ஆஸ்திரேலியாவில் 5 ஆண்டுகளில் 5,800 பேரை பலியெடுத்த வீதி விபத்துகள்….!

ஆஸ்திரேலியாவில் கடந்த 5 வருடங்களில் வீதி விபத்துகளில் 5 ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் குறைவடைந்திருந்த வீதி விபத்துகள், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

New South Wales, விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் 2023 ஆம் ஆண்டு அதிக விபத்துகளும், மரணங்களும் பதிவாகியுள்ளன.

2023 இல் வீதி விபத்துகளில் ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மரணங்கள் பதிவான ஆண்டு இதுவாகும்.

அத்துடன், நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியிலும் விபத்துகள் அதிகரித்துள்ளன.

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல் – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்…!

யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 11.30 மணியளவில் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதுடன் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உக்ரைன்மீது உக்கிர தாக்குதல் – 30 பேர் பலி! ரஷ்யாமீது ஆஸி. கடும் சீற்றம்!!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மீது நேற்றிரவு கொடூர தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதில் 30 பேர் பலியானர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் கீவ் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 158 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மகப்பேறு வைத்தியசாலை, கல்வி நிலையங்கள், குடியிருப்புகள் என பல இடங்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 30 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷ்யாவின் 158 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 114 ஐ சுட்டு வீழ்த்தினோம்’ என்று தெரிவித்துள்ள்னர்.

அதேவேளை, குறித்த தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

” நாம் உக்ரைன் பக்கம் நிற்கின்றோம். உக்ரைன்மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் சட்டவிரோதப்போர் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் வலியுறுத்தியுள்ளது.

மெல்பேர்ணில் உள்ள அமெரிக்க தூதரகம்மீது பாலஸ்தீன ஆதரவாளர்கள் தாக்குதல்!

மெல்பேர்ணில் உள்ள அமெரிக்க தூதுரகம்மீது பாலஸ்தீன ஆதரவு குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

தூதரக வளாகத்தில் வெளிப்புறத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ‘சுதந்திர பாலஸ்தீனம்’ என்ற அங்கு எழுதப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில், இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்து வரும் நிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விக்டோரியா மற்றும் பெரடல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அமெரிக்கா கண்டித்துள்ளது.

 

நல்லாட்சிகாலத்தில் வழக்குகள் மூடிமறைப்பு – வெளியான பகீர் தகவல்

” நல்லாட்சி காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் மூடிமறைக்கப்பட்ட வழக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மீள விசாரணைக்கு கொடுத்துக்கொள்ளப்படும். அதற்காக நீதித்துறைக்கு தேவையான வளங்கள் வழங்கப்படும். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பவே முடியாது.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு,

” நாம் ‘பைல்களை’ காட்டிக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். நல்லாட்சி காலத்தில் ‘டீல்’ காரணமாக மறைக்கப்பட்ட பல வழக்குகள் உள்ளன. இது குறித்து விக்கிரமசிங்க, ராஜபக்சக்களுக்கிடையில் உடன்படிக்கையும் உள்ளது. இவ்வாறு மறைக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் மீள விசாரணைக்கு சட்டத்தின் முன் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவான விசாரணைக்கு நீதித்துறைக்கு தேவையான வளங்கள் – வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதுடன், கொள்ளை அடிக்கப்பட்ட பணமும் மீளப்பெறப்படும்.” – என்றார்.

பெருந்துயர்…! தாய், மகன்மார், மகள் சடலங்களாக மீட்பு….!!

2ஆம் இணைப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றனர்.

35 வயதுடைய தாய், 9 மற்றும் 7 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் 6 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த 28 ஆம் திகதி நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் இறுதிக்கிரியைகள் நேற்று நடந்துள்ளன.

இந்தநிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

கணவனின் இறுதிக்கிரியை நடைபெற்ற மாலபேயில் உள்ள உறவினரின் வீட்டில் வைத்தே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

நிதி பிரச்சினை காரணமாக கணவன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

………

(முதலாம் இணைப்பு)

மாலபே – காஹன்தொட்ட பகுதியில் நால்வரின் சடலங்கள் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாய் (வயது – 35) , மகன்மார் மற்றும் மகள் (வயது – 10) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த 28 ஆம் திகதி நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றன.

இந்த நிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்க தயாராகும் ஆஸி.! பிரதான நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு!!

புத்தாண்டை வரவேற்பதற்கு ஆஸ்திரேலியர்கள் தயாராகிவருகின்றனர். தலை நகரங்கள் மற்றும் பிராந்திய நகரங்களில் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

சிட்னியில் துறைமுக பாலம் வளாகத்தில் பெருந்திரளான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், வாண வேடிக்கை நிகழ்த்துவதற்காக பட்டாசுகளும் கொள்வனவு செய்யப்பட்டுவருகின்றன.

சிட்னியில் இடம்பெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 புத்தாண்டு கொண்டாட்டத்தால் 280 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

” சிட்னி சுற்றுலா, வணிகம், கலாச்சாரம், தொழில்நுட்ப படைப்பாற்றலுக்கான உலகளாவிய நகரம் என்பதை மக்கள் உலகிற்கு நினைவூட்டுகிறார்கள். மிக முக்கியமாக, சிட்னி எங்கள் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட நகரம்” என்று சிட்னி மேயர் கூறினார்.

அத்துடன், சிட்னி துறைமுக வளாகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பொலிஸார் களமிறக்கப்படுவார்கள் என NSW மாநில பிரதி காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

அத்துடன், மெல்பேர்ணிலும் CBD பகுதியில் மக்கள் திரளவுள்ளனர். Brisbane, கன்பரா உட்பட மேலும் பல நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டவுள்ளது.

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.12.2023)

மேஷம் – ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் தான் சரியாக முடிக்க வேண்டும். நீங்கள் இன்னொருவரை நம்பி, உங்க பொறுப்பை அடுத்தவர் கையில் ஒப்படைக்காதீங்க. பிறகு கெட்ட பெயர் உங்களுக்கு கிடைத்துவிடும். ஜாக்கிரதையா இருந்துக்கணும். இன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தாலும் சில கூடுதல் வேலைகள் உங்களுக்கு இருக்கும். அதை சரியாக முடிக்க வேண்டியது உங்களுடைய கடமை.

ரிஷபம் – ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும் நாளாக இருக்கும். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சாப்பாடு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை முயற்சி எடுத்து இன்று செய்து முடிப்பீர்கள். சில பேர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புத்தாண்டு கொண்டாட்டம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம் – ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நீங்கள் சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீங்க. அதற்கு தேவையான வேலைகளை செய்வதில் கொஞ்சம் செலவும் ஆகும். மகிழ்ச்சி நிறைந்த நாள் தான். ஆனால் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

கடகம் – ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். இன்று மதியம் வீட்டு சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷமான புத்தாண்டாக பிறக்கும்.

சிம்மம் – ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. எல்லா விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. மனைவியின் பேச்சுக்கு மரியாதை கொடுங்கள். இன்று மதியம் வரை சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாலை நேரம் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைத்து விடும். அதன் பிறகு சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். புத்தாண்டை எப்படி வரவேற்பது என்ற கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி – ராசிக்காரர்களுக்கு இன்று சுமுகமான நாளாக இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களுடைய வேலையில் எந்த தடையும் இருக்காது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும். அனுகூலம் நிறைந்த இந்த நாளில் வீட்டில் சுப காரியம் பேச்சுகளும் தொடங்கலாம். நல்லதே நடக்கும்.

துலாம் – ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட வேண்டும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்காது. அதற்காக முயற்சி செய்யாமல் விட்டாலும்,சில தோல்விகள் உங்களை வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளிவிடும். விடாமுயற்சி மட்டுமே இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். குறுக்கு வழியை பயன்படுத்த வேண்டாம். தெரியாத மூன்றாவது மனிதர்களின் பேச்சை கேட்காதீங்க.

விருச்சிகம் – ராசிகாரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். உங்களை அடுத்தவர்கள் பாராட்டும் அளவுக்கு நல்லது நடக்கும்‌. பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணிவோடு பேசுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். முன்கோபத்தை குறைக்கணும். பெரியவர்களுக்கும், பெரிய பதவியில் இருப்பவர்களுக்கும் கட்டாயம் மதிப்பு மரியாதையை கொடுக்கனும்.

தனுசு – ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தது சரியான நேரத்தில் நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏமாற்றத்தை தாங்கும் மனப்பக்குவம் தேவை. உடைந்து போகாதீங்க. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கு உண்டான தீர்வை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்.

மகரம் – ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். யாரையும் ஏமாற்றக்கூடாது. அதற்காக எதுவும் தெரியாமல் ரொம்பவும் வெகுளியாகவும் இருக்காதீங்க. சில சூட்சமங்களை தெரிந்து கொண்டு காயை நகர்த்தினால் தான் உங்களுக்கான வெற்றி கிடைக்கும். புது வேலை, புது காண்ட்ராக்ட் இப்படி ஏதாவது முயற்சி செய்வதாக இருந்தால் சில தந்திரங்களை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். இன்று உங்களுக்கு வேகத்தை விட விவேகம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

கும்பம் – ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உயர் பகுதிகளில் தேடி வரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடன் நல்லுறவு பழகுவதன் மூலமும் சில நன்மை நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு எதிர்கால வெற்றிக்கு துணை புரியும்.

மீனம் – ராசிக்காரர்கள் இன்று வாய்ப்புகளைத் தவிர விடுவீர்கள். சில விஷயங்களை நிதானமாக யோசித்து முடிவு எடுக்கவும். முன்கோபத்தை குறைக்கவும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டால் நல்லது நடக்கும். எல்லாம் எனக்குத்தான் தெரியும் என்று அடம் பிடித்து முன்பின் யோசிக்காமல் தெரியாத ஒரு விஷயத்தில் காலை வைக்காதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. சின்ன சின்ன தவறுகள் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்து விடும் ஜாக்கிரதை.

புத்தாண்டு தினத்தில் உலக சனத்தொகை 800 கோடியைக் கடந்துவிடும் – ஆஸியின் நிலை என்ன?

இவ்வாண்டில் (2023) உலக மக்கள் தொகை 7.5 கோடி அதிகரித்திருப்பதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிகழாண்டு உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்பு மற்றும் 2 இறப்புகளை எதிா்பாா்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மக்கள்தொகை இவ்வாண்டில் 17 இலட்சம் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் அது 33.58 கோடியாக இருக்கும். அந்நாட்டின் நிகழாண்டு மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 0.53% மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போக்கு நீடித்தால், 2020 முதல் 2030 வரையிலான 10 ஆண்டுகளே அமெரிக்க வரலாற்றில் குறைந்த மக்கள்தொகை வளா்ச்சி கொண்ட காலகட்டமாக இருக்கும். அதன்படி, 2030-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், அமெரிக்காவின் மக்கள்தொகை வளா்ச்சி 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1960-2000 காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.

பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணமாகும்.

ஆஸ்திரேலிய சனத்தொகை…..

அதேவேளை ஆஸியிலும் சனத்தொகை எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.

2071 ஆம் ஆண்டளவில் ஆஸ்திரேலியாவின் சனத்தொகை 40 மில்லியனைத் தாண்டிவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பதிவாகும் பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வுகளை அடிப்படையாகக்கொண்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைக் கணித்துள்ளது.

ஆஸ்திரேலியர்களில் 67 வீதமானோர் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர் என்று 2022 ஜுன் இறுதி தரவுகள் தெரிவிக்கின்றன. 2032 ஆம் ஆண்டாகும்போது அந்த எண்ணிக்கை 68 வீதமாக அதிகரிக்ககூடும்.

2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி ஆஸ்திரேலியாவில் தற்போது 26 மில்லியன் பேர் வாழ்கின்றனர். 2071 ஆகும்போது இந்த எண்ணிக்கை 34.3 மற்றும் 45.9 மில்லியன்வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிக சனத்தொகை கொண்ட மாநிலமாக New South Wales திகழ்கின்றது. தற்போது 8.1 மில்லியன் பேர் வசிக்கின்றனர். வருடாந்தம் மக்கள் தொகை 0.4 முதல் 1.2 வீதம்வரை அதிகரிக்கின்றது. 2071 ஆம் ஆண்டாகும்போது 10.8 முதல் 13.8 மில்லியன் பேர்வரை மாநிலத்தின் சனத்தொகை காணப்படும்.

விக்டோரிய மாநிலத்தின் சனத்தொகை 6.6 மில்லியனாக காணப்படும் நிலையில் 2071 ஆம் ஆண்டளவில் அதன் எண்ணிக்கை 9.3 மில்லியன் முதல் 13.8 மில்லியன்வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் 0.7 முதல் 1.5 ஆக காணப்படுகின்றது.

அதிக மக்கள் வாழும் நகரமாக விளங்கும் சிட்னியை அடுத்த 10 ஆண்டுகளில் மெல்பேர்ண் முந்தும் என தெரியவந்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா களத்தில் – சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

இஸ்ரேல்மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை தென்னாபிரிக்கா சுமத்தியுள்ளது.

இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தை செய்து வருவதாக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

பொதுமக்களை பாதுகாக்குமாறு பல நாடுகளும் வலியுறுத்திய போதும், காசாவில் இதுவரை 21 ஆயிரத்துக்கு 500 மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் வன்மையாகக் கண்டித்துள்ளது.

 

மொட்டு கட்சியை வேட்டையாட ரணில் வியூகம்…!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை மொட்டுகட்சி செய்துவரும் சூழ்நிலையிலேயே மொட்டு கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான வியூகத்தை ஜனாதிபதி அமைத்துள்ளார்.

அத்துடன், மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

இந்திய பெருங்கடலில் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் ஏதும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

” இலங்கையில் உள்ள கடலோரப்பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது.” – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சுமத்ரா தீவுகளை சுற்றியுள்ள கடலில் இன்று காலை 10.49 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து தமது திணைக்களம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் கரையோகப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸியில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஒரு வருடத்துக்குள் நீரில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் தொடர்பில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

2022 ஜுலை 1 முதல் 2023 ஜுன் 30 வரையான காலப்பகுதியிலேயே 281 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 77 வீதமானோர் ஆண்களாவர். இவர்களில் 57வீதமானோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

44 வீதமான சம்பவங்கள் நகர் பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன.

கடல்குளியல், நீச்சல், படகு பயணம், தண்ணீரில் விழுதல், துறைமுக விபத்துகள் உள்ளிட்டவையாலேயே இவ்வனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இறப்பு ஒரு விகிதத்தால் அதிகரித்துள்ளது.

 

 

 

யாழ். மாவட்டத்தில் டெங்கு ஊழித்தாண்டவம்…!

நாட்டில் 2023 ஜனவரி முதல் இதுவரை 86 ஆயிரத்து 576 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்துள்ள 27 நாட்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 88 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 309 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 995 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 48 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ். மாவட்டத்திலும் தற்போது டெங்கு நோய் வேகமாக பரவிவருகின்றது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.12.2023)

மேஷம் – ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உதவி செய்யக்கூடிய மனப்பான்மை சமுதாயத்தில் உங்களை உயர்த்தும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம் – ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்பட மாட்டீங்க. எதிரிகளை எதிர்த்து போராடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். உங்களைப் பார்த்து பயந்து சில எதிரிகள் தானாகவே ஒதுங்கி விடுவார்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மாமியார் மருமகள் உறவு பிரச்சனையை கொடுக்கும்.

மிதுனம் – ராசிக்காரர்கள் என்று எல்லா விஷயத்தையும் கொஞ்சம் பொறுமையாக இருக்கணும். புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். கோபப்படாதீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். ஏதாவது முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் பெரியவர்களின் ஆலோசனையை பெறுவோம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

கடகம் – ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத தோல்வி உண்டாகும். ஆனால் தோல்வியை கண்டு பயந்து போகக்கூடாது. சோர்ந்து போகக்கூடாது. உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் இருக்கிறது. உங்களுக்கு நன்மை நடக்கும் என்று மனதார நம்புங்கள். குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம் – ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சம்பள உயர்வு கிடைக்கும். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது மட்டும் பெண்கள் சமையலறையில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். கவனக்குறைவோடு சமைக்கக்கூடாது ஜாக்கிரதை.

கன்னி – ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இத்தனை நாட்களாக தொடர்ந்து வந்த பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். மாமனார் வழி உறவால் ஆதாயம் கிட்டும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க. பொருட்களை பத்திரமாக பார்த்துக்கோங்க.

துலாம் – ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாள் இது. தொழிலில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் கிடைக்கும்.

விருச்சிகம் – ராசிக்காரர்களுக்கு இன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோபமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும், உள்ளே வைத்துக் கொள்ள மாட்டீர்கள். எல்லா விஷயங்களையும் இன்று வெளிப்படையாக சொல்லிவிட்டு மனதை லேசாக்கி கொள்வீர்கள். நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் அடையலாம்.

தனுசு – ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலோடு செய்ய மாட்டீங்க. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லா விஷயத்தையும் தள்ளி போடும் மனப்பக்குவம் தான் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். தலைபாரம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தோடு சாப்பிடுங்கள் நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

மகரம் – ராசிக்காரர்களுக்கு இன்று மனசு தெளிவாக இருக்கும். அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு உங்களுடைய பக்குவம் வெளிப்படும். நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். அலுவலகப் பணியில் சின்ன சின்ன பின் அடைவு உண்டாகும். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம் – ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரி தொல்லை நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை முதலீட்டில் கவனம் தேவை.

மீனம் – ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக அமையும். இத்தனை நாள் அலைச்சலோடு இருந்த வேலை, இன்று சுலபமாக முடியும். சிக்கலான பிரச்சனைகளுக்கு இன்று சுலபமாக தீர்வு கிடைக்கும். சொத்து பிரச்சனை உங்களுக்கு சாரதக்கமாக தீர்ப்பாகும். புதுசாக வண்டி வாகனம் தங்கம் போன்ற பொருள்கள் வாங்குவதற்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

காற்றில் கலந்தது ‘கறுப்பு நிலா’ – கண்ணீர் குளமானது தமிழகம்…!

ஈழத் தமிழர்கள் உட்பட உலகவாழ் தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட தலைவர்களின் ஒருவரான கேப்டன் விஜயகாந்தின் பூதவுடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.

தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு நோக்கி சென்றது. கேப்டன் விஜயகாந்தின் உடலை சுமந்து செல்லும் வாகனத்துடன் தொண்டர்களும் ரசிகர்களும் ஓடோடி வந்தனர்.

திரையுலகினர், பொதுமக்கள் என அலைகடலென திரண்டு வழிநெடுகிலும் விஜயகாந்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உக்ரைனை கைவிடுமா அமெரிக்க? இனி ஆயுதங்கள் வழங்கப்படுமா?

அமெரிக்க அரசு உக்ரைனுக்குக் கடைசி முறையாக ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளது.

தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் எஞ்சியுள்ள கடைசி ஒரே முறை இது என்று அமெரிக்கா அறிவித்தது.

250 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆகாயத் தற்காப்பு ஆயுதங்களும் மற்ற பல எறிகணைகளும் அனுப்பப்பட்டுள்ளன. ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிடும் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்குவது தொடர்பில் அமெரிக்கா முடிவு செய்யவேண்டியுள்ளது.

மிகப் பெரிய ரஷ்யப் படையை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆயுத மற்றும் நிதி உதவிகள் அவசியமாகும்.

உக்ரைனுக்கு ஆதரவளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னுரிமை அளித்தார். ஆனால் அந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

உதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கோருகின்றனர்.

அடுத்த மாதம் 8ஆம் திகதி செனட் சபை கூடும்போது, உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசி ஒப்புதல் பெற ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஈழத்து இசைக்குயிலை நேரில் சென்று வாழ்த்திய சிறிதரன் எம்.பி….(படங்கள்)

இசைக்குயில் கில்மிஷாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நேரில் சென்று வாழ்த்தி – பாராட்டியுள்ளார்.

தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்று நாடு திரும்பினார் கிலஷ்மிசா.

இந்நிலையில் கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.

கருணைகாட்ட இஸ்ரேல் மறுப்பு – காசாவில் மக்கள் தவிப்பு!

மத்திய காசாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் தரைவழி தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்கள் அடுத்தக்கட்ட இடம்பெயர்வையும் எதிர்கொண்டுள்ளனர்.

சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இந்தப் போரினால் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தெற்கு காசாவில் மக்கள் தஞ்சமடைவதற்கு இட வசதி தீர்ந்து வருவதால் தற்காலிக முகாம்களை பெறுவதற்கு மக்கள் போராடி வருகின்றனர்.

“குண்டு தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அது பயங்கரமானதாகவும் தாங்க முடியாததாகவும் இருகின்றது” என்று சொன்டோஸ் என தனது முதல் பெயரை மாத்திரம் கூறிய ஒருவர் ‘மிடிலீஸ்ட் ஐ’ இணைய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போர் நிறுத்த முயற்சிகளை மத்திய கிழக்கு நாடுகள் முன்னெடுத்தாலும் அதற்கு இஸ்ரேல் இணங்கவில்லை. காசாவில் மட்டும் அல்ல லாபனான்மீதும் தாக்குதல்களை நடத்திவருகின்றது.

 

புத்தாண்டு காலப்பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் 20 வீதத்தால் அதிகரிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, இக்காலப்பகுதியில் தமது உடமைகள் குறித்து மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு சுற்றுலா மற்றும் வெளி இடங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

எனவே, வீட்டைவிட்டு வெளியேற முன்னர் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வீட்டுக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த 12 மாதங்களுக்குள் 2 ஆயிரத்து 300 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.