ஆஸியையடுத்து ஜேர்மனியிலும் வேலை நாட்கள் குறைப்பு!

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் ஜேர்மனியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் குறைந்த வேலை நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஜேர்மனியும் அந்த முடிவை எடுத்துள்ளது.

இதன்படி பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை நாட்கள் எனும் முன்னோடித் திட்டம் ஜேர்மனியில் அறிமுகமாகிறது. இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு சோதனை முயற்சியாக ஜேர்மனி முன்னெடுத்துள்ளது.

பொருளாதார மந்த நிலை, திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை, அதிக பணவீக்கம் போன்றவற்றுடன் ஜேர்மனி தற்போது போராடி வருகிறது. வாரத்தில் 4 வேலை நாட்கள் மாத்திரம் இருப்பது ஊழியர்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருந்து, உற்பத்தி திறனை மேம்படுத்துமா என பரிசீலிக்கவுள்ளது.

வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்க திட்டம்!

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் பெறப்படும் பணம், குறித்த வழக்குடன் தொடர்புடைய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வழக்கு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வழக்கு பொருளுக்கு உரிய நபர் வழக்கில் வெற்றி பெற்றால் அந்த பணம் குறித்த நபருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவர் வழக்கில் தோல்வியடைந்தால் அதனை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்காக நீண்ட காலம் செலவிடப்படுகின்ற காரணத்தினால், பெரும்பாலான வழக்கு பொருட்கள் அழிவடைகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான சட்டத்திருத்தம் விரைவில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

“ஊழல் அற்ற ஆட்சி” – உலகளவில் ஆஸிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஊழலை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா 14 ஆவது இடத்தில் உள்ளது.

உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Index ) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்” நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை அமைகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், ஆஸ்திரேலியா 100 இற்கு 75 புள்ளிகளைப் பெற்று, 14 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

குறித்த பட்டியலில் 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து 6-வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

நோர்வே, சிங்கப்பூர், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்போர்க் நாடுகள் ஊழலை எதிர்க்கும் நாடுகளில் டாப் 10 வரிசையில் உள்ளன. அமெரிக்கா 69வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது.

அடுத்த வாரம் கூடுகிறது மத்திய வங்கி – வட்டி விகிதங்களில் மாற்றம் வருமா? பணவீக்க விகிதம் எவ்வாறு உள்ளது?

ஆஸ்திரேலியாவின் டிசம்பர் காலாண்டுக்கான பணவீக்க விகிதம் குறைவடைந்துள்ளது. இதனால் வட்டி விகிதங்களில் மத்திய வங்கி மாற்றங்களை ஏற்படுத்தாது என தெரியவருகின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் முதலாவது கூட்டம் அடுத்த வாரம் கூடவுள்ளது. இதன்போது வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாதிருக்கும் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் காலாண்டுக்கான பணவீக்கம், கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சடுதியாக குறைவடைந்துள்ளது.

டிசம்பர் காலாண்டுக்கான பணவீக்கம் 0.6 விகிதமாக உள்ளது. செப்டம்பர் மாத காலாண்டு பணவீக்கம் 1.2 விகிதமாக இருந்துள்ளது.

மத்திய வங்கியின் நிதிச்சபை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதன்போது ரொக்க வட்டி விகிதம் 4.35 விகிதத்திலேயே தக்க வைக்கப்படும் என தெரியவருகின்றது.

சாந்தனின் விடுதலை குறித்து டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி…!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30.01.2024) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது.

 

புகலிடக் கோரிக்கையாளரை அடிமையாக நடத்திய வைத்தியருக்கு சிறை தண்டனை!

தனது வியாபார நிலையத்தில் வேலைசெய்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை மிரட்டினார் எனக் கூறப்படும் வைத்தியர் ஒருவருக்கு மூன்றரை வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியருக்கு மிட்டாய் கடையொன்று இருந்துள்ளது. அதில் வேலை செய்த புகலிடக்கோரிக்கையாளரை, குறைந்த சம்பளத்துக்கு – நீண்ட நேரம் வேலை செய்யாவிட்டால் நாடு கடத்த ஏற்பாடு செய்வேன் என அவர் மிரட்டியுள்ளார்.

அவருக்கு எதிராக உழைப்பு சுரண்டல், மிரட்டல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் ஜுரிகளால் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

வைத்தியரின் மனைவி அவருக்கு உதவினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வைத்தியர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகே பிணைக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், பாதிக்கப்பட்ட நபருக்கு அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானில் இருந்து புகலிடம்கோரி வந்த ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.காலை 7 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிவரைகூட இவருக்கு வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சட்டப்பூர்வமான குறைந்தபட்ச சம்பத்துக்கு குறைவாகவே அவருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த புகலிடக்கோரிக்கையாளர் கேள்வி எழுப்பியபோது, வேலையை நிறுத்தினால் நாடு கடத்தப்படுவாய் அல்லது தடுப்பு காவலுக்கு மாற்றப்படுவாய், உனது மதமும் அம்பலப்படுத்தப்படும் என மருத்துவர் மிரட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்துடன் தனக்கு நெருக்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? ( 31.01.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு சிந்தனை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும் நாள். இன்று‌ இந்த மாதத்தின் கடைசி நாள். நாளை ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. செலவுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்கள். கவலைப்படாதீங்க. எல்லா தேவைகளுக்கும் ஆண்டவன் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான். சிந்தனையை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு அன்றாட வேலையிலும் கவனம் செலுத்தனும். கவனக்குறைவாக இருந்தால் பிரச்சனைகள் வரும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் சில பேர் வரக்கூடிய சம்பளத்துக்கு கணக்கு போட்டுக் கொண்டே இருப்பார்கள். அடுத்த மாதம் இந்த செலவு இருக்குது. அந்த செலவு இருக்குது அப்படி என்று பட்ஜெட் போடக்கூடிய நாளாக இருக்கும். பட்ஜெட்டில் சின்ன துண்டு விழுவது சகஜம்தான். அதை நினைத்து கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பாதிப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள். இன்று புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு முன்கூட்டியே சம்பளம் வந்திருக்கும் அல்லவா. மாத இறுதி நாள் என்றால் அக்கவுண்டில் பணம் வந்து விழுந்து விடும். இந்த பத்து நாளைக்கு நாம கொஞ்சம் பணக்காரர் இருப்போம் இல்ல. அதனால இந்த சந்தோஷத்தில் துள்ளி குதிப்பீர்கள். வீட்டிற்கு கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு போறது, மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுப்பது, போன்ற மகிழ்ச்சியில் ஈடுபடுவீர்கள். சம்பளம் வராதவர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம் இருக்கும் சரியாயிரும். ஆனால் உங்களுக்கும் இன்று சந்தோஷம் கிடைக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சுறுசுறுப்போடு இன்றைய நாளை தொடங்கி, முடிக்க போகிறீர்கள். இன்று மாலை கொஞ்சம் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கொண்டு போய் செலவுக்காக கொட்டி விடுவீர்கள். இதனால் மனசு கொஞ்சம் கஷ்டப்படும். கவலைப்படாதீங்க சம்பளம் வந்ததும் எல்லாம் சரியாகிவிடும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப அப்பப்ப பணம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு வருமானம் வரும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பிள்ளைகளின் கையால் பணம் கிடைக்கும். இதனால் மன நிறைவான நாளாக தான் இருக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் கவனம் இல்லை என்றால் சின்ன சின்ன இழப்பு, பேரிழப்பாக மாறிவிடும் ஜாக்கிரதை.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்கும் பட்சத்தில் வீண் விரைய செலவுகள் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கொஞ்சம் அக்கறையோடு பார்த்துக் கொள்ளுங்கள். வேளையில் இருந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். தொழிலில் இருந்து வந்த நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் வங்கியில் இருந்து கிடைக்கும்.

துலாம்  – துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் தேக்கி வைத்திருந்த எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசி விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்தால் அது இன்று பெரிய வாக்குவாதமாக மாறி இறுதியில் சமூகமாக முடிந்துவிடும். நீண்ட நாள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து விடும். பயப்படாதீங்க உங்களுடைய துணிச்சல், உங்களுக்கு வெற்றி தரும்.

விருச்சிகம்  – விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியைத் தரும். புது வேலை தேடுவது புது தொழில் தொடங்குவது, புதுசா எதாவது பொருள் வாங்குவது, அப்படி ஏதாவது இருந்தால் இன்றைக்கு செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு கூட சில பேருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரக்கூடிய வாய்ப்புகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்காதீர்கள். பொறுப்புகள் அதிகமாகும் போது கொஞ்சம் வேலை செய்யக்கூடிய நேரமும் அதிகம் ஆகத்தான் செய்யும். பொறுமையை கடைப்பிடித்தால் நிச்சயம் கூடுதல் பலன் கிடைக்கும்.

தனுசு  – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கைக்கு எட்டியது வாழ்க்கை எட்டாமல் போக வாய்ப்புகள் உள்ளது. நிறைய எதிர்பார்ப்புகளோடு இருப்பீர்கள். ஆனால் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாமல் மனம் உடைந்து போவீர்கள். அதனால் இன்று காலை முதலே எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் அதிகமான மன உளைச்சல் இருக்காது. உங்க வேலையை நீங்க பாருங்க. பலன் வரும்போது வரட்டும். கடவுள் கொடுக்க வேண்டியது நிச்சயம் கொடுப்பான்.

மகரம் – மகர ராசிக்காரர்கள். இன்று கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. ரொம்ப நம்பிக்கையா இருப்பீங்க, இது எனக்கு கிடைச்சிடும் இந்த பணம் இன்னைக்கு வந்துரும் அப்படின்னு. ஆனா அந்த இடத்தில் ஏமாற்றம் இருக்கும். ஆகவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு இன்று நீங்கள் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தனும். வாழ்க்கை துணை சொல்வது கேட்டு நடப்பது நல்லது. வீண் விரைய செலவை குறைக்கணும். கடன் வாங்கும் பழக்கத்தை குறைக்கணும் இன்று கட்டாயம் கடன் வாங்கவே கூடாது.

கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு உங்கள் நாளை தொடங்குவீர்கள். பெண் பிள்ளைகளின் மூலம் மனசு சந்தோசம் அடையும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த நிதி நிலைமையில் மட்டும் கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். எவ்வளவு தான் முட்டி மோதினாலும் அதை மட்டும் உங்களால் சரி கட்டவே முடியாது. தினம் தினம் வரக்கூடிய சந்தோஷத்தில், கொஞ்சம் கஷ்டம் இந்த பணக்காசும் கூட கவலைப்படாதீங்க. செலவை குறைங்க. எல்லாம் சரியாயிடும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்பின் தெரியாதவர்களின் நட்பு கூடாது. யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக நீங்க உங்க வாழ்க்கைகாகாண முடிவை எடுக்கவே கூடாது. உங்க கூடவே வேலை செய்வாங்க. அவங்களுக்கு அந்த வேலை செட்டாகாமல் இருக்கும். அவர்கள் வேலையை விட்டு போகிறார்கள் என்றால், நீங்களும் அதையே பின்பற்றக் கூடாது. உங்களுக்கு வேலை பிடிச்சிருக்கா, உங்களுக்கு வேலை நல்ல பேர் இருக்கா, அப்ப கம்முனு நீங்க உங்க வேலையை செய்யுங்கள். அடுத்தவர்களை பார்த்து இன்று நீங்கள் ஏதாவது செய்தால் அது உங்களுக்கு பிரச்சனையை கொடுத்து விடும் ஜாக்கிரதை. புலியை பார்த்த பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தான் பின்பு.

PNG பிரதமர் ஆஸி வருகிறார் – நாடாளுமன்றிலும் உரை நிகழ்த்துவார்

பசுபிக் பிராந்திய நாடான பப்புவா நியூ கினியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு சீனா முயற்சித்துவரும் நிலையில், குறித்த நாட்டின் சிறந்த பாதுகாப்பு பங்காளி ஆஸ்திரேலியாவே என அறிவித்துள்ளார் பிரதமர் Anthony Albanese.

” பப்புவா நியூ கினியா இறைமையுள்ள நாடாகும்;. அதன் சுயாதீனத்தன்மையை நாம் மதிக்க வேண்டும். ஆனாலும் அந்நாட்டுக்கு ஆஸ்திரேலியாவை விட நெருங்கியதொரு நண்பன் இல்லை என்றே கூறவேண்டும்.” – எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆஸிக்கும், பப்புவா நியூகினியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.

அதேவேளை பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸி. நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றவுள்ளார்.

இம்ரான் கானின் அரசியல் வாழ்வு முடிவு? – 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய சகாவான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் வீரரான இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி உலககோப்பை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான் கான் அரசியலில் நுழைந்தார். தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை ஆரம்பித்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைத்த இம்ரான் கான் பிரதமரானார். இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் இம்ரான் கான் வெளிவர முடியவில்லை.

ஏனென்றால் இன்னொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதாவது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் பிரதமராக இருக்கும் நபர் உயரதிகாரிகளுடன் விரைவாக பேசும் வகையில் சைபர் கேபிள் சேவை பயன்பாடு உள்ளது. இந்த கேபிள் சேவையை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான் இம்ரான் கான் மீதான சைபர் கேபிள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கைவிடப்பட்டது பாலியல் வன்கொடுமை விசாரணை – நாடாளுமன்றம் வருகிறார் Will Fowles – கடுப்பில் பிரிமீயர்!

லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Will Fowles இற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு கைவிடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இதனால் அடுத்தவாரம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“விக்டோரியா காவல்துறை விசாரணையை முடித்துவிட்டதாகவும், எந்தக் குற்றச்சாட்டையும் தொடரப்போவதில்லை என எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.” – எனவும் Will Fowles கூறினார்.

” இந்த விவகாரத்தில் நான் எப்போதும் குற்றமற்றவனாக இருந்து வருகிறேன், மேலும் நாடாளுமன்றத்தில் எனது பணியைத் தொடர ஆவலுடன் உள்ளேன்.” – என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாடாளுமன்றம் வரவுள்ளார் எனக் கூறப்படும் கருத்தை விக்டோரிய மாநில பிரீமியர் Jacinta Allan நிராகரித்துள்ளார்.

லேபர் கட்சியில் இருந்து வலிகுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் அவரிடம் கோரப்பட்டது, எனவே, திரும்பி வரமாட்டார் எனவும் பிரிமீயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் வந்தாலும் லேபர் கட்சியில் அவருக்கு இடமளிக்கப்படமாட்டாது.

விசாரணை நிறைவடைந்துவிட்டது விக்டோரிய காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாரில் மது அருந்திவிட்டு ஊழியர் ஒருவரை தாக்கி, வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என Will Fowles மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அவர் இதனை மறுத்துவந்தாலும் கட்சிக்குள் அழுத்தம் வலுத்ததால் லேபர் கட்சியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

சந்திரிக்காவின் ஆட்டம் ஆரம்பம்! கதிரைக் கூட்டணி மீண்டும் களத்தில்…!!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தின்கீழ் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தை பெறுவதில் மைத்திரி தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேற்படி கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட திலங்க சுமதிபால மைத்திர தரப்புடன் முரண்பட்டுள்ளார்.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவும் மைத்திரி தரப்புடன் அரசியல் சமரில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்நிலையிலேயே கதிரை சின்னத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைமைப்பதவியை சந்திரிக்காவுக்கு வழங்குவதற்கான பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றன.

எல்லை பாதுகாப்பு படையினரால் 13 தொன் Vapes மீட்பு!

ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரால் 13 தொன்களுக்கு அதிகமான disposable vapes கைப்பற்றப்பட்டுள்ளன.

7.4 மில்லியன் டொலர் மதிப்பிலான 2 லட்சத்து 50 ஆயிரம் disposable vapes இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய disposable vapes இற்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆஸ்திரேலியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, பெருந்தொகையான vapes மீட்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தெற்கு ஆஸ்திரேலியாவில் வைத் து கைப்பற்றப்பட்டிருந்தாலும் நாட்டில் பல பாகங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது. எல்லை பாதுகாப்பு படையினருக்கு பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 

பாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்தாதீர்! ஆஸியிடம் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் கோரிக்கை

“ பாலஸ்தீன மக்களுக்கு கூட்டு தண்டனையை வழங்க வேண்டாம், இடைநிறுத்தப்பட்டுள்ள நிதி உதவியை உடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.”

இவ்வாறு ஆஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரான Helen Clark.

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்துக்குரிய (UNRWA) தனது நிதியுதவியை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் Penny Wong அண்மையில் அறிவித்தார்.

நிதியுதவியை இடைநிறுத்துவதில் ஆஸ்திரேலியாவானது, அமெரிக்கா, கனடா மற்றும் ஒத்த கருத்துடைய பங்காளிகளுடன் இணைகின்றது என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

ஒக்டோபர் 7 தாக்குதல்களில் (UNRWA) உறுப்பினர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலை இஸ்ரேலிய அதிகாரிகள் ஏஜென்சிக்கு வழங்கியுள்ளதாகவும், விசாரணையைத் தொடங்கியவுடன் அந்த ஊழியர்களின் ஒப்பந்தங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் (UNRWA) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தாக்குதல்களில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் கூறும் ஊழியர்களின் சரியான எண்ணிக்கையையோ அல்லது அவர்களின் ஈடுபாட்டின் தன்மையையோ நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான நிதியை ஏறக்குறைய இரட்டிப்பாக்குவதாகவெளிவிவகார அமைச்சர் Penny Wong அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடமிருந்து நிதியுதவி நிறுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.01.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். நீங்கள் எதிர்பாராத உறவு உங்கள் வீடு தேடி வரும். அந்த உறவின் மூலம் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். சீக்கிரமே பெரிய அளவில் சுப செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். இன்று நீங்கள் தொழிலில் எடுக்கக் கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கடனை தந்தவன் உடனடியாக அதை திருப்பிக் கொடு என்று கேட்கலாம். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை வாங்கிய கடனை திருப்பித் தர பாருங்கள். இல்லையென்றால் அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே, நீங்கள் அவர்களுக்கு ஒரு போன் செய்து கால அவகாசத்தை கேட்டுக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. நல்லது நடக்கும். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணத்தை தவிர இன்று பெரிய பிரச்சனை வேறு எதுவும் இருக்காது.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகப் பணியில் சின்ன சின்ன முட்டல் மோதல் இருக்கும். யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருக்க போறீங்க. இதனால் உங்களுடைய வேலை சரியா நடக்காதது தான் மிச்சம். ஆகவே அடுத்தவர்களிடம் சண்டை போடுவதை விட்டுவிட்டு உங்களுடைய காரியத்தில் கண்ணாக இருப்பது தான் புத்திசாலித்தனம். உங்களை சீண்டுவதற்கு நாலு பேர் இருப்பாங்க. ஆனா அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் வேலையை யார் பார்ப்பது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க உஷாரா நடந்துக்கோங்க.

கடகம் – கடக ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த ஊர் உலகம் உங்களை நல்லது செய்ய விடாது. ஏதாவது ஒரு விஷயத்தை அவதூறாக பேசி நீங்கள் செய்ய வேண்டிய நல்லதையும் தடுத்து நிறுத்தும். என்ன செய்வது காலமும் நேரமும் சூழ்நிலையும் உங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆகவே நீங்கள் நல்லது செய்வதாக இருந்தால் அதை நாளை தள்ளி போடுங்கள். இன்று நல்லது செய்தாலும் உங்களுக்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்கள் இன்று அனாவசியமாக அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்கக் கூடாது. வாக்கு கொடுத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். முடிந்த உதவியை நேரடியாக செய்து விடுங்கள். நாளை செய்கின்றேன். நாளை மறுநாள் செய்கின்றேன் அவர்களிடம் சென்றால் உதவி கிடைக்கும் என்று கைநீட்டி எதையும் சொல்லிடாதீங்க. முடியும் முடியாது என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி –  கன்னி ராசிக்காரர்கள் இன்று வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவங்க கிட்ட பேசும்போது தரகுறைவான வார்த்தையை பயன்படுத்தி விட்டால், பிரச்சினை உங்களுக்குத்தான். சண்டை வரக்கூடிய இடத்தில் நீங்கள் நிற்காதிங்க. அந்த இடத்தில் சும்மா நின்று வேடிக்கை பார்த்தாலும் உங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, குறிப்பாக கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய டென்ஷன் கொடுக்கக்கூடிய விஷயங்கள்தான் நடக்கப் போகின்றது. பசி நேரத்தில் உங்களை சாப்பிட கூட விட மாட்டார்கள். பசியால் தலைவலியே வந்துவிடும் ஆனால் வேலை முடிந்தாக இருக்காது. அந்த அளவுக்கு வேலை பளு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. வேலை சுமையை சமாளிக்க நீங்கள் ஏதாவது ஒரு குறுக்கு வழியை தேடித்தான் ஆக வேண்டும். அதற்காக தப்பு தப்பா வேலை பார்க்கக் கூடாது. ஸ்மார்ட் வொர்க் என்று சொல்லுவாங்க அல்லவா அதுபோல ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுங்கள். நன்றாக வேலை தெரிந்தவர்களை கொஞ்சம் காக்கா பிடித்து கூட வச்சுக்கோங்க வேறு வழி இல்லை.

விருச்சிகம் – விருச்சக ராசி காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாகவே அமைந்தாலும் புதிய முடிவுகள் எடுப்பதில் உங்களுக்கு குழப்பங்கள் இருக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாமா, புதிய வேலைக்கு செல்லலாமா, இந்த பொருள் வாங்கலாமா வேண்டாமா? இப்படிப்பட்ட சில குழப்பங்கள் உங்கள் மனதில் எழும். சரியான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆகவே புதிய முடிவை எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலை அது பாட்டுக்கு தானாக நல்லாவே நடக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்கள் இன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். யாரை கண்டு அஞ்ச மாட்டீங்க. மேலதிகாரிகளாகவே இருந்தாலும் உங்கள் பேச்சுக்கு இன்று கட்டுப்படுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய வாக்குத்திறமை இன்று அதிகரிக்கும். குறிப்பாக வக்கீல், பேச்சாளர்கள், பாடகர்கள் இவர்களுக்கெல்லாம் இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நீண்ட நாட்களாக செய்யாத வேலையை இன்று செய்து முடித்து சாதனை படைப்பீர்கள். சுத்தம் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும் அதை முடித்தால் சாதனை தானே. சுத்தம் என்றால் சும்மாவா. ஆகவே இன்று உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லி கொள்வீர்கள். அந்த அளவுக்கு சுறுசுறுப்பும் சுத்தமும் உங்கள் வீட்டில் இருக்கும்.

கும்பம் -கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அலட்சியப் போக்கால் சின்ன சின்ன தவறுகள் உண்டாகும். நமக்கு தெரிந்த வேலைதானே இதை நாம்மை விட வேறு யாராலும் பெஸ்டாக செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். டக்குனு அந்த இடத்துல தப்பு நடந்துரும். திட்டு வாங்குவிங்க. ஆகவே பொறுப்புகளில் இருந்து தவறக்கூடாது. கவனம் குறையவே கூடாது பாத்துக்கோங்க.

மீனம் – மீன ராசிக்காரர்கள் இன்று வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் ஏனோ தெரியாது. உங்களுக்கு முன்பாக உங்கள் வாய் போய் பேசி எல்லாவற்றையும் சொதப்பிவிடும். உங்களுக்கு உங்க வாய் தாங்க பிரச்சனை. கொஞ்சம் பொறுமையா இருங்க. எடுத்தெறிஞ்சு பேசாதீங்க. எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று பேசாதீங்க. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நீங்கள் பேசாமல் இருந்தாலே இன்று உங்களுக்கு நல்லது நடக்கும்.

 

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு!

அரபிக்கடலில் காணாமல் போன லொரன்சோ புத்தா4 என்ற படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிப்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடிப் படகான ‘லொரன்சோ புதா 4” கடந்த ஜனவரி 12 ஆம் திகதி 06 மீனவர்களுடன் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

கரையில் இருந்து 1,160 கடல் மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் இந்தப் படகு கைப்பற்றப்பட்டதாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதன்படி, காணாமல் போன படகு தொடர்பில் தேடிப்பார்க்குமாறு இலங்கை கடற்படையினர் பஹ்ரைனில் அமைந்துள்ள 40 நாடுகளை உள்ளடக்கிய கூட்டு கடல் படையணிக்கு அறிவித்தனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகைக் கண்டுபிடிக்க சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படை விசேட தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த படகை அவர்கள் கண்டுபிடித்னர்.

அத்துடன், இரண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களும் சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,”லொரன்சோ புத்தா4 ” ஆழ்கடல் மீன்பிடிப் படகில் இருந்த 06 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பணிகள், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த படகு சீசெல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுங்கள்” – தமிழக முதல்வருக்கு சிறிதரன் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப் பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந் துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சி களும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவை யாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவன செய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி எதிர்க்கட்சியில் இணைவு!

முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்து கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

விக்டோரியாவில் இளம் வயதினர் மத்தியில் குற்றச்செயல்கள் தலைவிரிப்பு! அரசோ ‘கப்சிப்’!

விக்டோரிய மாநிலத்தில் சிறார்கள் – இளைஞர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில் அது மாநில அரசுக்கும் பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

இளைஞர்களால் இழைக்கப்படும் குற்றங்கள் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஜுன் முதல் 2023 ஜுன் வரையான காலப்பகுதியில் 10 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களால் 20 ஆயிரத்து 401 குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கொள்ளை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பிரதானமாக உள்ளது.

14 முதல் 17 வயதுக்கிடைப்பட்டவர்களால் இழைக்கப்படும் குற்றங்கள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

எனினும், இந்த தகவல்களை மாநில Premier Jacinta Allan மூடிமறைத்து வருவதுடன், சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அறிவித்துவருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசு, பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது மாநில மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேவேளை சமூகபாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.

வாத்து வேட்டை குறித்து விக்டோரிய மாநில அரசு எடுத்துள்ள முடிவு…!

விக்டோரிய மாநிலத்தில் பொழுது போக்குக்காக வாத்துகள் வேட்டையாடப்படுவதை தடை செய்வது தொடர்பில் நாடாளுமன்ற குழு முன்வைத்திருந்த பரிந்துரையை மாநில அரசு நிராகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் குறித்த யோசனை மாநில அரசுக்கு முன்வைக்கப்பட்டு, அதனை செயல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு இன்று திங்கட்கிழமை தெளிவுபடுத்தப்பட்டது.

“ வாத்து வேட்டை குறித்த அரசின் நிலைப்பாடு மாறாது, எனினும், அடுத்த வருடம் முதல் பொழுது போக்குக்காக வாத்துகளை வேட்டையாடும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும்.” – என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்து வேட்டைக்கான பருவம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

“வேட்டையாடுதல் என்பது பல ஆயிரக்கணக்கான விக்டோரியர்கள் அனுபவிக்கும் ஒரு சட்டபூர்வமான செயல் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் அதை பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் நிலையானதாகவும் மாற்ற விரும்புகிறோம்” என மாநிலத்தின் துறைசார் அமைச்சர் அறிவித்துள்ளார்.

‘எட்கா’ உடன்படிக்கை மார்ச்சில் கைச்சாத்து?

‘எட்கா’ எனப்படும் இலங்கை, இந்திய பொருளாதார உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான பேச்சுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் கொள்ளும் வகையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அரச தரப்பு தெரிவிக்கின்றது. எனினும், குறித்த உடன்படிக்கைமூலம் இலங்கை சேவை சந்தையை இந்தியா முழுமையாக ஆக்கிரமிக்கும் என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.