்கூடும். எதிர்பாராத விஷயங்களில் நீங்கள் மகிழ்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும்.

விருச்சிகம் – விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை நடக்கும்.

தனுசு – தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல செய்திகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் உடன் இருப்பவர்களை தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை வளரும்.

மகரம் – மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுமைகளை படைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்கள் வெறுப்பு விருப்புகளை மறந்து செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் வட்டம் விரிவடைய கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கும்பம் – கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பப் பிரச்சனைகளில் மற்றவர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காண பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வீண் விரயங்கள் செய்யாதீர்கள்.

மீனம் – மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களின் சேர்க்கையை தவிர்ப்பது நல்லது.

“அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கைக்கு முதலாளிமார் போர்க்கொடி”

” ஆஸ்திரேலியாவில் நிலவும் பணவீக்கத்துக்கேற்ப தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 7 சதவீத அதிகரிப்பு அவசியம் என்ற கோரிக்கை ஏற்புடையது அல்ல. ” – என்று முதலாளிமார் தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே முதலாளிமார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பெப்ரவரி மாதத்துக்கான பணவீக்கம் 6.8 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் சற்று குறைவடைந்திருந்தாலும், வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே சம்பள உயர்வுக்கான கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – அமெரிக்காவில் 9 படையினர் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின்போது இரு இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 9 படையினர் பலியாகியுள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில் ராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பலியான 9 படையினர் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரால் பிரிந்த கணவன், மனைவி 3 தசாப்தங்களுக்கு பிறகு சங்கமம்!

( அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை, இலுப்பைகுளம் பகுதியிலிருந்து யுத்தம் காரணமாக காணாமல்போய் 33 வருடங்கள் பிரிந்திருந்த கணவன் , மனைவி மீண்டும் இணைந்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு திருகோணமலை ஏழாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது திசை மாறிச் சென்ற செல்வரட்டினம் யோகேஸ்வரி (70வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.

இந்நிவையில் இந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை வைத்து, வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.

1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பிறந்த செல்வரத்தினம் யோகேஸ்வரி (70 வயது) என்பவர் 1990 ஆம் ஆண்டு 06 மாதம் ஏழாம் கட்டை பகுதியில் காணாமல் போனதாக கோபால் செல்வரத்தினம் (74வயது) தெரிவித்தார்.

அன்று தொடக்கம் மனைவியை தேடி வந்ததாகவும் மனைவி உயிரிழந்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 26 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாரின் உதவியுடன் மனைவி உயிரோடு இருப்பதாக தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கு சென்றபோது மனைவியின் தோற்றம் மாறி இருந்த போதிலும் நாடியில் மச்சம் இருந்ததும் தலையில் காயம் இருப்பதையும் கண்டேன்.

அப்போது இவர் தான் என்னுடைய மனைவி எனவும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த நேரம் என்னுடைய மனதில் ஆழ்ந்த சந்தோசம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு இவர்தானா தனது தாய் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணினுடைய உறவினர்கள் நான்கு பேரின் பெயர்களை 33 வருடங்கள் காணாமல் போயிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட செல்வரட்ணம் யோகேஸ்வரி என்ற பெண் தனது பிள்ளைகள் மத்தியில் கூறியதை அடுத்து தனது தாய்தான் என உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அத்துடன் ஏழு வயதில் காணாமல் போன தனது தாய் 41 வயதான நிலையில் நோயுற்ற நிலையில் தம்மிடம் வந்து சேர்ந்தது தமக்கு கடவுள் கொடுத்த வரம் எனவும் அவரது மகன் எமக்கு தெரிவித்தார்.

அதே நேரம் தனது தாயின் முகத்தை காணாத நிலையில் தாயின் உறவினர்களின் உதவியுடன் தன்னை பெற்றெடுத்த தாய் இவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மற்றுமொரு மகள் சந்தோசமாக தெரிவித்தார்.

தாங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தாய் இல்லாத கவலை இருந்த போதிலும் 33 வருடங்களுக்கு பின்னர் தனது தாயை கண்டது தனக்கு ஆழ்ந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தான் தொடர்ச்சியாக தனது தாயை ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டம் இலுப்பை குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு தனியாக சீவிப்பதற்கு எவ்வித வீடு மற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
குறித்த தாய் தற்போது வசித்து வரும் தனது மூத்த மகளின் நிலைமை பொருளாதார கஷ்ட நிலை மட்டுமல்லாது உளநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் அங்கு வசித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.

கிரவல் மழைக்கு கீழே வீடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட தனது தாயை பார்த்துக் கொள்வதற்கு பொருளாதார சிக்கல் மாத்திரமில்லாமல் நோயுற்ற தாயைப் பார்ப்பதற்கு கூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

ஆகவே யுத்தம் காரணமாக 33 வருடங்கள் திசை மாறி வாழ்ந்து வந்த இந்த பெண்ணுக்கு யாராவது உதவி செய்ய முன்வருவார்களா?

 

“இலங்கை முன்னேற இதுவே கடைசி சந்தர்ப்பம்” –

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசு அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில் மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சிலியில் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்புளுயன்சா தொற்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட 53 வயதான நபர் ஒருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளான நபரின் உடல் நிலை சீராக காணப்படுவதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபருக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட விதம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

H5N1 வகையை சேர்ந்த பறவைக் காய்ச்சல் சிலியில் காட்டு விலங்குகளிடையே கடந்த ஆண்டில் பதிவாகியிருந்தது.

பறவைகள் அல்லது கடல் பாலூட்டிகளிடமிருந்து இந்த தொற்று மனிதர்களிடையே பரவக்கூடும் என சிலியின் சுகாதார அதிகாரிகள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், பறவைக் காய்ச்சலானது மனிதரில் இருந்து இன்னுமொரு மனிதருக்கு பரவுமா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கொலையில் முடிந்தது காதல் விவகாரம்!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.