ஜி-20 மாநாட்டை புறக்கணிக்கிறார் சீன ஜனாதிபதி! ஆஸி. பிரதமருடனான சந்திப்பும் இரத்து!!

இந்தியாவில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி – 20 அரச தலைவர்கள் உச்சி மாநாட்டை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தவிர்க்ககூடும் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன ஜனாதிபதிக்கு பதிலாக அந்நாட்டு பிரதமர் இம்மாநாட்டில் பங்கேற்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது. எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஜி – 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், சீன ஜனாதிபதியும் மாநாட்டை தவிர்க்கும் முடிவை எடுத்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் நடைபெறும் ஜி – 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

உலகில் இரு பலம்பொருந்திய பொருளாதார நாடுகளின் ஜனாதிபதிகள் ஜி – 20 மாநாட்டில் சந்தித்து பேசுவார்கள் என அது தொடர்பில் உலகின் கவனம் திரும்பியிருந்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்க்கவே சீன ஜனாதிபதி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவருகின்றது.

ஜி – 20 மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமரும் பங்கேற்கின்றார். இதன்போது சீன ஜனாதிபதியை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். சீன ஜனாதிபதி வராததால் இச்சந்திப்பு இரத்து செய்யப்படவுள்ளது. எனினும், இவ்வாண்டுக்குள் ஆஸ்தரேலிய பிரதமர் பீஜிங் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மனித புதைகுழி அகழ்வுப்பணியை ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிதி கையாளுகை தொடர்பில் இன்று(31) மன்றில் ஆஜராகுமாறு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அனைத்து தரப்பினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையில் யாழ்.சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில், அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டிய போது இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி அடைந்தால் சிறந்த வாய்ப்பை ஆஸி. இழந்துவிடும்!

சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி அடையும் பட்சத்தில் ஆஸ்திரேலியா சிறந்ததொரு வாய்ப்பை இழந்துவிடும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் Anthony Albanese.

ஆனால் ஆஸ்திரேலிய மக்கள்மீது தமக்கு நம்பிக்கை உள்ளது எனவும், அவர்கள் YES என வாக்களிப்பார்கள் எனவும் பிரதமர் கூறினார்.

Voice to parliament தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறும் என நேற்று அறிவிப்பு விடுத்தகையோடு YES பிரசாரத்தில் பிரதமர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

” சர்வஜன வாக்கெடுப்பின்போது ஆஸ்திரேலியர்கள் No என வாக்களித்தால் ஆஸ்திரேலிய சிறந்ததொரு வாய்ப்பை இழந்துவிடும். ஆனாலும் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

வாக்கெடுப்பு வெற்றிபெறும் என உறுதியாக நம்புகின்றேன். சரியானதை செய்ய முயற்சிக்கும் ஆஸ்திரேலியர்கள்மீது நம்பிக்கை உள்ளது. வாக்கெடுப்பு தொடர்பில் இன்னும் தீர்மானமொன்றை எடுக்காதவர்களின் மனங்களை வெல்வதற்கு இறுதி மூன்று வாரங்கள் மிக முக்கியமானவை.” – எனவும் பிரதமர் Albanese குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல்வாதிகளை மீண்டும் சீண்டுகிறார் மேர்வின்!

வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்படுவதன் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வடக்கு, கிழக்கில் தொல்லியல் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. டயஸ்போராக்களின் ஆதரவுடன் புலி ஆதரவாளர்கள் இதனை செய்துவருகின்றனர். அப்பாவி தமிழ் மக்கள் இதன் பின்னணியில் இல்லை. மாறாக தமிழ்த் தலைவர்களே இதன் பின்னணியில் செயற்படுகின்றனர்.

இந்த நாட்டில் தற்போது வாழ்வதற்காக போராட வேண்டியுள்ளது. தண்ணீர்கூட இல்லை. ஆனால் அரசியல் செய்கின்றனர். ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முற்படுகின்றனர். நாமலை முன்னிலைப்படுத்துகின்றனர். இது தவறு. ராஜபக்சக்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். நானும் ராஜபக்சக்களுக்கு சோரம் போனவன். ஆனால் தாஜுடினுக்கு செய்ததுபோல் எனது மகனுக்கும் செய்ய முற்பட்டனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். எனக்கு வேட்புமனு வழங்கவில்லை.

இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபனத்துக்கு ராஜபக்சக்களே என்னை அனுப்பிவைத்தனர். தாக்குதல் நடத்த உத்தரவிட்டனர்.” – என்றார்

சிங்கப்பூரை ஆளப்போகும் தமிழன்? நாளை ஜனாதிபதி தேர்தல்!

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் நாளை (01) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இது அந்நாட்டின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலாகும். தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தர்மன் சண்முக ரத்னத்தின் தாத்தா, பாட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள். தர்மன் 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். அவரது தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். தர்மன் சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார்.

2001 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார். தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார்.

NSW மாநிலத்தில் வெற்றி உறுதி! சர்வஜன வாக்கெடுப்பு குறித்து premier கருத்து

Voice to parliament தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் New South Wales premier, Chris Minns.

சர்வஜன வாக்கெடுப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அதற்கு New South Wales மாநிலத்தின் ஆதரவு உறுதி என்பதை premier அறிவித்துள்ளார்.

” குறித்த சர்வஜன வாக்கெடுப்பு எமது மாநிலத்துக்கும் முக்கியம். அது வெற்றிபெறுவதற்காக நாம் கடுமையாக உழைப்போம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டுமெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் 4 மாநிலங்களின் ஆதரவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆதிவாசி சமூகத்துடன் ஆஸி. தூதுவர் பேச்சு!

இலங்கையின் ஆதிவாசி மக்களுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Paul Stephens கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஆதிவாசி மக்களின் வரலாறு, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்துள்ளார்.

” இவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆஸ்திரேலியா ஆதரவு வழங்கும்.” என இதன்போது தூதுவர் உறுதியளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.

இலங்கையில் ஆதிவாசி சமூகத்துக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியம் என்ற கருத்தை அச்சமூகத்தின் தலைவர் அண்மையில் வெளிப்படுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆயுதக் கடத்தல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது! சரத் குமாரின் மகளுக்கும் தொடர்பா?

போதைப்பொருள், ஆயுதக்கடத்தில் வழக்கில் நேரில் ஆஜராகும்படி நடிகை வரலட்சுமிக்கு புலனாய்வு ஏஜென்சி அழைப்பாணை விடுத்துள்ளது. எனினும தமக்கு அவ்வாறான அழைப்பாணை எதுவும் வரவில்லை என வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் எனக் கூறப்படும் ஆதிலிங்கம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்த தகவல்களை பெற நடிகை வரலட்சுமிக்கு, நேரில் ஆஜராக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியமை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார்.

என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு விடுத்துள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த கும்பல் போதைப் பொருள், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு யாரேனும் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா , எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைந்திருப்பதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமார் மறுப்பு

தமக்கும் புலான்ய்வு துறையினரால் விசாரணைக்காக எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றும் ஊடகங்கள் தவறான தகவலை பரப்புவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 4 வருடங்களுக்கு முன்னரே ஆதிலிங்கம் தன்னுடன் வேலை செய்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

நால்வரின் உயிரை பறித்த விக்டோரியா விபத்து…!

விக்டோரியா வடகிழக்கு பகுதியில் காரொன்றும், truck ரக வாகனமொன்றும் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.

Chiltern இல் உள்ள Hume நெடுஞ்சாலையிலேயே இன்று முற்பகல் 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காருக்குள் இருந்த நால்வரே உயிரிழந்துள்ளனர்.30 வயதான B-double truck இன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த $450 மில்லியன் செலவு! ஒரு லட்சம் பணியாளர்கள் தேவை!

பூர்வக்குடி மக்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில் நடத்தப்படவுள்ள சர்வஜன வாக்கெடுப்புக்கு சுமார் ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு ஒக்டோபர் 14 ஆம் திகதி நடத்தப்படும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு தரப்பில் இருந்தும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வாக்கெடுப்புக்காக $450 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலிக பணிக்காக மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.08.2023)

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளி போடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லவும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று இந்த நாளை சந்தோஷமாக கழிக்க போகிறீர்கள். பிரச்சனை என்று வந்தால் தோல் கொடுக்க உறவுகள் இருக்கிறது. நல்ல நட்பு நல்ல உறவுகள் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் சேர்ந்து தலை நிமிர்ந்து நிற்க வைக்கக்கூடிய நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, எல்லோரிடமும் பேச்சில் நிதானத்தை காண்பித்தால், நீங்கள் நினைத்துப் பார்க்காத நிறைய நன்மைகள் தேடி வரும். அதிர்ஷ்டம் நம் பக்கம் இருந்தாலும், அவ்வபோது வரக்கூடிய சில சங்கடங்களை நினைத்து கவலைப்படக்கூடாது. எப்போதும் மன உறுதியை நிலை நிறுத்தினால் வாழ்வில் முன்னேறலாம்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன் கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது உங்களுடைய முன்னேற்றத்தை தடைப்படுத்தும். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளை கெடுத்துவிடும். ஆக முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை தரும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். ஒரு சில நாட்களில் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கும். கெட்டிமேளம் சத்தம் கேட்ட வீட்டில் குவா குவா சத்தமும் கேட்கும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக அமையப் போகின்றது. சொந்த தொழில் தொடங்க அல்லது வேறு ஏதாவது புதிய முயற்சிகளை மேற்கொள்ள இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் இன்று எதை தொட்டாலும் அது உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். கடன் தொல்லை படிப்படியாக குறையும்.

விருச்சிகம் – விருச்சக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்க போகின்றது. எல்லா வேலையையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்றும், கொஞ்சம் தூங்கினால் போதும் என்று இருப்பீர்கள். ஆனால் அது தவறு. இன்றைக்கான வேலையை இன்றே முடிப்பது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் நடக்கவே நடக்காது என்று ஒதுக்கி வைத்த காரியங்கள் எல்லாம் கூட, உங்களுக்கு சாதகமாக நடக்கும் என்றால் பாருங்களேன். கிடப்பில் போட்ட அரசாங்க வேலைகளை இன்று எடுக்கலாம். உடனே கையெழுத்தாகும். சிக்கலாக இருக்கும் பிரச்சனையை கூட உங்கள் சாதுரியமான திறமையினால் சரி செய்து விடுவீர்கள்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக அமையப் போகின்றது. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கான வேலைகளையாவது என்று தொடங்குவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசௌகரியமான நாளாக தான் இருக்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை விடுவது என்று சில குழப்பம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய உடல் நிலையில் சின்ன சின்ன சங்கடங்கள் உண்டாகும். குழந்தைகளை கவனிக்க முடியாத சூழ்நிலை என்று, சின்ன சின்ன பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையும் நிதானமும் தேவை. யார் என்ன சொன்னாலும் எனக்கு என்ன என்று உங்கள் வேலையை பார்த்தால் பிரச்சனை இல்லை. வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு சென்றால் மூக்கு உடைய போவது உங்களுக்குத்தான். கணவன் மனைவி அனுசரணையாக இருக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்துக்கோங்க.

பருப்பு போட்டு, படை அனுப்பிய இந்தியாவுக்கு பாலம் அமைக்கலாமா?

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பை ஏற்படுத்தும் விதத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டுமெனில் அது தொடர்பில் இலங்கை மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தரைவழித் தொடர்பு தொடர்பான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பேராயர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது நாட்டுக்குரிய இங்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் துண்டு துண்டாக விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. சில சக்திகளுக்கு அடிபணிந்து தவறான முடிவுகளை எடுத்து, நாட்டை சீரழிவு திசையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்தியாவுக்கு பாலம் அமைக்கப்போவதாக கூறுகின்றனர், ஒரு காலத்தில் இந்தியா பருப்பு போட்டது, அதன்பின்னர் இராணுவத்தை அனுப்பியது, இவை நினைவில் இருக்கின்றதா? பாலமும் அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும்……..

எமது நாடு சுதந்திர நாடாகும். எந்தகாலகட்டத்திலும் எவருக்கும் அடிமையாக இருந்தது கிடையாது. எமது தலைவர்களின் காட்டிக்கொடுப்பால்தான் அந்நியர்களுக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நாளையும் அது நடக்கலாம். எனவே, பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் மக்களிடம் கருத்து கணிப்பை நடத்துங்கள். அவ்வாறு மக்கள் அனுமதி இல்லாமல் செய்வது தவறு.” – என்றார்.

ராகமை பகுதியில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

 

 

 

 

 

தென்சீனக் கடல் பகுதியையும் உள்ளடக்கி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை

சீனா வௌியிட்டுள்ள புதிய வரைபடத்தினால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் (Aksai Chin) பகுதிகளை இணைத்து சீனா தனது தேசிய வரைபடத்தை வௌியிட்டுள்ளது.

இவ்வாண்டிற்கான தேசிய வரைபடத்தை நேற்று (29) வௌியிட்ட சீனா, அதில் அருணாச்சல பிரதேசத்திற்கு தெற்கு திபெத் என பெயரிட்டும் 1962 ஆம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது.

இதேபோல், தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தனது பகுதியாக புதிய வரைபடத்தில் சீனா தெரிவித்துள்ளது.

எனினும், இந்த தெற்கு சீன கடல் பகுதிக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற BRICS மாநாட்டின் இடையே சீன ஜனாதிபதி Xi Jinping-ஐ சந்தித்த இந்திய பிரமதர் நரேந்திர மோடி, இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் கவலையளிப்பதாக கூறியிருந்தார்.

புதிய வரைபடம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S. ஜெய்சங்கர், அபத்தமாக உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையதாக அமையாது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி எனவும் புதிதாக பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி கூறியதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

என் மகன் எங்கே? கிழக்கிலும் தாய்மார் கதறல்! (படங்கள்)

(அப்துல்சலாம் யாசீம்)

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, கிழக்கிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி இன்று (30) முற்பகல் 10 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் கவனயீப்பு போராட்டமொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பித்த பேரணி காந்தி பூங்காவரை சென்றது.

என் மகன் எங்கே? அவர் எப்போது வருவார், எங்கள் உறவுகள் எங்கே என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியபடி பேரணியாகச்சென்றனர்.

 

 

Aukus கூட்டணியில் இணையுமாறு ஜப்பான், தென்கொரியாவுக்கு அழைப்பு!

Aukus கூட்டணியில் இணையுமாறு ஜப்பான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளுக்கு மேற்படி கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் நாடுகள் அழைப்பு விடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றக்குழு பரிந்துரைத்துள்ளது.

Aukus கூட்டணியில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தற்போது அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களும் கிடைக்கப்பெறவுள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிகளை வழங்குவது மட்டும் Aukus அல்லவெனவும், ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளை அழைப்பதற்கான கோரிக்கையை தற்போதைய அங்கத்துவ நாடுகளிடம் இங்கிலாந்து முன்வைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

‘வாக்கெடுப்பில் இரகசிய திட்டம்’ – பிரதமர்மீது எதிர்க்கட்சி தலைவர் பாய்ச்சல்!

” சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் வேண்டுமென்றே மறைக்கின்றார். வாக்கெடுப்பு தொடர்பில் உங்களுக்கு தெளிவு இல்லாவிட்டால் No என வாக்களியுங்கள்.”

இவ்வாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton.

சர்வஜன வாக்கெடுப்புக்கான திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

“ஆஸ்திரேலியர்களுக்கு வரவிருக்கும் வாக்கெடுப்பைப் புரிந்துகொள்ள போதுமான விவரங்கள் இல்லை. இது தொடர்பில் உங்களுக்கு விவரம் தெரியாவிட்டால், குரல் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால். இல்லை என்று வாக்களியுங்கள்.

மத்திய அரசு வேண்டுமென்றே அதன் திட்டங்களை இரகசியமாக வைத்திருக்கின்றது.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

” சர்வதேச விசாரணை வேண்டும்” – யாழில் போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.

வடக்கு ,கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இப் போராட்டம் யாழ் முனியப்பர் கோவிலடிவரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றது.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிபெற 4 மாநிலங்களின் ஆதரவு தேவை!

ஆஸ்திரேலியாவில் பழங்குடியினருக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அவ்வாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியடையுமிடத்து பூர்வீகக் குடிமக்களும் Torres நீரிணை தீவு மக்களும் அவுஸ்திரேலிய அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்படுவர்.

அத்துடன் சட்டவாக்கத்தில் ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர்களுக்கென நிலையான பிரதிநிதித்துவமொன்று உருவாக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் கடும் விவாதத்திற்குரிய தலைப்பாக இந்த முன்மொழிவு காணப்படுகின்றது.

பழங்குடியினருக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பில், சுமார் 50 ஆண்டுகளாக வெற்றிகரமான வாக்கெடுப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படவில்லை.

இந்த வாக்கெடுப்பு வெற்றியடைய வேண்டுமாயின் பெரும்பான்மை ஆஸ்திரேலியர்கள் ‘YES’ என வாக்களிக்க வேண்டுமென்பதுடன், மொத்தமுள்ள 6 மாநிலங்களில் 4 மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவு தேவையென்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பணவீக்கம் வீழ்ச்சி

ஆஸ்திரேலியாவின் பணவீக்க வீதம் கடந்த மாதம் 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவடைந்துள்ளது. இதனால் மத்திய வங்கி வட்டி வீத அதிகரிப்பை மேற்கொள்ளாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜுலை மாதத்துக்கான நுகர்வோர் விலைச்சுட்டெண் 4.9 வீதமாக உள்ளது என ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜுன் மாதத்தில் இந்த வீதம் 5.4 ஆக இருந்தது.

 

எப்போது கிடைக்கும் நீதி? வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தினம் இன்று!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அரசியல், வன்முறை மற்றும் போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்திருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

2011 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

‘அவர்களை நினைவு கூறுவோம், அவர்களை மறக்க மாட்டோம் ‘ என்பதே இம்முறை தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் கட்டாயமாக காணாமல் செய்யப்படுதல் என்பது தடை செய்யப்பட வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் எனவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது எனவும் ஐ.நா வலியுறுத்துகின்றது.

இரண்டாம் உலகப்போரின் போது காணாமற்போன சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுவீடனின் Raoul Wallenberg இந்நாளில் பெரிதும் நினைவு கூரப்படுகின்றார்.

இலங்கையிலும் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்மீனியா, பாகிஸ்தான், துருக்கி, பிரேசில், சிலி, உகண்டா, கொசோவா, செனகல் உள்ளிட்ட பல நாடுகளில் காணாமல் போதல் சம்பவங்களில் கணிசமாக இடம்பெற்றுள்ளன.

சக மனிதர்களை காணாமற்போகச் செய்வது போன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் எண்ணமாகும்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று(30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.