லண்டன் பறக்கிறார் ரணில் – ஆஸி. பிரதமரை சந்திக்கவும் ஏற்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி லண்டன் செல்கின்றார்.

சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார்.

அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என தெரியவருகின்றது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை எழுத்துமூலம் அனுப்ப முடியும் என நீதி அமைச்சர் கூறினார்.

அத்துடன், பயங்கரவாதத் தடை சட்டமூலம் தொடர்பில் எந்த கட்சியுடனும் கலந்துரையாடுவதற்கு தயார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாத்திரமே இதுவரையில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

” ஆதி லிங்கேஸ்வரரை வழிபட வந்தோரிடம் தகவல் சேகரித்தமை தவறு”

” நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும்.” என்று நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலைக்கு இன்று விஜயம் செய்த அவர், ஆதி  இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் இரு கட்டளைகள் வழங்கப்பட்டதற்கினங்க அந்த விக்கிரகங்கள் மீளவும் பிரதிஸ்டை செய்யும் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனவே நீதிமன்றில் தவறான கருத்துக்கள் எதும் சொல்லப்பட்டால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய தினம் நேரிலே ஆலயத்திற்கு சென்று விடயங்களை அவதானித்துள்ளோம். இது ஒரு மகிழ்ச்சியான விடயம்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் அடையாள அட்டைகள் பதிவுசெய்யப்பட்டமை தேவையற்ற ஒரு விடயம்.

இன்றையதினம் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை. பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்வதற்கு இடமளிக்கவேண்டும் என்பதே நீதிமன்றின் கட்டளையாக இருக்கின்றது.

அதனை மதித்து அனைத்து அரச உத்தியோகதர்களும் செயற்ப்படவேண்டும். செயற்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

ஈராண்டுகளுக்கு வீட்டு வாடகை அதிகரிப்பை தடுக்க நாடாளுமன்றில் பிரேரணை!

ஆஸ்திரேலியாவில் அடுத்த இரு வருடங்களுக்கு வீட்டு வாடகை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

பசுமைக்கட்சியால் குறித்த பிரேரணை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரேரணையில் , ஆஸ்திரேலியா முழுதும் இரு வருடங்களுக்கு ஒரே மதிப்பில் வீட்டு வாடகை வசூலிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், வட்டி விகிதத்தை அதிகரிக்கும் மத்திய வங்கியின் தீர்மானத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவதற்கான முன்மொழிவும் இடம்பெற்றுள்ளது.

இரு ஆண்டுகள் வாடகை அதிகரிப்பு இடம்பெறக்கூடாது என்ற போதிலும் அந்த கால எல்லை முடிவடைந்த பிறகு ஈராண்டுகளுக்கு ஒருமுறை 2 வீதத்துக்குட்பட்ட வகையில் வீட்டு வாடகையை அதிகரிக்கும் ஏற்பாடும் இதில் உள்ளது.

மத்திய அரசின் வரவு – செலவுத் திட்டம் மாதம் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த யோசனையும் சபைக்கு வருகின்றது.

” தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம்”

” பொது முடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுமுடக்கம் முன்னெடுக்கப்பட்டது. மக்களின் பேராதரவுடன் பொதுமுடக்கம் வெற்றிபெற்றது. இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“பொதுமுடக்கத்தை ஒரு தரப்பினர் வெற்றி என்று சொல்வார்கள். மற்றொரு தரப்பினர் தோல்வி என்பார்கள். ஆனால், பொதுமுடக்கத்தை அமைதியாக மக்கள் முன்னெடுத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

HGS மூலம் PR உள்ளவர்களும் வீடு வாங்கலாம் – ஜுலை முதல் திட்டம் அமுல்!

வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வீட்டு உத்தரவாதத் திட்டத்தின் அளவுகோல்களை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய ஆஸ்திரேலியாவில் வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

புதிய ஏற்பாடு எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

” தகுதி அளவுகோல்களை விரிவுபடுத்துகிறோம். அதிகளவான ஆஸ்திரேலியர்கள் வீடு வாங்குவதை ஊக்குவிப்பதே இத்திட்டம்.” என்று மத்திய அரசின் Housing Minister Julie Collins தெரிவித்தார்.

முதல் வீட்டு உத்தரவாதம் மற்றும் பிராந்திய முதல் வீட்டு உத்தரவாதத் திட்டங்கள் திருமணமானவர்கள் மற்றும் தனிமையில் உள்ளவர்களுக்கும், அதே போல் இயல்புநிலை உறவுகளில் உள்ளவர்களுக்கும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அந்தக் கட்டுப்பாடுள் தளர்த்தப்படுகின்றன.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல், முதல் வீட்டு உத்தரவாதம் மற்றும் பிராந்திய முதல் வீட்டு உத்தரவாதத்திற்கு நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக விண்ணப்பிக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில் சொத்து இல்லாத முதல் வீடு வாங்காதவர்களுக்கும் இந்தத் திட்டங்கள் கிடைக்கும்.

முதல் வீட்டு உத்தரவாதம் மற்றும் பிராந்திய முதல் வீட்டு உத்தரவாதம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும், மத்திய அரசு, கடனில் 15 சதவீதம் வரை உத்தரவாதமாக செயல்படுகிறது. இது தகுதியான வீடு வாங்குபவர்களுக்கு கடன் வழங்குபவர்களுக்கு அடமானக் காப்பீட்டை செலுத்தாமல் 5 சதவீத வைப்புத்தொகையுடன் வீட்டை வாங்க உதவுகிறது.

குடும்ப வீட்டு உத்திரவாத விண்ணப்பதாரர்களுக்கான அளவுகோல்கள் தனித்த இயற்கையான அல்லது தத்தெடுக்கப்பட்ட பெற்றோரை சார்ந்திருப்பவர்களுக்கு அப்பால் விரிவுபடுத்தப்படும்.

இந்த மாற்றம் என்பது, அத்தை, மாமா மற்றும் தாத்தா பாட்டி போன்ற குழந்தைகளின் சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்கும் தகுதியுள்ள கடன் வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

அதேவேளை, ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கும் இத்திட்டம்மூலம் பயன் அடைய முடியும்.

வீடு புகுந்து ஐவர் சுட்டுக்கொலை – அமெரிக்காவில் பயங்கரம்!

வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டு இருந்தார்.

இதனால் அவரின் அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அந்த வீட்டில் இருந்த நபர்கள் சிலர் வெளியே வந்து, துப்பாக்கியால் சுட்டு கொண்டு இருந்த அந்த நபரிடம் அதை நிறுத்தும்படி கூறினர். அதற்கு அந்த நபர் “இது, என் வீடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்னை நிறுத்த சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை” என கோபத்துடன் கூறினார்.

இதனால் அவர்கள் அந்த நபரை திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டனர். பின்னர் அந்த நபர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். வீட்டினுள் இருந்த ஒரு பெண் வந்து கதவை திறந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய அந்த நபர், வீட்டுக்குள் சென்று கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுவடுதுபோல சுட்டு தள்ளினார். இதில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். அதன் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

“குயின்ஸ்லாந்தில் முதலை தாக்குதலுக்கு இலக்கான மீனவர்”

வடக்கு குயின்ஸ்லாந்தில் முதலைத்தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில், அவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.

Kennedy ஆற்றங்கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 65 வயதான Laura என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

நேற்று மாலையில் இருந்து தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, வடக்கு ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுவன், சூறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

Hobart மைதானத்துக்கு மத்திய அரசு $240 மில்லியன் நிதி பங்களிப்பு!

Hobart இல் புதிய மைதானத்தை கட்டுவதற்கு மத்திய அரசு $240 மில்லியன் நிதி பங்களிப்பு வழங்க தீர்மானித்துள்ளது என்று பிரதமர் Anthony Albanes அறிவித்தார்.

ஆஸ்திரேலிய கால்பந்து லீக்கை இலக்கு வைத்து தாஸ்மேனியா மாநிலத்தில் ஒரு புதிய கால்பந்து கிளப்பை நிறுவுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

புதிய மைதானம் கட்டப்படுவதன் மூலம் 4,200 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் அல்லது எத்தனை பார்வையாளர்கள் அங்கு அமர முடியும் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

இத்திட்டத்துக்கு Tasmanian அரசு  $375 மில்லியனை வழங்கவுள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.04.2023)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சியுடன் இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும்.

ரிஷபம் -ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தைரியம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலர் தீர்த்த யாத்திரை மேற்கொள்வார்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய விடயங்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பெருகும். பிற்பகலுக்கு மேல் பிறரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சிலர் மகான்களை தரிசித்து ஆசி பெருவீர்கள்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எதிரிகள் தானாக ஒழிவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொது சேவைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதிய மனிதர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நீண்ட காலம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு காரிய தடைகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். சமுதாயத்தில் பெரிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும் தம்பதிகளை இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் புதிய காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக பலமுறை யோசித்து ஈடுபடுவது கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வந்து சேரும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களின் ஆதரவும், அதனால் ஆதாயமும் உண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய காரியங்களில் ஈடப்பட கூடாது. வாகன பயணத்தின் போது கவனம் தேவை. சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகையால் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்குகின்ற யோகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும், ஆசிகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் சிலருக்கு எதிர்பாராத தனவரவு இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள்.

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்! ஜோன் அமரதுங்கவை நியமிக்க ஏற்பாடு!!

வடக்கு மாகாண ஆளுநராக ஜோன் அமரதுங்க மே 7 நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளாநர் ஜீவன் தியாகராஜாவின் இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளார்.

ஜனதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய ஆளுநர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்துபோது நியமனம் பெற்றவர்கள். எனினும், பதவியேற்ற கையோடு ரணில் ஆளுநர்
மாற்றங்களைச் செய்யவில்லை.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான செந்தில் தொண்டமானை நியமிக்க நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கிலும் ஆளுநரை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இனப்பிரச்சினை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு?

அமெரிக்காவில் செயற்பட்டுவரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளன.

இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் என்ற செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மற்றுமொரு வேலைத்திட்டமாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரினதும் பங்கேற்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்வு காண முடியும் எனவும், சர்வஜன வாக்கெடுப்பை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 இற்குள் ஏழு லட்சம் பேர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வர்

2022 – 2024 காலப்பகுதிக்குள் சுமார் ஏழு இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஆஸ்திரேலியா வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற விதிமுறைகளும், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும், வேலை விடுமுறை விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.

2022-23 இல் 04 லட்சமாகவும், 2023-2 இல் 315,000 ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோவிட்-க்கு முந்தைய குடியேற்ற நிலைக்குத் திரும்ப ஆஸ்திரேலியா 2029 அல்லது 2030 வரை காத்திருக்க வேண்டும் என்று சமீபத்திய அறிக்கை கணித்துள்ளது.

நிழல் உலக தாதா குடு அஞ்சு பிரான்ஸில் கைது!

பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘இரத்மலானே குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சிங்கராகே சமிந்த சில்வா பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேசப் பொலிஸாரால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

 

நீர்கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிப் படுகொலை

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில் இவரின் வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த குடுமபஸ்தரின் உடலில் 10 இற்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீர்கொழும்பு பொலிஸார், கொலைச் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை என்று தெரிவித்தனர்.

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

தலைநகர் கீவ் உட்பட் உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டினிப்ரோ நகரில் பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார். மத்திய நகரான உமானில் ஏவுகணை தாக்கிய ஒன்பது மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று மோசமாக சேதமடைந்திருப்பது சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.

கிரமன்சுக் மற்றும் பல்டாவா நகரங்களிலும் வெடிப்புகள் இடம்பெற்றிருப்பதாக இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கீவில் 11 ஏவுகணைகள் மற்றும் இரண்டு தாக்குதல் ஆளில்லா விமானங்களும் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 51 நாட்களில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் தலைநகரை தாக்கி இருப்பது இது முதல்முறை என்று கீவ் நகர இராணுவ நிர்வாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் அழிவுக்கு உள்ளாகி இருக்கும் பக்மூத் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் கடுமையாகப் போரிட்டு வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம் உக்ரைன் நிர்வாகம் ரஷ்யா கைப்பற்றி இருக்கும் நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளை மீட்பதற்கு பாரிய போர் நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

” வருபவர்கள் வரட்டும் – அது எங்களுக்கு சவால் அல்ல” – பிரதமர்

” 2023 இல் நான்கு இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டுக்கு வந்தாலும் அதனால் பெரும் சவால் ஏற்படப்போவதில்லை.” என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

” வருடமொன்றில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்காது.” எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு குடிவரவு சட்ட மாற்றத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருவார்கள் எனவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையான வீட்டு வாடகை விவகாரத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மேலும் கூறினார்.

ஆஸி. குடிவரவு முறையில் மறுசீரமைப்பு!

ஆஸ்திரேலிய குடிவரவு முறையின் மறுசீரமைப்பு தொடர்பான விபரங்களை உள்துறை அமைச்சர் Clare O’Neil அறிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு விசா முறைமையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

குடிவரவு தொடர்பான தற்போதைய முறைமையானது அதன் நோக்கத்தை ஈடுசெய்யவில்லை என மதிப்பாய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துறைசார் நிபுணத்துவ ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு தற்போதுள்ள 53, 900 டொலர்களில் இருந்து 70 ஆயிரம் டொலர்களாகவும், சுமார் 17 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர விசாவை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான பாதையை ஏற்படுத்துவதும் உடனடியாக அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய திறனாளர்களுக்கான சந்தையில் ஆஸ்திரேலியா போட்டியிடுவதற்கு மாற்றங்கள் தேவை என்று உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிமீது மொட்டு கட்சி அதிருப்தியா?

” மொட்டு கட்சியின் 126 எம்.பிக்கள் ரணில் பக்கம் நிற்கின்றனர். எனவே, அவர்தான் மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்துள்ள அறிவிப்பில் உண்மையில்லை.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இழுத்தடிப்பு, அவருடன் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளால் சுமார் 80 வீதமான மொட்டு கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர் என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று சிங்கள பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச, டிரான் அலஸ் ஆகியோர் சுயாதீனமாக செயற்பட ஆர்வம் காட்டினாலும் சில அமைச்சர்களின் அழுத்தங்கள், தலையீட்டால் அவர்களும் அதிருப்தி நிலையில் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்பில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் அறிவிப்பு அடுத்தவாரம்…!

இலங்கையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள காலம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பதாக ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நிறுவன பிரதிநிதிகளுடன் மெய்ந்நிகர் ஊடாக விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு சீனாவின் சினொபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கு கடந்த மார்ச் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் எரிபொருள் விநியோகம் குறித்த ஒப்பந்தம் எதிர்வரும் மே மாதத்தில் கையெழுத்திடப்படவுள்ளதுடன் 45 நாட்களுக்குள் அதன் செயற்பாடுகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மெய்நிகர் சந்திப்பில்,மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, மத்திய வங்கி , முதலிட்டு சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.