கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்!

மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதற்கான யோசனைகளை இவ்வருட இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின் கட்டணம் 14.2 வீதத்தால் குறைப்பு

இலங்கையில் நாளை (01) முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

14.2 வீதத்தால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 0 முதல் 30 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோருக்கான கட்டணம் 65 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது. அந்த பிரிவில் ஒரு அலகு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கான கட்டணம், 400 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைகின்றது.

60 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோரின் ஒரு அலகிற்கான கட்டணம் 42 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக குறைக்கப்படுவதோடு, மாதாந்த கட்டணம் 650 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக குறைக்கப்படுகின்றது.

91 அலகுகள் முதல் 120 அலகுகள் வரை பயன்படுத்துவோரின் ஒரு அலகிற்கான கட்டணம் 42 இல் இருந்து 35 ரூபாவாக குறைகின்றது. இதற்கமைய, மாதாந்த கட்டணம் 1500 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக குறைவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மதஸ்தலங்களுக்கான 16% கட்டண குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வருகின்றது.

குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு ஒரு அலகு மின்சாரம் 10 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதோடு, உடனடியாக சூரிய சக்தியை நிறுவுமாறும் ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளது.

ஹோட்டல் துறைக்கு 26.3% கட்டணம் குறைக்கப்படுகின்றது.

கைத்தொழில் துறைக்கும் 9% கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸியிலிருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தே அதிகளவானவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் இந்தியாவில் இருந்து 22,388 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,08,489 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

சீன சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பரப்புரைகளை ஆரம்பித்தது ஆஸி.!

சீனாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை தமது நாட்டுக்கு வரவழைப்பதற்கான பரப்புரைகளில் ஆஸ்திரேலியா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.

இதற்கான திட்டங்களை Tourism Australiaவின் பணிப்பாளர் Phillipa Harrison தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துவருகின்றனர்.

சீன விமான சேவை நிறுவனம் மற்றும் பயண சேவை வழங்குநர்களுடன் பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றனர். குழுவொன்று சீனா சென்று அங்கும் பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றது.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்துக்கு சீன சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பை வழங்கியது. சுமார் 1.4 மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 12.4 billion Australian டொலர்கள் கிடைக்கப்பெற்றன.

எனினும், கொரோனா பெருந்தொற்றின் பின்னர் பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் ஆஸி. சுற்றுலா பொருளாதாரத்தில் சீனாவில் பங்களிப்பு வீழ்ச்சியடைந்தது. இந்நிலையிலேயே சீனா சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளன.

“மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது” – ஜனாதிபதி எச்சரிக்கை

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களை ஏறி மிதிக்கின்ற எந்தத் திட்டங்களையும் சட்டங்களையும் நாம் முன்னெடுக்க மாட்டோம். நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதியுமே திட்டங்களை நாம் முன்னெடுக்கிறோம்.

எமது ஆட்சியில் எந்தச் சட்டமும் மக்களுக்குப் பாதகமாக அமையாது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுகின்றன. இதேவேளை, எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றன.

நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் எதிர்க்கட்சியினர் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல், தங்கள் பாதையில் செல்ல வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைவிடுத்து மக்களைப் படைக்காய்கள் ஆக்கக்கூடாது.” – என்றார்.

 

இலங்கை வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கிழக்கு ஆளுநர் அழைப்பு!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய் சங்கருடன் நேற்று பேச்சு நடத்தினார்.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த முயற்சிகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை, இந்திய இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேபோல இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

வாகன திருட்டு சம்பவங்கள் 11 வீதத்தால் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் மோட்டார் வாகன திருட்டுச் சம்பவங்கள் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது என புள்ளிவிபரவியல் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகன திருட்டுச் சம்பவங்களால் கடந்த வருடம் மாத்திரம் 55 ஆயிரத்து 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஏனைய திருட்டுச் சம்பவங்களும் 8 வீதத்தால் அதிகரித்துள்ளது. திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 4 லட்சத்து 75 ஆயிரத்து 725 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த இரு வருடங்களாக திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

 

” மனித எச்சங்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மத்தியில் அச்சம்” – விசேட தொகுப்பு….

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வழங்கலுக்கான குழாய்களை பொருத்தப்படுவதற்காக வேலைகள் இடம்பெற்றுகொண்டிருந்த போதே மனித எச்சங்கள் கிடந்துள்ளன.

“ சம்பவ இடத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்ல, அதைவிட கூடுதலான மனித எச்சங்களை காண முடிந்தது” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இந்த மனித எச்சங்கள் நேற்று வியாழக்கிழமை (29) கொக்குத்தொடுவாய் மத்தியில் அமைந்துள்ள பாடசாலையிலிருந்து கொக்கிளாயை நோக்கி சுமார் 200 மீட்டர் தொலைவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் வழங்கலுக்கான குழாய் பொருத்துவதற்காக தோண்டிய குழியிலேயே இவை காணப்பட்டுள்ளன.

மனித புதை குழிகள் தொடர்பில் ஐந்து மனித உரிமை அமைப்புகள் இணைந்து அண்மையில் வெளியிட்ட கடுமையான அறிக்கையால் ஏற்பட்ட்ட அதிர்ச்சியிலிருந்து நாடு இன்னும் மீளாத நிலையில், மற்றுமொரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு;ள விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இவ்வாறு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளததாக பொலிஸார் கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு கூறுகிறது.

“அந்த இடத்தை பார்வையிட நான் அனுமதிக்கப்பட்டேன். அங்கு உடைகளின் சில பகுதிகளும், எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. உடைகளில் பெண்களின் ஆடைகளும் இருந்தன. அவற்றை காணும்போது அவை விடுதலைப் புலிகளுடையதாக இருக்கக் கூடும் என எனக்கு தோன்றுகிறது. 2-3 மீட்டர் அளவிலான பகுதியில் அந்த உடல் எச்சங்கள் காணப்பட்டன. அந்த எலும்புகூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டது போலத் தெரிகிறது” என துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் முல்லைத்தீவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனினும் இந்த இடம் ‘மாவீரர் துயிலும் இல்லம் இல்லை’ என்பதை உறுதியாக கூற முடியும் என ரவீகரன் குறிப்பிட்டார்.

“இந்த பகுதியிலிருந்த மக்கள் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரம் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் 2011ஆம் ஆண்டே மீள்குடியமர்த்தப்பட்டனர். மேலதிகமாக தோண்டப்படும் போதும் கூடுதல் உடல் எச்சங்கள் கிடைக்கலாம்”.

உள்நாட்டு யுத்தம் 2009 ஆண்டு மே மாதம்19ஆம் திகதி ரத்தக்களறியுடன் முடிவடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர், அல்லது கையளிக்கப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களை கண்டுபிடிக்க ஒரு அலுவலகம் 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற தீர்மானம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் அந்த அலுவலகம் இதுவரை அவ்வகையில் காணாமல்போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அந்த அலுவலகமும் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரின் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான நிலை குறித்த தனது வாய்மொழியான அறிக்கையில் பிரதி ஆணையாளர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை குறை கூறியிருந்தார்.

இதேவேளை பிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் தென்னாபிரிக்கா போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும், போர் குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த அமைப்பு விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அந்த ஆணைக்குழுவில் சர்வதேச மேற்பார்வையாளர்களும் உள்ளடங்குவார்கள் ரணில் கூறியுள்ளார்.

ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட யுத்தம் மற்றும் கடந்த 1980களில் சிங்கள இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கியபோது இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை மூடி மறைக்கவே இந்த ஆணைக்குழு அமைக்கப்படுகிறது என அஞ்சுகின்றனர்.

இப்போது கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது தமது உறவுகளை தேடுபவர்களின் அச்சத்தையும் கவலையையும் மேலோங்கச் செய்துள்ளது. கடந்த 2,300 நாட்களுக்கு மேலாக பெண்கள் தலைமையிலான அமைதிவழி போராட்டம் தமது சொந்தங்களை தேடி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற ஒற்றை பதிலைக் கோரியே அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

மொரிசன் ஆட்சியில் முன்மொழியப்பட்ட செயற்கைக்கோள் திட்டத்தை இரத்து செய்தது லேபர் அரசு

முன்னாள் பிரதமர் Scott Morrison ஆட்சியில் திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக்கோள் உருவாக்கத் திட்டத்தை இரத்து செய்வதற்கு லேபர் அரசு முடிவு செய்துள்ளது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம் மற்றும் கடல்சார் கண்காணிப்பு பற்றிய தரவுகளை சேகரிக்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது.

2022 தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், 2028 மற்றும் 2033 க்கு இடையில், உலகளாவிய புவி கண்காணிப்புத் தரவை ஆஸ்திரேலியா அணுகுவதற்கு நான்கு செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

NSMEO திட்டத்தை அறிவிக்கும் போது, முன்னாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மெலிசா பிரைஸ், ” முதல் நான்கு ஆஸ்திரேலிய செயற்கைக்கோள்களை உருவாக்கி ஏவுவது, அடுத்த தசாப்தத்தில் மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களுக்கான தொழில் அறிவுக்கான அடித்தளத்தை உருவாக்கும்” என்று கூறியிருந்தார்.

எனினும், அதிக செலவு உள்ளிட்ட காரணங்களால் திட்டத் இரத்து செய்யப்படுகின்றது. இந்த தகவலை லேபர் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

கைத்தொழில் மற்றும் அறிவியல் அமைச்சர் Ed Husic insists, செயற்கைக்கோள் திட்டம் இரத்து செய்யப்பட்டாலும், Albanese அரசு, விண்வெளித் துறை வளர்சியில் வகிக்கும் பங்கை இன்னும் மதிப்பிடுகிறது என்று குறிப்பிட்டார். அத்துடன், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட ஆய்வுகள் புதிய வடிவில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Brett Sutton சிறந்த விக்டோரியன் விருது வழங்கி கௌரவிப்பு…!

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த Victorian விருதை பெற்றுள்ளார் பதவி விலகி செல்லவுள்ள மாநிலத்தின் பிரதம சுகாதார அதிகாரியான பேராசிரியர் Professor Brett Sutton.

மெல்போர்ண் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற விக்டோரியா தின நிகழ்வின்போது அவர் இந்த விருதை பெற்றார்.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் இவர் ஆற்றிய சேவையை பாராட்டி, கௌரவிக்கும் வகையிலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விக்டோரிய மாநில சுகாதார பிரதான பதவியில் இருந்து அவர் அண்மையில் பதவி விலகினார்.

கொரோனாவால் NSW, விக்டோரியா மாநிலங்களில் 155 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரம் மாத்திரம் நிவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 3 ஆயிரத்து 356 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன், விக்டோரியா மாநிலத்தில் கடந்த வாரம் 2 ஆயிரத்து 560 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் ஐசியூவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஆஸியில் e-scooter விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு….

Brisbane இல் e-scooter இல் இருந்து தவறி விழுந்து நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலைப்பகுதியில் கடுமையாக அடிபட்டதாலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் e-scooter விபத்துகள் அதிகரித்துவருகின்றன.

குயின்ஸ்லாந்தில் e-scooter விபத்தால் குறைந்தது ஒருவராவது நாளொன்றுக்கு வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் என்று மாநிலத்தின் சுகாதார தரவுகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது 25% காயங்கள் மதுபானம் சம்பந்தப்பட்டதாகவும், 10% காயங்கள் ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்களில் மனித எச்சங்கள் – ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பாா்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்கு சென்று வெடித்துச்சிதறிய டைட்டன் நீா்மூழ்கியின் பாகங்கள் (28) கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

1912 ஆம் ஆண்டில் விபத்திற்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது அமெரிக்காவின் நியூபௌண்ட்லேண்ட் தீவிற்கு 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல்படுகையில் உள்ளது.

அதனை பாா்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்செல்வதற்காக Oceangate Expeditions என்ற அமெரிக்க தனியாா் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி கடந்த 18-ஆம் திகதி இறக்கிவிடப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அது வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலை பாா்வையிடுவதற்காக நீா்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும், Oceangate நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே ஆகியோரும் உயிரிழந்தனா்.

இந்நிலையில், பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்த டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மனித உடலின் எச்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைட்டன் நீர்மூழ்கியின் சிதிலமடைந்த பகுதிகள் கடலில் 12,000 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரத்தில் அவற்றில் ஒட்டியிருந்த உடல் எச்சங்கள் பற்றிய தகவலை அமெரிக்க கடலோர காவற்படை வெளியிட்டுள்ளது.

மேலும், டைட்டன் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் நியூபவுண்ட்லேண்ட் கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.06.2023)

மேஷம் – மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அனாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சிலர் மறதியால் அவதிப்பட நேரலாம்.

ரிஷபம் – ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை நுணுக்கமாக கையாளுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். ஆரோக்கியம் வலுப்பெறும்.

மிதுனம் – மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்க போகிறது. எதையும் எதற்கும் துணிச்சலுடன் இருப்பீர்கள். முன்பின் தெரியாதவர்களுடன் வீண் வம்பு, சண்டைகளை வளர்க்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது.

கடகம் – கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய மரியாதைக்காக போராட வேண்டி இருக்கும். எவரிடமும் இறங்கி போகாதீர்கள். புதிய நண்பர்களுடன் அறிமுகம் ஏற்படலாம். பயணங்களின் பொழுது வாகன ரீதியான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத மனக்குழப்பத்தை விரட்டி அடித்து விடுங்கள்.

சிம்மம் – சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உத்வேகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். நீங்கள் நினைத்ததை அடைய கூடுதல் முயற்சி தேவை.

கன்னி – கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகள் பூர்த்தி அடையக்கூடிய இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. இதுவரை இருந்து வந்த இழுப்பறியான காரியங்கள் முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம் – துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி கிடைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். தேவையற்ற இடங்களில் பொய் உரைக்காதீர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். உங்களை சுற்றி இருக்கும் எதிர்ப்புகள் அடங்கும். சுயநலம் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் – விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத வரவு எதிர்பார்த்ததை அடைய செய்யும். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு – தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சாந்தம் நிலவும். அழையா விருந்தாளியாக எங்கும் செல்லாதீர்கள். நினைத்த விஷயங்களை அடைவதில் காலதாமதம் ஆகலாம். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் காணும் யோகம் உண்டு.

மகரம் – மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றியுள்ள பகைவர்களின் சூழ்ச்சிகளை எளிதாக முறியடிப்பீர்கள். சிலருக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உழைப்பால் உயர்வு கிட்டும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும்.

கும்பம் – கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைவுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பது நல்லது. உழைப்பால் அசதி ஏற்படலாம். சுகவீனத்துடன் காணப்பட்டால் உடனே கவனியுங்கள்.

மீனம் – மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை அறியாமல் நற்செயல்களை செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடாதீர்கள். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். ஆரோக்கியம் பேணுங்கள்.

நடுநிசியில் மெல்போர்ணை உலுக்கிய நிலநடுக்கம்

மெல்போர்ணில் இன்றிரவு 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மெல்போர்ணில் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மக்கள் நித்திரையில் இருந்த தருவாயில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் திடுக்கிட்டு எழுந்தனர் என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

விக்டோரியா நகரிலிருந்து கிழக்கே 127 கிமீ தொலைவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டது என Geoscience Australia தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவிலும் மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக (கிடங்கு வெட்டிய போது) நிலத்தின் அடியில் தோன்றியபோது, மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இப்பிரதேசம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, நாளை நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 30 வருடங்களில் மாத்திரம் 20 சமூக மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு பகுதியளவில் அகழ்வு செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் சமூக மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு எதற்கா? EPF இல் கை வைக்கப்படுமா?

ஏற்கனவே 50 வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் வங்கித் துறையைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமானது என்பதோடு,  உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர்  சேமலாப நிதியத்தின் மீது கைவைக்கும் எண்ணம் இல்லையென  உறுதியளிக்கும் மத்திய வங்கி ஆளுநர், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு குறைந்தபட்சம் 9% வட்டி வீதத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று (29)  ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கள, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, திறைசேரியின் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,

”அரசாங்கத்தின் கடன்களை நிலையான தன்மைக்கு கொண்டு வர வேண்டுமெனில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளுக்கமைய 10 வருடங்களுக்குள் ஒரளவு ஸ்திரமான தன்மையை பேண வேண்டியது அவசியமாகும். உதாரணமாக கூறுவதாயின் 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மொத்த தேசிய உற்பத்தி வீதம்  128 ஆக பதிவாகியது.  இருப்பினும் 2032 ஆம் ஆண்டில் 95 சதவீதமென்ற குறைந்த சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்தது. அதுவே முதலாவது அளவுகோலாகும்.

அடுத்தாக அரசாங்கத்தின் வருடாந்த நிதிசார் தேவைகள் தற்போது 34.6% சதவீமாக காணப்படுகின்ற நிலையில் 2027- 2032 வரையான ஐந்து வருடங்களில்   13% சதவீதம் அல்லது அதற்கு குறைந்த மட்டத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமெனவும்  மூன்றாவது அளவுகோலாக தற்போது 9.4 % ஆக காணப்படும் வெளிநாட்டு கடன் சேவைகளை  2027- 2032  வரையான காலப்பகுதியில் 4.5% சதவீமாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

மேற்படி இலக்குகளை அடைந்துவிட்டால் மேலதிக நிதி  இடைவெளி (external financing gap) இனை நிரப்புவதற்கான சலுகையாக 16.9 அமெரிக்க டொலர்கள் குறைவடையும். குறித்த இலக்குகளின் நிறைவில் மேலும் மூன்று விடயங்களை சாத்தியமாக்கிகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்காக முதலில் உத்தியோகபூர்வமான கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்ற வருகின்றன. அடுத்ததாக வணிக ரீதியில் தனியார் பிணைமுறிகளாக பெற்றுக்கொண்ட பணம், அது தொடர்பிலும் கலந்துரையாடப்படுகிறது. மூன்றாவதாக உள்நாட்டு கடன்கள் ஓரளவு மறுசீரமைப்புச் செய்தல் உள்ளிட்ட முயற்சிகள் ஊடாக கடன் நீடிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

உள்நாட்டு கடன் மறுசீuமைப்பின் போது  அரசின் மொத்த நிதித் தேவைக்காக (Gross Financial need) பெறப்படும் கடன்களை குறைப்பது அவசியமாகும். அதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்தினால் 12.7 சதவீத்தினால் குறைத்துக்கொள்ள முடியும். 13 ஐ விடவும் குறைந்த மட்டத்தில் அதனை பேண வேண்டும். அதனை சரியாக செயற்படுத்தினால் மூன்று தசம் அளவிலான இடைவெளியொன்றும் உருவாகும். இதனை சரியாக செயற்படுத்தினால் மொத்த தேசிய உற்பத்தி விகிதத்தின் கடன் தொகை சதவீத அடிப்படையில்  90%  ஆக குறைவடையும்.

தற்போது திறைசேரியின் கடன் பத்திரங்கள் 4.1 டிரில்லியன்களாக காணப்படுகின்றது. அவற்றில் 62.4% மத்திய வங்கியிடமே உள்ளது.  நாம் அறிந்த வகையில் திறைசேரியின் கடன் பத்திரங்களை நீடிக்கப்பட்ட திறைசேரி பிணைமுறிகளாக மாற்றுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.  அது போதுமானதல்ல என்பதால் மிகுதி  தொகையை பெற்றுக்கொள்வதற்காக நாம் திறைசேரி பிணைமுறிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தற்போது 8.7 டிரில்லியன்கள் பெறுமதியான திறைசேரி பிணைமுறிகள் காணப்படுகின்றன. 36.5% (superannuation fund) இலும்  36% சதவீதமானவை வங்கிகளிலும் காணப்படுகின்றன. ஏனைய பகுதிகள் காப்புறுதி மற்றும் தனியார் நிறுவனங்களிடத்தில் உள்ளன.

இங்கு மத்திய வங்கி கட்டமைப்பு மற்றும் EPF ஆகியவற்றை பாதுகாக்க முயற்சிக்கின்ற அதேநேரம் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பாளராகவும் மத்திய வங்கியே செயற்படுகின்றது.

அந்த நிலைப்பாட்டிலிருந்தே மத்திய வங்கி இந்த விடயத்தில் தலையீடு செய்கிறது. அதற்கமைய மக்களின் வைப்புக் கணக்குகள் மற்றும் EPF போன் பொது நிதியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மத்திய வங்கி மேற்படி செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு இணங்கிச் செயற்படுகின்றது.

இந்த யோசனைகளில் அடிப்படையில் பார்க்கின்ற போது வங்கிகள் தற்போதும் அரசாங்கதின் கடன் சுமைகளை குறைப்பதற்கு அவசியமான பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளன.  குறிப்பாக தற்போது  50 சதவீத்திற்கும் அதிகமான வரிகளை வங்கிகளே செலுத்துகின்றன.  அவற்றில் 30% நிறுவன வரியாகவும், 18% சதவீதம் நிதிச் சேவை வரியாகவும், 2.5% சமூக பாதுகாப்பிற்கான உதவியாகவும் வழங்கப்படுகின்றது.

அதற்கமைய தற்போதும் வங்கிகளின் வருமானத்தில்  50% சதவீத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி பங்களிப்பினை வழங்கி வருகின்றன. அதற்கு நிகராக (superannuation fund) நிதியங்கள் 14% வீதம் என்ற குறைந்த மட்டத்திலேயே வரிகளை அறவிடுகின்றன.

அதன்படி முதலாவது விடயத்திற்கு வங்கிக் கட்டமைப்பிடமிருந்து தற்போதும் ஒத்துழைப்பு கிடைக்கிறது.  இரண்டாவது விடயம், கடந்த காலங்களில் நாட்டின்  பொருளாதார நிலைமை காரணமாக கடனை செலுத்துவதில் வங்கிகள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தன. மேலும் வழங்கப்பட்ட சலுகை காலங்களின்படி, கடன்களை மீளச் செலுத்தாமையினால் டிரில்லியன் கணக்கிலான நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளன. அத்தோடு கடந்த காலங்களில் 1.6 டிரில்லியன்கள் பெறுமதியான சலுகை காலத்தை வழங்கியுள்ள நிலையில் தற்போதும் வங்கி கட்டமைப்பினால் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு கிடைக்கின்றது.

அதேபோல் வங்கி கட்டமைப்புக்களை பாதுகாத்தல் மற்றும் வைப்பாளர்களின் பணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு பாதுகாத்தல் என்பன முதன்மை பொறுப்புக்களாகும். அவர்களும் வரியின் ஊடாக பொருளாதாரத்திற்கும் திறைசேரிக்கும் பெருமளவான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.

வங்கிகளுக்குள் காணப்படும் கணக்கு வைப்பாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை 57 மில்லியன்களாக காணப்படுகின்றது. நாட்டிலிருப்பது 20 மில்லியன் மக்கள் தொகையாக உள்ளபோதும்  57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. அந்த நிதிக்கு பாதிப்பு ஏற்படுமாயின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ”  மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளின்போது உரிய நடைமுறைகளை பின்பற்றியதா ஆஸி?

உரிய நடைமுறைகளை பின்பற்றாது – ஏற்றுமதி அனுமதிகூட இன்றி ஆஸ்திரேலியாவால் உக்ரைனுக்கு சில இராணுவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

நேட்டோ மற்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அந்த உதவியை வழங்குவதற்கான சட்ட அடிப்படையிலான நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும் சில மானியங்கள் வழங்கப்பட்டன.

ஆஸ்திரேலிய தேசிய கணக்காய்வு அலுவலகம் உக்ரைனுக்கு இராணுவ உதவியை வழங்குவதில் பாதுகாப்புத் துறையின் பங்கை ஆய்வு செய்தது, இன்றுவரை 40 விமானங்களில் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட 13.5% இராணுவ உதவிக்கான அனைத்து ஆஸ்திரேலிய அரச கொள்கை ஒப்புதல்களும் $36.4 மில்லியன் மதிப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை “நிரூபிக்க முடியவில்லை” என்று கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ். கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

விபத்தில் 29 மற்றும் 37 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Solomon தீவுகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய ஆஸி. ஆர்வம்!

Solomon தீவுகள் நாட்டில் ஆஸ்திரேலிய படையினரும், பொலிஸாரும் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்கள் என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெரிவித்தார்.

Honiara விற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர்,

” தற்கால பாதுகாப்பு சூழலையும் சமகால அளவிலான உதவிகளையும் பிரதிபலிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவிற்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையில் இருக்கும் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்யும் திட்டத்தை Albanese அரசு வரவேற்கின்றது.” – எனவும் குறிப்பிட்டார்.

Solomon தீவுகளுடன் சீனா கடந்தாண்டு பாதுகாப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ள நிலையிலேயே ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Solomon தீவுகள் நாட்டின் பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் Richard Marles நேற்று பேச்சு நடத்தினார்.

இந்நிலையில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர், Solomons International Assistance Force (SIAF) இற்கான ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு தொடர்ச்சியாக இருக்கும் என்றார்.

” சாலமன் தீவுகளில் முக்கிய இரு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நவம்பரில் நடைபெறும் பசிபிக் விளையாட்டுகள் மிகவும் முக்கியமானவை , அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே SIAF உதவியானது சாலமன் தீவுகளுக்கு உதவியாக இருக்கும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். சாலமன் தீவுகள் விரும்பினால் அதை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் .” எனவும் அவர் கூறினார்.