முல்லைத்தீவு நீதிபதி வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தது ஏன்?

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமா அதிபரைச் சந்தித்தார் எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக அவர் தானாக முன்வந்து சட்டமா அதிபரை ஆலோசனைக்காகச் சந்தித்தார்.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் நீதிபதி என்ற வகையில் அவசியமான பிடியாணைகளைப் பிறப்பிக்கும அதிகாரம் அவருக்கு உண்டு.

நீதிபதி ரி.சரவணராஜாவின் இராஜிநாமா குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை அவர் ஒரு வாரத்துக்கு முன்னர் கொழும்புக்கு வந்து தனது காரை விற்றார் எனவும், இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

மேகங்களில் நுண்ணிய பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜப்பானின் புஜி, ஒயாமா சிகரங்களை மறைக்கும் பனியிலிருந்து நீர் சேகரிக்கப்பட்டது.

ஒவ்வொரு லிற்றர் தண்ணீரிலும் 6 முதல் 14 துகள்கள் வரை இருந்ததாக என்வார்மென்டல் கெமஸ்ட்ரி லெட்டர்ஸ் சஞ்சிகையில் கூறப்பட்டது.

மேகங்களில் உள்ள பிளாஸ்டிக் பருவநிலையை எப்படிப் பாதிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் படும்போது நுண்ணிய பிளாஸ்டிக் சிதைந்து போவதுண்டு. அப்போது வெப்ப வாயு வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

பிளாஸ்டிக்கால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டைக் கையாள்வது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 5 மில்லிமீற்றருக்கு குறைவான பிளாஸ்டிக் துகள்களே நுண்ணிய பிளாஸ்டிக் என அழைக்கப்படுகிறது. இது புடவை, வாகன டயர்கள், தனிப்பட்ட கார் உற்பத்திகள் மற்றும் ஏனைய மூலங்களில் இருந்து வெளியாகிறது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் மீனின் உடம்பில், ஆர்டிக் கடல் பணிக்கட்டி மற்றும் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் இருக்கும் பைரனீஸ் மலைகளிலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நுண்ணிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் பாதிப்புக்கப்பால் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய்கள் என பல்வேறு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையும் ஆக்கிரமிப்பு! பின்னணி என்ன?

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட சிங்கள விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் பால் பண்ணையாளர்கள், பல ஆண்டுகளாக தங்கள் மாடுகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்திய நிலத்தைவிட்டு உடனடியாக வெளியேறுமாறுக் கோரி  கோரி கிழக்கு மாகாணத்தில் பாற்பண்ணையாளர்கள் இரண்டு வாரங்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நில அபகரிப்பின் பின்னணியில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், இனவாத மோதல்களை தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்துவதே காணிகளை அபகரிக்கும் சிங்கள மக்களின் நோக்கம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“நிலத்தை அபகரிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். எங்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து இப்படி நடந்துகொள்கிறார்கள். அங்கே சகல வளங்களும் உண்டு. இங்கு வந்து இப்படி நடந்துகொள்கின்றனர். அவர்களின் நோக்கம் இனவாத மோதல்களை உருவாக்கி அமைதியின்மையை உருவாக்குவதுதான். இதற்கு பின்னால் அரசியல் பின்னணியும் உள்ளது.

செப்டெம்பர் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குழுக் கூட்டத்தில், பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டச் செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததையடுத்து, தமிழ்ப் பாற்பண்ணையாளர்கள் செப்டெம்பர் 15 வெள்ளிக்கிழமை முதல்  மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாடுகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்திய சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலம் சிங்கள விவசாயிகளால் விவசாய நடவடிக்கைகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பாற்பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அமைந்துள்ள புல் நிலம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் வகையில், குடியேற்றப்பட்ட 150 சிங்களக் குடும்பங்களுக்கும் பிரதேச பால் பண்ணையாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட 6,000 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில், சிங்கள விவசாயிகள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், இது புல் வளரக்கூடிய வளமான பூமியெனவும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன் வலியுறுத்துகின்றார்.

“992 பால் பண்ணையாளர்கள் உள்ளனர். அவர்களை நம்பி 3,000 குடும்பங்கள் உள்ளன. அவர்களின் பொருளாதாரம் இதை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் ஒரு நாளைக்கு 3,000 லீட்டர் பாலை வழங்குகிறார்கள். கறவை மாடுகளுக்குடி குடி தண்ணீர் இல்லை. அரசிடம் தீர்வைக் கோரினோம். அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் உட்பட அனைத்துக் கூட்டங்களிலும், எங்களின் பிரச்சினைகளை முன்வைத்துள்ளோம். தீர்வைத் தருவதாகச் சொல்கிறார்கள். எனினும் எதுவும் நடக்கவில்லை.”

பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாகாண ஆளுநரால் தீர்வுகளை வழங்க முடியாமல் போனது ஏன் எனவும் சீனித்தம்பி நிமலன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மாகாண ஆளுநரால் எமக்கு ஏன் தீர்வை வழங்க முடியாது? இதற்கு தலையீடு செய்யப்போவது இல்லையென  மாவட்டச் செயலாளர் கூறுகிறார். 13 நாட்களாக வீதியில் இருக்கின்றோம்.”

கறவை மாடுகளுக்கு தினசரி உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் கணிசமான அளவு கறவை மாடுகள் உயிரிழந்துள்ளதாக பிதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஒக்டோபர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் பாரம்பரிய கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மாட்டுத் தீவனத்திற்காகப் பயன்படுத்திய மயிலத்தமடு மேய்ச்சல் நிலங்களில் விவசாயிகள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி நுழைய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் முன்னர் குற்றம் சுமத்தியிருந்தார்.

தேர்தல் நடத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து

” உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மனித உரிமை மீறலாகும். எனவே, அத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.” – என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா கூறியவை வருமாறு,

” உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்படுவதும், அதனை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதும் மனித உரிமையாகும். அரசமைப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது மனித உரிமை மீறலாகும். எனவே, உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மனித உரிமை ஆணைக்குழு இருக்கின்றது.

அதேவேளை, சமூக ஊடகங்கள் கண்காணிப்பு என்ற போர்வையில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சி இடம்பெறுமானால் அது பாரதூரமான விடயமாகும். இவ்விவகாரம் தொடர்பில் எமது பரிந்துரைகள் முன்வைக்கப்படும்.” – என்றார்.

9 மாதங்களில் 2,500 அகதிகள் பலி!

மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் முயற்சியில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல்போயிருப்பதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து பேர் ஐரோப்பிய நாடுகளை அடைந்துள்ளனர்.

அகதிகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகரகத்தின் பணிப்பாளர் ருவேன் மெனிக்திவேலா ஐ.நா பாதுகாப்புச் சபையில்  பேசியபோது, 186,000 மக்கள் மத்தியதரைக் கடலை கடந்திருப்பதோடு இதில் 83 வீதமான சுமார் 130,000 பேர் இத்தாலியை அடைந்துள்ளனர் என்றார்.

மத்தியதரைக் கடலைக் கடந்து மக்கள் சென்றடைந்த மற்ற நாடுகளில் கிரேக்கம், ஸ்பெயின், சைப்ரஸ் மற்றும் மோல்டா நாடுகளும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அபாயகரமான கடல் பயணத்தை கடக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல்போனவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக பாதுகாப்புச் சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செப்டெம்பர் 24 இற்குள் 2023 இல் மாத்திரம் 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணமல்போயுள்ளனர்” என்று மெனிக்திவேலா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை 2022இல் இந்தக் காலப்பகுதியில் பதிவான 1,680 உயிரிழப்பு அல்லது காணாமல்போனவர்களுடன் ஒப்பிடுகையில் பெரும் அதிகரிப்பாகும்.

இந்த உயிரிழப்புகளில் முடிவை காணவில்லை என்றும் ஐரோப்பாவுக்காக தரைவழிப் பாதையும் இதைப்போன்றே ஆபத்து மிக்கது என்றும் மெனிக்திவேலா கூறினார்.

இதில் துணை சஹாரா ஆபிரிக்க நாடுகளில் இருந்து தரை வழியாகப் பயணித்து கடலை கடப்பதற்கான புறப்படும் நாடுகளான துனீஷிய மற்றும் லிபிய கடற்கரை வரையான பயணப் புள்ளிகள் தொடர்பிலும் பாதுகாப்பு சபையிடம் விபரிக்கப்பட்டது.

“மக்கள் அவதானத்தை பெறாத நிலையில் நிலங்களில் உயிரிழப்புகள் இடம்பெற்று வருகின்றன” என்று மெனிக்திவேலா குறிப்பிட்டார்.

துனீஷியாவில் இருந்து மத்தியதரைக் கடலை கடக்கும் முயற்சியில் 102,0000க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விடவும் 260 வீதம் அதிகரிப்பாக இருப்பதோடு லிபியாவில் இருந்து 45,000க்கும் அதிகமானவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மூத்த எம்.பியின் இராஜினாமாவால் ஆட்டம் கண்டுள்ள Tasmania அரசு!

Tasmania லிபரல் அரசின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரின் திடீர் இராஜினாமா, மாநில அரசின் இருப்பை ஆட்டம் காண வைத்துள்ளது.

Elise Archer என்பவரே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார்.

லிபரல் கட்சி தலைமைமீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Tasmaniaவில் தொங்கல் நிலையிலேயே லிபரல் அரசு உள்ளது. AFL மைதான விவகாரத்தையடுத்து ஏற்கனவே இரு எம்.பிக்கள் கட்சியைவிட்டு விலகி, சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றனர்.

Archer இன் பதவி விலகலால் அவரின் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று Premier Jeremy Rockliff தெரிவித்துள்ளார்.

‘தமிழ் நீதிபதிக்கு அச்சுறுத்தல்’ – பாரிய போராட்டத்துக்கு தயாராகும் தமிழ்க் கட்சிகள்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெரோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் மேற்படித் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மிகப் பெருமெடுப்பில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ். நகர் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

அதன்பின்னர் முல்லைத்தீவை முடக்கிப் போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எம்.கே.சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரும், சி.வி.கே.சிவஞானம் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), தியாகராஜா நிரோஷ் (ரெலோ), பா.கஜதீபன் (புளொட்), க.சர்வேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எஸ்.கலையமுதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.09.2023)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மாலை நேரம் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காலையிலிருந்து கஷ்டப்பட்டு செய்த வேலைகளுக்கு எல்லாம் ரிலாக்ஸாக இன்று மாலை மனைவி குழந்தைகளோடு வெளியில் சென்று சந்தோஷமாக இருப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். விவசாயிகளுடைய புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். அதிக பண வரவிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிரந்தர பண வரவை தரும் ஐடியாக்கள் இன்று உங்கள் வசப்படும். நன்மைகள் நடக்கக்கூடிய நாள் இது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் அக்கறை காட்டவும். அலட்சியமாக செய்யக்கூடிய வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளின் கண்பார்வை நேரடியாக உங்கள் மீது விழும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். வீண்விரய மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கும் உங்கள் கையால் கடன் கொடுக்காதீங்க. இன்று கடன் கொடுத்தால் திரும்பி வராமலேயே போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எப்போதும் போல சுமூகமான சூழ்நிலை நிலவும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வழிபாட்டில் மனது ஈடுபடும். குடும்பத்தோடு கோவில்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை அலட்சியமாக வைக்காதீங்க.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்கள் இன்று செய்த தவறை நினைத்துப் பார்த்து கஷ்டப்படுவீர்கள். தவறுக்கு மனது வருந்தி சண்டை போட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் உங்களுடைய மனது லேசாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சொந்த தொழிலில் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அட்ஜஸ்ட் செய்து நடக்கவும். முன்கோபம் வேண்டாம்.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் இன்று சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் நேர்மையாக நடப்பதால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் செல்லும்படி யார் சொன்னாலும் அதை கேட்காதீங்க. போலீஸ் கேஸ் வழக்குகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அனாவசியமாக தலையிடக்கூடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். ஆனால் உடல் சோர்வு ஓய்வு எடுக்கும்படி சொல்லும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முடிந்தால் ஒரு நாள் லீவு போட்டு விட்டு நன்றாக தூங்கினாலும் தவறு கிடையாது. ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டாம். ஆர்வம் இல்லாமல் வேலை செய்வதில் சிக்கல்கள் வந்தால் பின்னாடி பிரச்சனை பார்த்துக்கோங்க.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். யாராவது வந்து உதவி என்று கேட்டால் அதை நீங்கள் மறுக்காமல் செய்யுங்கள். நீங்கள் செய்யும் உதவி உங்களுடைய பிரச்சனைக்கு உண்டான தீர்வை கொடுக்கும். உங்கள் கையால் இன்று நீங்கள் நாலு பேருக்கு செய்யக்கூடிய நல்லது நாளை உங்களுக்கு புண்ணியத்தை தேடி தரும். யாரையும் உதாசீனப்படுத்தாதீங்க. அடம் பிடித்து நிறைய விஷயத்தில் சாதிக்கக்கூடாது. விட்டுக் கொடுப்பது நன்மையை தரும்.

தனுசு – தனுசு – தனுசு ராசிக்காரர்கள் இன்று நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் நிம்மதியை கிடைக்க நாலு பேர் வருவாங்க. இல்லாதது பொல்லாததை சொல்லி உங்கள் மனசை கலைக்க பாப்பாங்க. மூன்றாவது மனிதர்கள் சொல்வதைக் கேட்டு ஆடாதீங்க. வாழ்க்கை துணை சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் சொல்லக்கூடிய பேச்சுகளை கேட்டு நடங்கள். மனதை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நீண்ட நாள் நோய் நொடி பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரை சாப்பிடுவது குறையும். வீட்டில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நிறைய சுப செலவுகள் ஏற்படும். திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பேராசை படுவீர்கள். எல்லா நல்லதும் இன்னைக்கே நடந்து விட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள். ஆனால் அது தவறு. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். நினைத்த நல்லது, நினைத்தபோதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் ருசி இருக்காது. சின்ன சின்ன தோல்விகளும் வாழ்க்கையில் தேவை. அவசரப்பட்டு குறுக்கு வழியில் போகாதீங்க. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அலட்சியமாக கையாளாதீர்கள்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். மன நிம்மதி ஏற்படும். இரவு நிம்மதியான தூக்கம் வரும். இதுநாள் வரை இருந்த அலட்சியம் எல்லாம் இனிமேல் அக்கறையாக மாறும். வாழ்க்கை என்றால் என்ன. பணம் இல்லாததால் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை எல்லாம் இந்த மாத இறுதியில் உணர்ந்திருப்பீர்கள். சம்பளம் வந்த உடன் செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

சீனாவில் சிறப்பு தூதுவரை களமிறக்க தயாராகிறது ஆஸி.!

AUKUS பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் Quad பாதுகாப்பு உரையாடல் ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மூத்த  நிர்வாக அதிகாரியை,  சீனாவுக்கான தூதுவராக நியமிப்பதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.

சீனாவுக்கான ஆஸ்திரேலியா தூதுவர் பதவி என்பது முக்கியத்துவம் மிக்கது என்பதுடன், கடும் சவால்மிக்கதும்கூட. எனவேதான் நிபுணத்தும் உடைய ஒருவரை களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் Anthony Albanese இன், சர்வதேச கொள்கை ஆலோசகராக செயற்படும் Scott Dewar,  சீனாவுக்கான ஆஸ்திரேலியா தூதுவராக நியமிக்கப்பபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது சீனாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவராக செயற்பட்டுவரும் Graham Fletcher தனது பதவி காலத்தை முடித்துக்கொண்டு விரைவில் நாடு திரும்பவுள்ளார். அதன்பின்னரே புதிய நியமனம் இடம்பெறும்.

இலங்கைக்கு 2ஆம் கட்ட கடன் கிடைக்குமா?

” சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்ட கடன் விரைவில் கிடைக்கும். இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அலுவலக மட்டத்திலான பேச்சுகளில் துரித இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுகள் தொடரும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரையாடல்களின் பின்னர் எமக்கு 2 ஆம் கட்ட கடன் உதவி கிடைக்கும். எனவே, இது விடயத்தில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டுமானால் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த இலக்குகளை நாம் அடைய வேண்டும்.

அதேவேளை, இந்த அரசு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆடுவதாக சிலர் கூறினர். அவர்களுக்கும் தற்போது தெளிவாக பதில் கிடைத்திருக்கும் என நம்புகின்றோம்.

சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டும் விடயங்கள் முக்கியமானவை, அரசுக்கு மட்டும் அல்ல எதிரணிக்கும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.” – என்றார்.

புதிய Premier இன் நகர்வுக்கு பிரதமர் பச்சைக்கொடி!

விக்டோரியா மாநில அரசின் அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கு புதிய Premier Jacinta Allan எடுத்த முடிவுக்கு லேபர் கட்சியின் தலைவரும், பிரதமருமான Anthony Albanese ஆதரவு தெரிவித்துள்ளார்.

விக்டோரிய மாநில Premier ஆக செயற்பட்ட Andrews இன் திடீர் இராஜினாமாவை அடுத்து,  அப்பதவிக்கு துணை பிரிமீயராக செயற்பட்ட Jacinta Allan நியமிக்கப்பட்டார்.

மாநில போக்குவரத்து அமைச்சர் Premier பதவிக்கு போட்டியிடபோவதாக கட்சி கூட்டத்தில் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் Jacinta Allan தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே Jacinta Allan, பிரதமரை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் மாநில அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது. Treasurer Tim Pallas , அப்பதவியில் நீடிப்பார். நாடாளுமன்ற உறுப்பினர் Vicki Ward, அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளார்.

IMF கடன் குறித்து அபாய சங்கு ஊதுகிறார் சஜித்!

“ அரசின் ஊழல் கொள்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், சரியான இலக்குகளை நிறைவேற்றாததால் இரண்டாவது கடன் தொகைகூட இடைநிறுத்தப்பட்டுள்ளது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அஸ்வெசும என்ற பெயரில் விஞ்ஞானபூர்வமற்ற,பயனற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஏழை மக்களைக் கூட அனாதைகளாக்கியுள்ளனர். சிறுநீரகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பிரஜைகளுக்குகூ; நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. ஆட்சியில் உள்ள ஊழல்தான் இதற்கு காரணம். ஆட்சியாளர்களின் மிக மோசமான ஊழல் கொள்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் கூட கவலை வெளியிட்டுள்ளது. அரச வருவாய் இலக்குகளை அரசு அடையத் தவறியதால்,சர்வதேச நாணய நிதியம் கூட தனது இரண்டாம் கட்ட கடன் தொகை வழங்குவதையும் நிறுத்தியுள்ளது.

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையிலும் நாட்டின் தலைவர்கள் மாதந்தோறும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரசானய உரக் கொள்கையைக் கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்தவர்கள்,மொட்டுவின் அமைச்சுப் பதவி இல்லாத எம்.பி.க்கள்,தோட்ட மக்களின் வாக்குகளால் வந்து தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத எம்.பி ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது அரசியல் இலஞ்சமாகும்.இந்த அனைத்து பயணங்களுக்கான அனைத்து செலவுகளையும் நாட்டின் 220 இலட்சம் மக்களின் பணத்திலிருந்தே செலவளிக்கின்றனர்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு இல்லை , 65 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வேளை சாப்பிட்ட மக்கள் இப்போது 2 வேளை சாப்பிடுகிறார்கள் , இதனால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் , அவ்வாறே,மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அதிக விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது.” – என்றார்.

 

 

ஆஸி. விமானப்படையில் இருந்து விடைபெறுகிறது MRH-90 Taipan!

ஆஸ்திரேலிய விமானப்படைக்குரிய MRH-90 Taipan ரக விமானங்களை சேவையில் இருந்து நிறுத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சர் Richard Marles இன்று உறுதிப்படுத்தினார்.

2024 டிசம்பர் முதல் மேற்படி விமானங்கள் அனைத்தும், சேவையில் இருந்து நிறுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற கூட்டு இராணுவ பயிற்சியின்போது, MRH-90 Taipan விமானம் விபத்துக்குள்ளானதில் 4 படையினர் உயிரிழந்தனர். அதன்பின்னர் மேற்படி விமானங்கள் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

‘உடைந்தது கூட்டமைப்பு’ – நாடாளுமன்றில் தனித்து இயங்க ரொலோ, புளொட் தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது.

ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தில் நேற்று (28) மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ்த் தேசியக் கட்சி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் செயற்பட்டு வந்திருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது பிரிந்து நின்றனர்.

தமிழரசுக் கட்சி தனி அணியாகவும், ஏனைய கட்சிகள் வேறு பலரையும் இணைத்துக் கொண்டு புதியதொரு கூட்டமைப்பையும் (ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உருவாக்கியிருந்தனர்.

ஆனாலும் நாடாளுமன்றத்தில் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்த நிலையில் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது என்பதால் பிறிதொரு அணியாகச் செயற்பட அவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.

இதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது தனி அணியாகச் செயற்படப் போவதாகச் சபாநாயகருக்கு அறிவித்தலை வழங்கிவிட்டு இனிமேல் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றில்லாமல் தனியான அணியாகச் செயற்படுவது என அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

அதேபோன்று எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலின்போது தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளரை இறக்குவது எனவும், இதற்கமைய தமிழர் தரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவது எனவும் தீர்மானித்துள்ளனர்

மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஏனைய தரப்பினருடன் இணைந்து சந்திப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இவ்வாறு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைவருமாக இணைந்து ஆராய்ந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

சீனா கடும் எதிர்ப்பு! தைவான் பயணத்தை கைவிடுவாரா Scott Morrison?

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Scott Morrison தைவானுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று சீனத் தூதுவர் Xiao Qian தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய எம்.பிக்கள் குழு, தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. இது தொடர்பான ஆட்சேபனையை சீன தூதுவர் வெளிப்படையாகவே வெளியிட்டுள்ளார்.

தைவான் சீனாவின் ஓர் மாகாணம் எனவும், இதனை ஆஸ்திரேலிய அரசியல் வாதிகள் புரிந்து செயற்பட வேண்டும் எனவும் தூதுவர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மொரிசன், அடுத்த மாதம் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு உரையாற்றவுள்ளார்.

” இவ்வாறான பயணங்கள் ஆஸ்திரேலியா-சீனா உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், பிரிவினைவாத உணர்வை தூண்டும்.” – எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு தற்போது மேம்பட்டுவருகின்றது. இதன் பயனாக தடைகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. பிரதமர் அல்பானீஸி எதிர்வரும் நவம்பர் மாதம் சீனா செல்ல திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்தது தைவான் – புருவத்தை உயர்த்துகிறது சீனா!

தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானித்துவருகின்றது.

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் அண்மை காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது.

இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறிவருகின்றது.

இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில்,

தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார். இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆஸிக்கு எதிரான மற்றுமொரு வர்த்தக தடையை நீக்கியது சீனா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வைக்கோல் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஈராண்டுகளுக்கு பிறகு சீனா நீக்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுமார் 25 ஆஸ்திரேலிய வைக்கோல் ஏற்றுமதியாளர்கள் சீனாவின் வர்த்தக அனுமதிகளைப் புதுப்பித்துக்கொள்வதில் தடையை எதிர்கொண்டனர்.

தடை விதிக்கப்படுவதற்கு முன்பு, ஆஸ்திரேலியா 360,000 மில்லியன் டன் வைக்கோலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. அதன் மதிப்பு சுமார் $160 மில்லியன் ஆகும்.

மூன்று ஆஸ்திரேலிய வைக்கோல் ஆலைகள் சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை தக்கவைத்துக்கொண்டாலும், வர்த்தகம் 2022-23 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட சுமார் 60,000 டன்களாக குறைந்துள்ளது.

இதற்கு முன்னர் barleyமீதான வரியை சீனா நீக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (29.09.2023)

மேஷம் – மேஷ ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய அத்தனை திறமைகளையும் ஆயுதமாக பயன்படுத்துவீர்கள். எதிரிகளை ஜெயிக்க இன்று சாதகமான நாள். போட்டி, சவால் விட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனநிறைவும் சந்தோஷமும் இன்று நிறைவாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சுக்களை தொடங்கலாம்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் வேண்டாம். புதுசாக நிலம் வீடு வாங்கும் பேச்சு வார்த்தைகளை தள்ளிப் போடுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. பர்ஸை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தம் தொழிலில் எதிர்பாராத மாற்றம் நல்ல வரவை கொடுக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஜங்க் ஃபுட் சாப்பிடக்கூடாது. கூடுமானவரை ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கலைத்துறையினருக்கு வெற்றிக்கான நாள் இது. விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். முடியாத காரியத்தை கூட முயற்சி செய்து வெற்றி அடைகிறார்கள். உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். தெரியாத விஷயத்தை கற்றுக் கொள்ள நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் திறமை வெளிப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல நிறைய விதைகளை போடக்கூடிய நாள் இந்த நாள்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த நபரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிரிந்த கணவன் மனைவி சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தோடு கோயில் சென்று இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்துவீர்கள். மாமியார் வழி சொந்தத்தின் மூலம் ஆதாயம் கிட்டும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் தாமதம் இருக்கும். வேலைக்கு செல்வதாக இருந்தால் கொஞ்சம் சீக்கிரமே வீட்டில் இருந்து கிளம்புங்கள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் கொஞ்சம் சீக்கிரமே உங்களுடைய வேலையை செய்ய வேண்டும். தாமதம் ஆவதன் மூலம் நிறைய வாய்ப்புகள் கைவிட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுதல் கவனம் எடுத்து அக்கறையோடு செயல்பட்டால் இன்றைய நாள் நன்மை உண்டு.

துலாம் – துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆக்டிவாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள்‌. உங்களை பார்க்கும் போது அனைவரும் வியப்படைவார்கள். உடல் சோர்வு இல்லாமல் பம்பரம் போல சுழன்று வேலை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டை வெல்வீர்கள். நாளைய வேளையை கூட சில பேர் இன்றே செய்து விடுவீர்கள் என்றால் பாருங்கள். கணவன் மனைவிக்கிடையே மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சமயோஜித புத்தியோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்து வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். எதிரிகள் நீங்கள் சவாலாக விளங்குவீர்கள். மேலதிகாரிகள் முதல் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு திறமை வெளிப்படும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். அதற்காக அடம் பிடிக்க செய்யாதீங்க. அது அழிவை கொடுத்து விடும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி செய்து கடன் தொகை அப்ரூவல் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாக்கெட்டில் காசு இருக்காது. செலவுக்கு மேல், செலவு வந்து கழுத்தை நெரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. கூடுமானவரை செலவை குறைப்பது தான் உத்தமம். மற்றபடி செய்யும் வேலை தொழிலில் சுமுகமான போக்கு நிலவும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனதில் பதற்றம் இருக்கும். நம்மால் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற தடுமாற்றம் ஏற்படும். சில வேலைகளை செய்ய முடியாமல் பின்னடைவு ஏற்படும். கவலைப்படாதீங்க, தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை மனதில் ஆழ பதிய வையுங்கள். மற்றபடி கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேற்படும் ‌

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். ஆனால் அந்த சின்ன சின்ன தோல்விகள் தான் உங்களுடைய பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும். அதை பற்றி கவலைப்படாதீங்க. விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க இன்னும் கொஞ்சம் கூடுதல் முயற்சியை போட வேண்டும். சேல்ஸ்மேன் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டார்கெட்டை அச்சீவ் செய்வதில் ரொம்ப கஷ்டம் இருக்கும். வேலை பளு அதிகமான நாள்தான் இது.

உயிர் அச்சுறுத்தலால் பதவி துறந்த தமிழ் நீதிபதி – நாட்டை விட்டும் வெளியேற்றம்?

முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் உட்பட முக்கிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதி ரீ.சரவணராஜா , பதவி துறந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி இது தொடர்பான கடிதத்தை அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி துறப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நீதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்பதை ஆஸி. ஏற்க வேண்டும்” – தூதுவர் கடும் சீற்றம்

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானுக்கு பயணம் மேற்கொண்டதை சீனத் தூதுவர் கடுமையாக சாடியுள்ளார்.

தைவான் சீனாவுக்கு சொந்தமானது எனவும், பிரிவினைவாத சக்திகளால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையாளப்படுகின்றனர் எனவும் அவர் வசைபாடியுள்ளார்.

தைவானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய எம்.பிக்கள் குழு அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்தியது. அத்துடன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Scott Morrison அடுத்த மாதம் தைவான் செல்லவுள்ளார்.

” ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கவனமாக சிந்தித்திருக்க வேண்டும்.” – என்று சிட்னியில் வைத்து கருத்து வெளியிட்டுள்ளார் சீனத் தூதுவர் Xiao Qian.

” தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என்பதை ஆஸ்திரேலியா ஏற்க வேண்டும். சீனாவின் இந்த உறுதிப்பாட்டை ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் மதிக்க வேண்டும். 1.4 பில்லினர் சீன மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.