தெற்கு அரசியலில் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘தேசிய கீதம்’

” 2023 லங்கா பிரீமியர் லீக்“ (LPL) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழாவின்போது தேசிய கீதத்தின் சில வரிகள் தவறாக இசைக்கப்பட்டுள்ள விவகாரம் இலங்கையில் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய கீதத்தை தனி நபர் விரும்பத்துக்கேற்ப திரிபுபடுத்துவது அரசமைப்புக்கு முரணான செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு விழாவில் தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு இசைக்கப்பட்டமை வருத்தமளிக்கிறதும் என்றும் குறித்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பிரபல பாடகி Umara Singhavansa நேற்று (30) மாலை நான்காவது “லங்கா பிரீமியர் லீக்“ போட்டியின் தொடக்க விழாவில் தேசிய கீதத்தை திரிபுபடுத்தி இசைத்தார் என்பதற்காக சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்றார்.

தேசிய கீதத்தின் சில முக்கிய சொற்றொடரை குறித்த பாடகர் மீண்டும் மீண்டும் தவறாக உச்சரித்தாக அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சமஷ்டிகோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு!

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் தயாரிக்கப்பட்ட பிரகடனம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அத்துடன், இணைந்த வடக்கு, கிழக்கில் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு அவசியம் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 

ரஷ்யாவை கொதிப்படைய வைத்துள்ள உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு…!

ரஷ்யா மீதான தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்தார்.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோமீது நேற்று (30) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

” ரஷ்யா மீதான ஆளில்லா விமானத் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான போரின் தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வு.” எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும், உக்ரைனுக்கு சொந்தமான மூன்று ஆளில்லா விமானங்கள் நேற்று (30) ரஷ்ய கட்டடங்கள் மீது மோதியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ரஷ்ய நகரின் மையத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள Vnukovo விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேற்கு உக்ரைனில் உள்ள Ivano-Frankivsk இல் இருந்து ஒரு காணொளி மாநாட்டின் மூலம் கலந்து கொண்ட Volodymyr Zelenskyy, உக்ரைன் மேலும் வலுவடைந்து வருவதாகவும் அதை ரஷ்யாவால் தடுக்க முடியாது என வலியுறுத்தினார்.

அதேவேளை, தமது நாட்டின் தலைநகர்மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதால் ரஷ்யா கடும் சீற்றத்தில் உள்ளது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்புகளும் ரஷ்யாவை கொதிப்படைய வைத்துள்ளது.

விண்வெளி ராக்கட் பாகத்தை ஆஸி.யில் காட்சிப்படுத்த அனுமதிக்குமா டில்லி?

மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கி இராட்சத உலோக உருளை தொடர்பில் மர்மம் நீடித்த நிலையில், அது தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் ராட்சத உலோக உருளையொன்று இம்மாதம் முற்பகுதியில் கரையொதுங்கியது. இது தொடர்பில் பல்வேறு கோணங்களில் தகவல்கள் வெளியாகின. மர்மமும் நீடித்தது.

இந்நிலையில் அது செயற்கைக்கோள் விண்வெளி ராக்கட் பாகமென ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவால் ஏவப்பட்டுள்ளது.

ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்த ஆய்வின் பிரகாரம், இது விபத்துக்குள்ளான ராக்கெட்டின் ஒரு பகுதி என்று இறுதியாக முடிவு செய்துள்ளது.

மேற்படி விண்வெளிப் பொருளை அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்துவது தொடர்பில் மேற்கு ஆஸ்திரேலிய அரசு ஆராய்ந்து வருகின்றது. இது இந்தியா அனுப்பியிருந்த ராக்கெட்டின் பாகம் என்பதால் இதற்கு இந்திய அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்.

 

யாழில் கடலாமைகளை கடத்திய இருவர் கைது!

யாழ். மானிப்பாய் நகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாய் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பட்டாரக வாகனமொன்றை வழிமறித்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனத்தின் பின்புறமாக சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூடைகளை சோதனையிட்டபோது 4 கடலாமைகளை உயிருடன் இருந்துள்ளன.

இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“Voice to Parliament குறித்து ‘சாக்கடை’ அரசியல் முன்னெடுப்பு” – லேபர் அரசு சீற்றம்

Voice to Parliament அமைப்பை நிறுவுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் எதிரணியும், சில தரப்புகளும் சேறுபூசும் அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் Linda Burney தெரிவித்தார்.

” தெளிவாக இருக்கும் தண்ணீரை குழப்பி, அதனை சகதியாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

” இவ்வருடம் பிற்பகுதியில் நடைபெறவுள்ள சர்வஜன வாக்கெடுப்பானது, அரசியலமைப்புக்கான அங்கீகாரம் பற்றியது. இதன் பின்னணியில் வேறு நோக்கம் இல்லை.

பூர்வக்குடி மக்கள், Torres Strait தீவு மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்களுக்காக ஆலோசனை வழங்கவே குரல் சபை நிறுவப்படும்.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

” இலங்கை சிங்கள பௌத்த நாடாம் – எங்கும் புத்தர் சிலைகளை வைக்கலாமாம்”

“இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விகாராதிபதியிடமும், மறவன்புலவு சச்சிதானந்தத்திடமுமே கேட்க வேண்டும். ஆனால், இலங்கை சிங்கள – பௌத்த நாடு. புத்தர் சிலைகளை எங்கும் வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.” – என்றார்.

 

அரசியல் கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 44 பேர் பலி! 200 இற்கு மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் அரசியல் கட்சியொன்றின் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட பலர் பலியாகினர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இராணுவ விமான விபத்து குறித்து முழு விசாரணை! தேடுதல் பணி தொடர்கிறது!!

ஆஸ்திரேலிய இராணுவ விமான விபத்து தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெரிவித்தார்.

அத்துடன், காணாமல்போன படையினரை உயிருடன் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கையை மீட்பு படையினர் இழந்துவிட்டனர் எனவும் அவர் கூறினார்.

அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது. விமானப்படை, பொலிஸ், கடற்படை என 800 பேர் இந்த கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஜப்பான் உட்பட 13 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் Talisman Sabre கூட்டு போர்பயிற்சி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய இராணுவத்துக்கிடையிலான பயிற்சியின்போது, பயிற்சியில் ஈடுபட்டிருந்த MRH 90 Taipan விமானமே, Hamilton தீவு பகுதியில் விபத்துக்குள்ளானது.

விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும், விமானத்தில் இருந்த 4 படையினரின் கதி என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. தேடுதல் பணி தொடர்கின்றது.

முடிவுக்கு வருமா உக்ரைன் – ரஷ்ய போர்! சவூதியில் விசேட உச்சி மாநாடு!!

உக்ரைன், ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டுவரும் ஓர் முயற்சியாக விசேட உச்சி மாநாடொன்று சவூதி அரேபியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன.

எனினும், இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடு களும் பேச்சில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ரஷியாவுடன் பேச்சு ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடத்த உக்ரைன் முடிவு செய்தது. இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே இந்த போரை நிறுத்த பேச்சுக்கு வழிவகை செய்ய உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியா அரசு செய்து வருகிறது. 30 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். அதேசமயம் இந்த மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.07.2023)

மேஷம் – மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். மனதில் இனம் புரியாத பயம் நீங்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். பண ரீதியான விஷயத்தில் எளிதாக எவரையும் நம்பி விடாதீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் வேண்டும்.

ரிஷபம் – ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு விஷயங்களுக்காக மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்கிற மனோபாவம் உங்களை நேர்மறையாக சிந்திக்க செய்யும். முடிவை எடுத்த பின்பு பின்வாங்காதீர்கள். மற்றவர்களுடைய பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மிதுனம் – மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொந்த பந்தங்களால் மகிழ்வுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத நபர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. பயணத்தில் கவனம் தேவை.

கடகம் – கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை ஏதோ ஒன்று காப்பது போல உணர்வு ஏற்படும். தவறான பாதையில் செல்லாதீர்கள். மனதை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது நல்லது. தொழில் விஷயத்தில் அலட்சியம் செய்ய வேண்டாம். எடுக்கும் முடிவுகள் அனைவருக்கும் சாதகமாக இருப்பது நல்லது. பொன், பொருள் சேர வாய்ப்பு உண்டு.

சிம்மம் – சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுப்பறியில் இருந்து வந்த பணிகள் விரைவாக முடிவடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன ரீதியான விடயங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. வெளி வட்டார நட்பில் ரகசியங்களை உளற வேண்டாம். புதிய முயற்சிகளில் இருந்து சற்று தள்ளி இருங்கள்.

கன்னி – கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். தாம் தூம் என்று செலவு செய்யாதீர்கள். பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலாம் – துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இன்றுடன் சில பொறுப்புகள் உங்களுக்கு குறையும் வாய்ப்பு உண்டு. வெளியிடங்களில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாமல் கூடுதல் அக்கறை கொள்வது உத்தமம்.

விருச்சிகம் – விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த இடையூறுகள் நீங்கி நற்பலன்கள் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வெளியிடங்களில் அனுபவ அறிவை வெளிப்படுத்துவீர்கள். எதையும் சாதிக்கும் திறன் வளரும். சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகளை எளிதாக முறியடித்து வெற்றி காணக்கூடிய வாய்ப்பு உண்டு.

தனுசு – தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. முடியாது என்று சொன்ன காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனால் டென்ஷன் இருக்கும். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

மகரம் – மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. வெளியிடங்களில் சமயோசித புத்தியுடன் செயல்படுவீர்கள். வீண் பழி மறைய வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உங்களுடைய நீண்ட நாள் முயற்சிகளுக்கு நேர்மறையான விமர்சனங்கள் வரும். தடைபட்ட காரியம் விரைவில் நிறைவேறும்.

கும்பம் – கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும் நல்ல நாளாக இருக்கிறது. பிள்ளைகளால் அணுகலமான பலன்கள் உண்டு. எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிரயாணங்களால் ஆதாயம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மீனம் – மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்களுக்காக சிலவற்றை அனுசரித்து செல்வீர்கள். பெற்றோர்களுடைய நன்மதிப்பை பெறுவீர்கள். வெளி வட்டாரங்களில் பேசும் பொழுது உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாய அக்கறை அதிகரித்து காணப்படும்.

 

 

வட்டி விகிதத்தில் மாற்றம் வருமா? முதலாம் திகதி கூடுகிறது RBA நிதிச்சபை

ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டம் நாளை மறுதினம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஜுன் மாதத்துக்கான பணவீக்க விகிதம் குறைவடைந்திருந்தது. அத்துடன், காலாண்டுக்கான பணவீக்க விகிதமும் குறைவடைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, வட்டி விகிதம் குறித்து ஆராய்ந்து, முடிவெடுப்பதற்காக மத்திய வங்கி கூடுகின்றது. இதன்போது வட்டி விகிதத்தை மாற்றங்களை ஏற்படுத்தாதிருக்கும் முடிவு எடுக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டில்லி பறக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு – இந்திய தூதுவருடன் கொழும்பில் மந்திராலோசனை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் அவசர சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நாளை மறுதினம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போதான உறுதிமொழிகள், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நடத்திய சர்வகட்சிக் கூட்டம் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என்று தெரிகின்றது.

அதேவேளை, பாரத பிரதமருடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என அறியமுடிகின்றது.

2024 மார்ச்சில் ஜனாதிபதி தேர்தல்! ரூ. 10 பில்லியன் செலவாகுமென மதிப்பீடு!!

ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவாகும் எனத் தேர்தல்கள் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் – குறுகிய காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் செலவு தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினரிடம் ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் 10 பில்லியன் ரூபா வரை தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலுக்கு தயாராகிவருகின்றது.

ரஷ்யாமீது உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதல் – விமான நிலையத்துக்கு பூட்டு! தக்க பதிலடி காத்திருக்கிறது என ரஷ்யா எச்சரிக்கை!!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோமீது உக்ரைன் , ஆளில்லா விமான தாக்குதுல் நடத்தியுள்ள நிலையில், இது பயங்கரவாத செயல் என ரஷ்யா கண்டித்துள்ளது. அத்துடன், தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன், ரஷ்யாவுக்கு இடையேயான போர் 522 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோமீது, இன்று அதிகாலை 3 உக்ரைன் டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) தாக்குதல் உக்ரைனால் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

தடுக்கப்பட்ட டிரோன்கள் மொஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதின. இதில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்டது. உக்ரைன் எல்லையில் இருந்து ரஷிய தலைநகர் மாஸ்கோ 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“போர் நிறுத்தம்” – ஆபிரிக்க தலைவர்களின் கோரிக்கையை ஏற்றாரா புடின்?

அமைதி பேச்சு ஊடாக உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருமாறு ஆபிரிக்க தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் சாதக பதிலை வழங்கவில்லை என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய-ஆபிரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த ஆபிரிக்க தலைவர்களே புடினிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த புடின், மேற்குலகின் சதி வலைக்குள் உக்ரைன் சிக்கியுள்ளது எனவும், பேச்சு ஊடாக தீர்க்க இருந்த வாய்ப்புகளை அந்நாடு தவறவிட்டுவிட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உக்ரைன் கொத்து குண்டுகளை பயன்படுத்துவது தொடர்பிலும் அவர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள புடின், ஆபிரிக்க வலயத்தில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

ஐ.தே.க.வை பலப்படுத்த ரணில் அதிரடி வியூகம்! செப். 10 நடக்கபோவது என்ன?

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து, புதிய பலத்துடன் மக்கள் முன் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில், புதிய கட்சி யாப்புக்கான அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினம் தலைமைத்துவ சபையொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தலைமைத்துவ சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.

 

‘குதிரையால்’ ஏற்பட்ட விமானம் விபத்து – விமான படுகாயம்!

தெற்கு ஆஸ்திரேலியாவில் இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் விமானி படுகாயமடைந்துள்ளார்.

Yorke Peninsula நோக்கி புறப்படுவதற்கு விமானம் தயாரானவேளை, குதிரையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தையடுத்து அவசர சேவை பிரிவு அழைக்கப்பட்டது. பின்னர் 63 வயதான விமானியும், 56 வயதான பெண் பயணியும் சேதமடைந்த நிலையில் இருந்த விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

விமானி படுகாயமடைந்துள்ளார். அவர் Royal Adelaide வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பெண் பயணிக்கு காயம் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பில் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விசாரணை நடத்திவருகின்றது.

” இராணுவ புரட்சி ஏற்பட்ட நாட்டுக்கு பொருளாதாரத் தடை – 15 நாட்கள் கெடு”

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜருக்கான நிதி உதவிகளை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியமும், பிரான்சும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நைஜரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நைஜருக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்காவும் பரீசிலித்துவருகின்றது.

” நைஜருக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி உதவி நிறுத்தப்படும். ” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் அறிவித்தார்.

நைஜரில் சிறந்த நிர்வாகம், கல்வி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தனது பட்ஜெட்டில் இருந்து 503 மில்லியன் யூரோக்களை ($554m) , 2021-2024 காலப்பகுதிக்காக ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நைஜர் இராணுவம் தமது முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும், இங்கு அரசமைப்பின் பிரகாரம் ஆட்சி நிறுவப்பட வேண்டும் எனவும் ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக 15 நாட்கள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

“நிலம் விழுங்கும் பிக்குவால் தமிழ் கிராமமொன்று காணாமல்போகும் அபாயம்”

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை , தென்னமரவாடி மக்களுக்குரிய விவசாய காணிகளை , பௌத்த பிக்குவிடம் இருந்து மீட்டுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இடமே தென்னமரவாடியாகும். இக்கிராமத்தில் 92 குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் புல்மோட்டை அரிசிமலை விகாரையின் பௌத்த பிக்கு, தமது காணிகளை ஆக்கிரமித்து வருகின்றார் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

45 வருட காலமாக இக்கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், காணிகளுக்குள் காணப்படுகின்ற பற்றைகளை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்ற போதும் குறித்த பிக்கு, தமிழ் மக்களுக்கு உரிய காணிகளை ஆக்கிரமித்து பாரிய மரங்களை வெட்டி வருவதாகவும் ,இவ்வாறான அடாவடித்தனத்தினால் குறித்த கிராமத்துக்கு மக்கள் வருகை தருவதில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்குச் சொந்தமான காணிகளை புல்மோட்டை- அரிசி மலை விகாரையின் பிக்கு துப்புரவு செய்து – பாரிய மரங்களை வெட்டி காணிகளை ‘புனித பூமி’ எனக் கூறி ஆக்கிரமித்து வருவதாகவும் அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இனவாதம் கக்குகின்ற இந்த பிக்குகளால் கிராமம் காணாமல்போகும் அபாயம் உள்ளது. யுத்த காலத்தை அடுத்து நாங்கள் கிராமத்துக்கு வரும்போது இராணுவ முகாம் மாத்திரமே காணப்பட்டது.

இராணுவத்தினர் வழிபடுவதற்காக புத்தர் சிலையொன்றை வைத்து தமது சமய வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது அரிசி மலை பௌத்தப்பிக்கு அந்த இடத்தை விகாரைக்குரிய இடம் எனவும் 150 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணி தேவை எனவும் கூறி மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து வருவதாகவும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்படியான செயற்பாடுகளை அரச அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து மக்களுடைய காணிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னமர வாடி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.