” ஆஸி. பாதுகாப்பு பிரதானிக்கு அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை”

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளானவை SAS மற்றும் சிறப்பு நடவடிக்கைக் கட்டளையுடன் எதிர்கால ஒத்துழைப்பை பாதிக்கலாம் என்று அமெரிக்க இராணுவம், ஆஸ்திரேலிய பாதுகாப்பு பிரதானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டுப் பிரிவுகளுக்கு அமெரிக்கப் படைகள் உதவி வழங்குவதைத் தடுக்கும் “Leahy Law” எனப்படும் அமெரிக்கச் சட்டத்தைப் பற்றி எழுத்துப்பூர்வமாக தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு பிரதானி Angus Campbell தெரிவித்தார்.

” Brereton அறிக்கையின் வெளியீடு மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் Leahy Law பரிசீலனைகளைத் தொடங்கலாம் என்று கான்பெராவை தளமாகக் கொண்ட அமெரிக்க ஆயுதப் படைகளின் பாதுகாப்பு இணைப்பிலிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது” என்றும் Angus Campbell குழு முன்னிலையில் தெரிவித்தார்.

 

31 ஆவது premier ஆக பதவியேற்க தயார் – Roger Cook அறிவிப்பு! திகதியும் நிர்ணயம்!!

மேற்கு ஆஸ்திரேலியாவின் 31வது premier ஆக பதவியேற்க தான் தயாராக இருக்கின்றார் என்று லேபர் கட்சியின் மாநில துணை தலைவர் Roger Cook இன்று அறிவித்துள்ளார்.

பிரிமியர் பதவியை Mark McGowan இராஜினாமா செய்ததையடுத்து மேற்கு ஆஸ்திரேலிய அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. premier பதவிக்கு இரு முனை போட்டி நிலவியது.

துணை premier Roger Cook மற்றும் சுகாதார அமைச்சர் Amber-Jade Sanderson ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. எனினும், போட்டியில் இருந்து சுகாதார அமைச்சர் ஒதுங்கினார்.

எனவே, அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய பிரிமியராக Cook பதவியேற்கவுள்ளார்.

மகளை அடகு வைத்து சூதாடிய தந்தை உட்பட மூவர் கைது!

சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், 16 வயது மகளை வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் ஒப்படைத்த தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரான தந்தை இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் சிறுமிக்கு 15 வயதாக இருந்த போது, தனது தந்தை மூலம் சூதாட்டத்திற்கு பணம் வழங்கியவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசியொன்றை வழங்கியுள்ளதுடன், அதனை சிறுமியின் தாய் கண்டுபிடித்த நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சிறுமியால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைவாக, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 31 வயதான அவரது மாமாவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டிக்கு பணம் கொடுத்தவரும் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.

 

voice to parliament திட்டத்துக்கு Queensland எதிர்க்கட்சி தலைவர் போர்க்கொடி!

voice to parliament திட்டத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று Queensland மாநில எதிர்க்கட்சி தலைவர் David Crisafulli இன்று அறிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள உத்தேச திருத்தங்களுடன் தான் உடன்படவில்லை என கூறியுள்ள அவர், தான் எடுத்த முடிவு சரிதான் எனவும் வாதிட்டுவருகின்றார்.

எனினும், எதிர்க்கட்சி தலைவரின் இந்த முடிவு ஏமாற்றமளிக்கின்றது என Queensland அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி – விசாரணை கோருகிறது கத்தோலிக்க சபை

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்களின் பின்னணி தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மத நம்பிக்கை மற்றும் மத தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல நபர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இப்படியானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிரான பதிலடி என நினைத்துக்கொண்டு சிலர், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையிலான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்த தவறையே இவர்களும் செய்கின்றனர்.” – எனவும் அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.

தாமரை கோபுரத்தில் எழுதிய இளம் தம்பதி கைது!

கொழும்பு தாமரை கோபுரத்தின் சுவரின் எழுதினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை தாமரை கோபுரத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தின் சுவரில் ஒரு பகுதியில் எழுத்துக்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.

தெற்கு சிட்னியில் 3 வயது குழந்தை சடலமாக மீட்பு – நபரொருவர் படுகாயம்! விசாரணை வேட்டை தீவிரம்

தெற்கு சிட்னியில் வீடொன்றில் இருந்து  3 வயது குழந்தையொன்றின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், படுகாயமடைந்திருந்த 45 வயது ஆணொருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தெற்கு சிட்னியின் புறநகர் பகுதியான ரிவர்வுட்டில் இருந்து பிற்பகல் 4 மணியளவில் அவசர சேவை பிரிவுக்கு அழைப்பொன்று வந்துள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடமான Washington Avenue விரைந்தனர். இதன்போது 3 வயது குழந்தை இறந்து கிடந்துள்ளது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

45 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குழந்தை எவ்வாறு உயிரிழந்தது, தாக்கியது யார் என்பன உட்பட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட்டில்!

2022 ஆம் கல்வி ஆண்டின் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“63 பாடவிதானங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9 பாடவிதானங்களின், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட, 13 பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

அதேநேரம், மேலும் பல பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், ஜுலை மாதம் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் மாதமளவில், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

இதேநேரம், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 6.8 வீதமாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவின் வருடாந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 6.3 வீதத்திலிருந்து 6.8 வீதமாக அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் (ABS) இன்று தெரிவித்துள்ளது.

இது பணவீக்க அதிகரிப்பை காட்டினாலும், 2022 டிசம்பருடன் ஒப்பிடுகையில் பாரிய அதிகரிப்பு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 டிசம்பரில் பணவீக்க வீதம் 8.4 ஆக இருந்தது.

” ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிக்க எரிபொருளின் விலையேற்றம் முதன்மையாகக் காரணம்.” – என்று ABS தலைமை அதிகாரி Michelle Marquardt தெரிவித்தார்.

மத்திய வங்கி அடுத்தவாரம் கூடும்போது வட்டி வீதமும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கத்துக்கும், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று பேர்த் நகரில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் நோனிசும், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை சார்பில் அதன் ஆணையாளரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

குறித்த ஒப்பந்தம் ஊடாக இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மீண்டெழ சீனா முழு ஆதரவை வழங்கும்!

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசுபூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய துணை அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்கின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பதவி விலகவுள்ளதாக Ryan Smith எம்.பி. அறிவிப்பு!

விக்டோரிய மாநில லிபரல் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான Ryan Smith தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

” எனது வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது என நான் முடிவு செய்துள்ளேன்” என்று பதவி விலகல் குறித்து Ryan Smith தெரிவித்துள்ளார்.

ஜுலை 7 ஆம் திகதி அவர் பதவி விலகுவார் என தெரியவருகின்றது.

” உங்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் உங்கள் தேவைகளுக்கு பதிலளிக்கவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனது நம்பிக்கை” என தனது தொகுதி மக்களிடம் ஸ்மித் கூறியுள்ளார்.

மெல்போர்ண் வடகிழக்கில் உள்ள வேட்பாளர்கள் 12 மாதங்களுக்குள் மூன்றாவது இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர்.

மாநில லிபரல் கட்சி தலைவருக்கு இந்த இடைத்தேர்தல் முதல் தேர்தல் சோதனையாக அமையவுள்ளது.

இலங்கைக்கு உதவுமாறு சீனாவிடம் சஜித் கோரிக்கை

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தனர்.

இருதரப்பு ரீதியாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், உற்பத்தித் தொழில் புரட்சியை அடுத்த கட்டத்துக்கு முன்கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

சீனப் பொருளாதாரப் புரட்சி தொடர்பான முன்னோடிகளைக் கருத்தில்கொள்வது போல் பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் போலவே ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் சர்வதேச உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

பிரிட்டனுடனான ஒப்பந்தம் ஆஸ்திரேலிய எழுச்சிக்கு வழிவகுக்கும்!

பிரிட்டனுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்று நிழல் வெளிவிவகார அமைச்சர் Simon Birmingham தெரிவித்தார்.

” இது ஒரு நல்ல ஒப்பந்தம், அதேபோல ஆஸ்திரேலியா மீண்டும் எழுச்சி பெற ஒரு சிறந்த வாய்ப்பாகும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளுள் பிரிட்டனும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய ஒப்பந்தத்தின்படி, மது, கடல் உணவுகள், கார் பாகங்கள் உள்ளிட்ட 99 சதவீதத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலிய ஏற்றுமதி பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்படும்.

இறக்குமதி வரி நீக்கம் ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.05.2023)

மேஷம் – மேஷ ராசியினர் இன்றைய தினம் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஈடுபடும் காரியங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

ரிஷபம் – ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம் – மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்க ரீதியான காரியங்களில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் இருக்கும். சுப காரிய விரயங்கள் சிலருக்கு ஏற்படும்.

கடகம் – கடக ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் உண்டாகும். எடுக்கின்ற முயற்சிகளில் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சிலர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவார்கள். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

சிம்மம் – சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கும். பயணங்களில் ஆதாயங்கள் இருக்கும்.

கன்னி – கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல படியாக முடியும். பொருளாதார நிலை மேம்படும். நண்பர்களால் ஆதாயங்கள் இருக்கும். சிலர் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

துலாம் – துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபமே இருக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சிலருக்கு பெண்கள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும்.

விருச்சிகம் – விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் மகான்களை சந்தித்து ஆசிகள் பெறுவீர்கள்.

தனுசு – தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருடனான கொடுக்கல் – வாங்கல்களில் எச்சரிக்கை அவசியம். விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம் – கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பங்கள் இருக்கும். காரியங்களில் இழுபறி நிலை உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபமே இருக்கும். சிலருக்கு மருத்துவ ரீதியிலான செலவுகள் உண்டாகும். எந்த ஒரு விடயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மீனம் – மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்காது. எதிர்பார்த்த பொருள் வரவில் தாமதங்கள் ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

நிலவுக்கு மனிதா்களை அனுப்ப சீனா திட்டம்

2030-ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதா்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமன்றி, வேற்று கிரகத்திற்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பன தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என சீன விண்வெளி ஆய்வு மையத்தின் பிரிவான CMSA (China Manned Space Agency) தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் தொழில்நுட்பம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும் என CMSA சுட்டிக்காட்டியுள்ளது.

நிலவிற்கும் பூமிக்கும் இடையே சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது, நிலவில் இருப்பிடங்களை அமைத்து மனிதா்கள் தற்காலிகமாகத் தங்குவது, இயந்திர மனிதா்களுடன் மனிதா்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு 2030-இல் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் திட்டம் அடித்தளம் அமைக்கும் என CMSA-இன் இணை பணிப்பாளர் லின் ஷிகியாங் கூறியுள்ளார்.

ஏற்கனவே நிலவிற்கு ஆளில்லாத விண்கலங்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. நிலவில் நகா்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஓா் ஆய்வுக் கலத்தையும் சீனா வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

முன்னதாக, நிலவில் சா்வதேச ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டில் ரஷியாவும், சீனாவும் கூட்டாக அறிவித்தன.

நிலவின் பரப்பிலோ அல்லது அதனை சுற்றி வரும் வகையிலோ அந்த சா்வதேச நிலவு ஆய்வு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

நிலவுக்கு முதன்முறையாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1968-இல் விண்வெளி வீரா்களை அனுப்பியது. பின்னா் அப்பல்லோ-11 விண்கலத்தில் அனுப்பப்பட்ட நீல் ஆா்ம்ஸ்ட்ராங்கும் புஸ் ஆல்ட்ரினும் கடந்த 1969-இல் முதன்முறையாக நிலவில் தரையிங்கினா்.

அதன் பிறகு அமெரிக்கா 6 முறை நிலவிற்கு விண்வெளி வீரா்களை அனுப்பியது. எனினும், 1972-ஆம் ஆண்டிற்கு பிறகு நிலவிற்கு மனிதா்களை அனுப்புவதை நிறுத்திய அமெரிக்கா, வரும் 2025-ஆம் ஆண்டில் மீண்டும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த சூழலில், சீனாவும் அதுபோன்ற திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் அந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவிற்கு மனிதா்களை அனுப்பிய உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

பின்வாங்கினார் சுகாதார அமைச்சர்! WA premier ஆகிறார் Roger Cook!!

மேற்கு ஆஸ்திரேலியாவின் புதிய premier ஆக Roger Cook நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

லேபர் கட்சிக்குள் இடம்பெற்ற போட்டியில் இருந்து மாநில சுகாதார அமைச்சர் Amber-Jade Sanderson விலகியதையடுத்தே துணை premier ஆக பதவி வகித்த Roger Cook புதிய பதவிக்கு வருவார் என அறியமுடிகின்றது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் Premier ஆக பதவி வகித்த Mark McGowan நேற்று பதவி விலகினார். அத்துடன், அரசியலில் இருந்து விடைபெறபோவதாகவும் அறிவித்தார்.

இதனால் மாநிலத்தின் அடுத்த Premier யார் என்ற வினா அரசியல் களத்தில் மேலோங்கியுள்ளது.

துணை Premier Roger Cook மற்றும் சுகாதார அமைச்சர் Amber-Jade Sanderson ஆகியோரின் பெயர்கள் புதிய Premier பதவிக்குக்கு அடிபட்டன.

இந்நிலையில் லேபர் கட்சிக்குள் சுகாதார அமைச்சருக்கே ஆதரவு வலுத்துள்ளது. அவர்தான் பதவிக்கு வருவார் என நம்பப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

“இனி எங்களால் போராட முடியுமா என்பது கூடத் தெரியாமல் இருக்கின்றது”

இனி எங்களால் போராட முடியுமா என்பது கூட எமக்குத் தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 30 ஆம்திகதி சர்வதேச நீதியைக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட, சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட, கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடித்தான் நாம் ஜனநாயகப் போராட்டத்தை அஹிம்சை வழியில் 14 வருடங்களாகத் தொடர்ச்சியாக வீதியில் நின்று முன்னெடுத்து வருகின்றோம்.

புதிய அரச தரப்பினர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி, புதிதாக பயங்கரவாத எதிர்ப்புத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த நினைக்கின்றார்கள். ஆனால், அதைச் செய்கின்ற போது எமது ஜனநாயக போராட்டத்துக்கான கருத்துச் சுதந்திரமோ, தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து போராடுவதற்கு பயங்கரவாத எதிர்ப்புத் தடுப்புச் சட்டமானது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், ஏனையவர்களிடமும் நிறைவேற்றாது நிறுத்த வேண்டும் என்பதனை ஊடக வாயிலாகக் கேட்டு கொள்கின்றோம்.

இலங்கை தேச மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதும் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எந்த ஒரு நீதியும் வழங்காமல் இந்தச் சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது.

அதேபோன்று கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற உறவுகளைத் தேடி நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற போது இலங்கை தேசத்தை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றீர்கள்.?

உறவுகள் இனியாவது மனிதர்களாக வாழ வேண்டும். ஏனையவர்களுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காக நடக்க இருக்கின்ற ஜெனிவாக் கூட்டத் தொடரிலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றங்கள் இழைத்தவர்களைப் பாரப்படுத்தி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை நாம் மிகவும் பணிவாகக் கேட்டு நிற்கின்றோம்.

இனி எங்களால் போராட முடியுமா என்பது கூட எமக்குத் தெரியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள் இருந்தன. தற்போது நீதிமன்ற வழக்குகள் கூட எமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, தொடர்ச்சியாகப் போராட சர்வதேசம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

துணை Premier இற்கு ஏமாற்றம்! WA புதிய Premier ஆக Amber-Jade Sanderson தெரிவு!

மேற்கு ஆஸ்திரேலியாவின் புதிய Premier ஆக மாநில சுகாதார அமைச்சர் Amber-Jade Sanderson நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் Premier ஆக பதவி வகித்த Mark McGowan நேற்று பதவி விலகினார். அத்துடன், அரசியலில் இருந்து விடைபெறபோவதாகவும் அறிவித்தார்.

இதனால் மாநிலத்தின் அடுத்த Premier யார் என்ற வினா அரசியல் களத்தில் மேலோங்கியுள்ளது.

துணை Premier Roger Cook மற்றும் சுகாதார அமைச்சர் Amber-Jade Sanderson ஆகியோரின் பெயர்கள் புதிய Premier பதவிக்குக்கு அடிபட்டன.

இந்நிலையில் லேபர் கட்சிக்குள் சுகாதார அமைச்சருக்கே ஆதரவு வலுத்துள்ளது. அவர்தான் பதவிக்கு வருவார் என நம்பப்படுகின்றது. மாநிலத்தை வழிநடத்த தான் தயார் என்ற அறிவிப்பை அவர் இன்று விடுத்துள்ளார்.

” கட்சிக்குள் எனக்கு வெட்டு குத்து” – பகிரங்கப்படுத்தினார் தயாசிறி

” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் காட்டிக்கொடுக்கவில்லை. அமைச்சு பதவி இல்லாமல் என்னால் அரசியல் செய்ய முடியும். அமைச்சு பதவிக்காக அலைபவர்களே கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

” எனது பெற்றோர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தவர்கள். நானும் சுதந்திரக்கட்சி ஊடாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். கட்சிக்குள் என்னை ஓரங்கட்டினர். வலிகளை தாங்கிக்கொண்டு பயணித்தோம். இருந்தும் ஒதுக்கினர். அதனால்தான் 2001 இல் கட்சியை விட்டு வெளியேறினேன்.” எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

” கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆதரவாளர்களின் நலனை முன்னிறுத்தியே நான் செயற்படுகின்றேன். ஆனால் வாழ்நாள் முழுவதும் அமைச்சராக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் வாழ்பவர்கள்தான், எனக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர்.

இக்கட்டான – சவாலான நிலையில்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றேன். கட்சியை கிராமிய மட்டத்தில் வலுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்தேன். கட்சிக்குள் கட்டமைப்பொன்றை உருவாக்கினேன். ” எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.