சாந்தனின் பூதலுடலை இலங்கை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனை இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது ஏன் என தமிழக அரசிடம் வினவியுள்ளது.

சாந்தனை கடந்த 27 ஆம் திகதி எயார் அம்பியூலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருந்த போதே, இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால், அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. விரைவில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தான் நேற்று சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

அவசரமாக ஆஸி. வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்! பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவுடனான உயர்மட்ட சந்திப்புக்காக சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi ஒரு வாரத்துக்குள் கன்பரா வரவுள்ளார் என்று தெரியவருகின்றது.

லிபரல் கூட்டணி ஆட்சிகாலத்தில் பீஜிங்குக்கும், கன்பராவுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தது.

எனினும், லேபர் ஆட்சிகாலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சற்று மேம்பட்டுவந்தது. இதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிக்கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியது.

இவ்வாறு மேம்பட்டுவந்த இரு தரப்பு உறவு, ஆஸ்திரேலியா எழுத்தாளருக்கு சீனாவில் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் ஆஸி.வரும் சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi , பிரதமர் மற்றும் ஆஸி.வெளிவிவகார அமைச்சர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

ஆஸ்திரேலிய வைன்மீது விதிக்கப்பட்டுள்ள வரிக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு இதன்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸி. விஜயத்தை முடித்துக்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் நியூசிலாந்தும் செல்லவுள்ளார்.

சீன பிரதமர் இவ்வருட இறுதியில் ஆஸ்திரேலியா வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

காசா போரால் விக்டோரியா மாநில இப்தார் நிகழ்வு இரத்து!

காசா போர் விவகாரம் காரணமாக வருடாந்த இப்தார் நிகழ்வை விக்டோரியா மாநில அரசு இரத்து செய்துள்ளது.

காசா போர் தொடர்பில் லேபர் அரசு கடைபிடித்துவரும் அணுகுமுறையால் இப்தார் தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என முஸ்லிம் சமூகத்தின் அறிவித்துள்ள நிலையிலேயே, இப்தார் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், “விக்டோரிய முஸ்லிம் சமூகம் துயருற்றுள்ளது. அவர்களுக்கு மதிப்பளிக்கையில் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.” – என்று விக்டோரியா மாநில premier Jacinta Allan தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதற்கு லேபர் அரசு மறுத்துவருவதுடன், இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உள்ளது எனவும் விளக்கமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவிலிருந்து அவசரமாக இலங்கை செல்லும் பஸில்! பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 5 மணிக்கு நாடு திரும்புகின்றார்.

அரசியல் ரீதியிலான வியூகங்களை வகுத்துகொண்டே பஸில் ராஜபக்ச கொழும்புவருகிறார் எனவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன தொடரணி மூலம் அவர் அழைத்துவரப்படுவார் எனவும் ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்கவை நாம் கொண்டுவந்திருந்தாலும் அவர் எமக்கு எதிராகவே செயற்படுகின்றார். மொட்டு கட்சியில் இருந்து ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இதனால் பஸில் ராஜபக்ச அதிருப்தியிலேயே அமெரிக்கா சென்றார்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்தே பஸில் வருகின்றார். பொதுத்தேர்தல்தான் முதலில் நடைபெறும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். ரணில் இதற்கு இணங்கிவிட்டார். தேர்தலை பஸில் ராஜபக்சதான் வழிபடுத்துவார்.
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதும் வேட்பு மனு பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெறும்.” – என்றார்.

ஆஸி. உளவுத்துறை பிரதானி போட்ட ‘குண்டால்’ அதிரும் அரசியல் களம்!

வெளிநாட்டு உளவாளிகளுக்கு அரசியல்வாதியொருவர் உதவியுள்ளார் என ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்பின் (ASIO ) பிரதானி Mike Burgess வெளியிட்டுள்ள அறிவிப்பானது, ஆஸ்திரேலிய அரசியல் களத்திலும் அரசியல் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதியின் பெயரை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton மற்றும் முன்னாள் பொருளாளர் Joe Hockey
ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் அரசியல்வாதியொருவர் பிரதமர் ஒருவரின் குடும்ப உறுப்பினரை வெளிநாட்டு உளவாளிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என ASIO பிரதானி Mike Burgess தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அறிமுகம் ஊடாக எந்தவொரு சதி வேலையும் நடக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், குறித்த அரசியல்வாதியினதோ அல்லது பிரதமரினதோ பெயர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் “ குறித்த அரசியல்வாதியின் அடையாளத்தை மறைத்து வைத்து வாதிவிடுவது ஏற்புடையது அல்ல. அது அனைத்து அரசியல்வாதிகளின் பெயர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். அதேபோல நட்பு நாடுகளுக்கிடையிலும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் பொருளாளர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த அரசியல்வாதியின் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று நிழல் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் பூதலுடல் மார்ச் 1 இல் நல்லடக்கம் – ஆஸி. உள்ளிட்ட நாடுகள் விசாரணை கோரல்!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவால்னி மரணம் குறித்து பலரும் சந்தேக கருத்துகளைத் தெரிவித்தனர். இதனிடையே அலெக்ஸி நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதுகுறித்து நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ்,’மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் வரும் மார்ச் 1ஆம் திகதி அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின்னர் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சி தலைவரின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், இந்த மரணத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினே பொறுப்புகூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளன.

கட்டுக்குள் வருகிறது காட்டுத் தீ – சேத மதிப்பீட்டு பணி ஆரம்பம்!

மேற்கு விக்டோரியாவில் ஏற்பட்டிருந்த காட்டுத் தீ கடும் போராட்டத்துக்கு மத்தியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சேத மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

Ballarat இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள Dereel ஏற்பட்ட காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது. பலத்த வெப்ப காற்று வீசியதால் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 400 தீயணைப்பு படையினர் இரவோடிரவாக போராடி தீயை இன்று அதிகாலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சுமார் 6 வீடுகள்வரை முற்றாக தீக்கிரையாகியுள்ளன. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இழப்பீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் தொடர்ந்து செயற்பட்டுவருகின்றனர். இடம்பெயர்ந்தவர்கள் வீடுகளை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். சொத்திழப்புகள் பற்றி மதிப்பீடு ஆரம்பமாகவுள்ளது.

……

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (29.02.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மனதில் நினைத்த காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். இலட்சியத்தில் வெற்றி காண்பீர்கள். எப்படியாவது இந்த வேலை இன்று முடிந்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களுடைய இந்த நாள் மறக்க முடியாத நல்ல நாளாக அமையும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தது நல்லபடியாக நடக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து நடக்காத காரியங்களை இன்று செய்யலாம். புது தொழில் தொடங்குவது, புதிய வேலை தேடுவது, புது வீடு வாடகைக்கு தேடுவது, சொந்தமாக ஏதாவது சொத்து பத்து வாங்குவது, போன்ற விஷயங்களில் இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்க இருக்கும். பெரியவர்களின் ஆலோசனையின் மூலம் நிறைய நல்லது நடக்கக்கூடிய நாள் இது.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவாக காணப்படும். இந்த வேலையை நம்மால் செய்ய முடியுமா. இது நமக்கு செட் ஆகுமா என்று ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவீர்கள். இதனாலையே இந்த நாள் கொஞ்சம் மந்தமாகத்தான் செல்லும். சுறுசுறுப்பாக உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. உங்களின் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்க. கடவுள் மீது பாரத்தை போட்டு, நல்ல காரியங்களை தொடங்குங்கள். நல்லதே நடக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் உஷாரா இருங்க. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யக்கூடாது. அலுவலக பணியிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. குடும்பத்தில்சண்டை சச்சரவு வர வாய்ப்புகள் உள்ளது. அதனால் வாக்குவாதம் வந்தால் கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எதிரிகளை எதிர்த்து போராடக்கூடிய தெம்பு வந்துவிடும். இத்தனை நாள் உங்களை ஏளனமாக பேசியவர்களுக்கு எல்லாம் முகத்தில் கறியை பூசும்படி பதிலடி கொடுப்பீர்கள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள் இது? போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கையில் உயரக்கூடிய நன்மைகள் நடக்கும். இந்த நாளை என்ஜாய் பண்ணுங்க.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எந்த முடிவை எடுப்பது என்ற சலனும் மனதுக்குள் கொஞ்சம் இருக்கும். முக்கிய முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக பெரியவர்களின் ஆலோசனை, அனுபவசாலிகளின் ஆலோசனையை கேட்டு நடந்துக்கோங்க. அடம் பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்காதிங்க.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாளா இருக்க போகுது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிறைய நல்லது நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். நீண்ட நாள் கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அன்றாட வேலையை ஒழுங்காக செய்தாலே போதும். அனாவசியமாக வேறு எந்த வேலையையும் செய்ய வேண்டாம். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பாதீங்க, குறிப்பாக எதிர்பாலின நட்பு கூடாது. கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு செல்லக்கூடாது. பிரச்சனை இருந்தால் நீங்களே தீர்த்துக்கோங்க.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனசு ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் சவாலான சூழ்நிலையே இருக்கும். நண்பர்கள் கூட எதிரிகளாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது பெரிய அளவில் பிரச்சினை நடக்காது. இன்றைக்காண சண்டை இன்னைக்கே முடிந்துவிடும். உங்கள் பக்கம் இருக்கக்கூடிய நியாயத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள். பிரச்சனை வந்து சரியாக கூடிய நாள் இது.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. பம்பரம் போல சுற்றி சுற்றி எல்லா வேலையும் செய்யப் போறீங்க. நல்ல பெயர் வாங்குவீங்க. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மன நிம்மதி உண்டாகும். நிதி நிலைமை மேலோங்கும். பொன் பொருள் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிரச்சனைகள் வரக்கூடிய நாளாகத்தான் இருக்கப் போகின்றது. அதற்காக உணர்ச்சி வசப்பட்டு கோபப்படக்கூடாது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் பொறுமையாக நின்று சிந்தித்து நிதானமாக செயல்படுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க. இன்று வார்த்தையில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மட்டும் தான் தேவை. அடுத்தவர்களிடம் பேசவே பேசாதீங்க. முடிந்தால் மௌன விரதம் எடுங்க. வாக்குவாதத்தில் ஈடுபட்டால் உங்களுக்குத் தான் அவமானம் ஏற்படும் பாத்துக்கோங்க. பேசிப் பேசி உங்களுடைய மரியாதையை குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய நேரம், உங்களை பேச சொல்லும். நாக்கை அடக்கினால் மட்டுமே இன்று நன்மை நடக்கும் ஜாக்கிரதை.

ஆஸியிடம் இராணுவ உதவி கோருகிறது உக்ரைன்!

தமது நாட்டுக்கு ஆஸ்திரேலியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன், இராணுவ ரீதியிலான உதவிகளும் அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உதவ வேண்டும் என்று ஆஸி.க்கான உக்ரைன் தூதுவர் Vasyl Myroshnychenko வலியுறுத்தியுள்ளார்.

“ ரஷ்யா கொலை வெறியுடன் செயற்பட்டுவருகின்றது. நாம் வெறுங்கையுடன் போரிட முடியாது.” – என்று இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தூதுவர் Vasyl Myroshnychenko சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, உக்ரைனுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று லிபரல் கூட்டணி லேபர் அரசை வலியுறுத்தியுள்ளது.

 

 

சாந்தனின் பூதவுடலுக்கு சீமான், தொல். திருமாவளவன் அஞ்சலி!

சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே இவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைத்தியிசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

 

உக்ரைன்மீதான ரஷ்ய போரை விமர்சித்த மனித உரிமை செயற்பாட்டாளருக்கு சிறை! ரஷ்யாமீது ஆஸி. கடும் சீற்றம்!

உக்ரைன்மீதான ரஷ்ய போரை கண்டித்ததற்காக ரஷ்யாவின் மனித உரிமை செயற்பாட்டாளரான Oleg Orlov இற்கு ஈராண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

70 வயதான Oleg Orlov, “Memorial human rights organisation” என்ற அமைப்பின் தலைவராக 20 வருடங்களாக செயற்பட்டுவருகின்றார். இந்த அமைப்பை ரஷ்யா திட்டமிட்ட அடிப்படையில் தடை செய்துள்ளது. ஆனால் நோபல் பரிசுக்குகூட அவ்வமைப்பு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

உக்ரைன்மீதான ரஷ்ய படையெடுப்பை Oleg Orlov இனப்படுகொலையென விமர்சித்திருந்தார். போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திவந்தார்.

இந்நிலையில் Oleg Orlov, ரஷ்ய இராணுவத்துக்கு களங்கம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு, அவருக்கு எதிராக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆஸ்திரேலியா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

“ மனித உரிமை பாதுகாவலர்கள்மீதான ரஷ்யாவின் அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சர்வதேச சட்டத்திட்டங்களை ஏற்க வேண்டும்.” – என்று ஆஸி. வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரியவருகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார்.

சாந்தன் யாழில் உள்ள தமது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தயாராகவிருந்தவேளை இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல வருட கனவு நனவாகும்வேளை நடந்தேறிய பெருந்துயர் சம்பவம்…!

ராஜீவ் காந்தி கொலை வழங்கியில் இருந்து விடுதலையாகிய, சாந்தன் இவ்வாரம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு தனது மகனை காண தாயும், தாய் மடியில் மீண்டும் ஒருமுறையாவது தலைவைத்து படுத்து, கட்டியணைத்து கதறி அழுது, மனதுக்குள் இருந்த துன்பங்களை கொட்டி தீர்க்க வேண்டும் என மகனும் காத்திருந்து – அது கைகூடுவதற்குள் இப்பெரும் துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை விழிநீரை பெருக்கெடுக்க வைக்கின்றது.

தமிழ் உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் சமூகவலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டுவருகின்றனர்.

சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னர் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.

இலங்கை புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று தெரியவருகின்றது.

சாந்தன் காலமானார் – உறுதிப்படுத்தியது வைத்தியசாலை நிர்வாகம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட – இலங்கை வருகை தந்து தனது தாயை பார்வையிட காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

வைத்தியசாலை நிர்வாகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்ற வந்த அவர், கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

சாந்தன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் இலங்கை வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசும் இதற்குரிய அனுமதியை வழங்கி, அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்தன. இந்நிலையிலேயே இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21-ம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக 1999-ம் ஆண்டு மே 11-ம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சாந்தன், ராபர்ட் பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

” ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார்”

அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டார்.

2007 இல் இருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படக் காட்சிகள் ஈராக்கில் ஒரு டசின் மக்களை அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டரில் இருந்து படுகொலை செய்வதைக் காட்டுகிறது. கொல்லப்பட்ட ஈராக்கியர்களில் இரண்டு ரோய்ட்டர் செய்தி நிறுவன ஊழியர்கள் இருந்தனர்.

அமெரிக்காவிற்கு எதிராக உளவு பார்த்தார் என்ற அடிப்படையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது. இதனிடையே, இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது ஸ்வீடன். இது அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சி என ஜூலியன் அசாஞ்சே தரப்பு குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் தோல்வியைச் சந்தித்த ஜூலியன் அசாஞ்சே ஜாமீன் விதிமுறைகளை மீறி, லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். 2019- ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றது.

அதன்பின் ஜூலியன் அசாஞ்சேவை இங்கிலாந்து பொலிஸார் கைது செய்து தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைத்தனர். அசான்ஐஜே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் சித்திரவதை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஷர் அசான்ஜேயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரித்தார்.

ஜூலியன் அசான்ஜேயின் மீதான விசாரணைகள் ஜனநாயகத்திற்கான மரணதண்டனை என்றும் அது அமெரிக்காவின் ஊடகசுதந்திரம் தகவல் அணுகுமுறை மற்றும் உண்மையின் மீதான முழுத்தாக்குதல் என்றும் அரசியல் விமர்சகர்கள் அமெரிக்காவைச் சாடியுள்ளனர்.

உளவு பார்த்ததாக ஜூலியன் அசாஞ்சே மீது 17 குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. நாடு கடத்தப்பட்டால் ஆஸ்திரேலியாவில் பிறந்த அசான்ஜே 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசான்ஜே அமெரிக்க சிறையின் கடுமையான சூழலைச் சந்திப்பது, அவரைத் தற்கொலைக்கு தூண்டும் என ஜூலியன் அசாஞ்சே தரப்பில் கூறப்பட்டதால், முதலில் அமெரிக்காவின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த நிலையிலேயே ஜூலியன் அசாஞ்ஜே அமெரிக்காவிற்கு விசாரணைக்காக நாடு கடத்தப்பட இருக்கிறார் என்று பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனின் இந்த முடிவு குறித்து அசாஞ்சே மனைவி பேசும்போது, “எனது கணவர் எ குற்றமும் செய்யவில்லை. பத்திரிகையாளராக அவரது பணியைதான் செய்தார். தன பணியை செய்தற்காக அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்” என்றார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? ( 28.02.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சி தரும் நாளாக இருக்கப் போகின்றது. முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண வரவு சீராக இருக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் தொகையை இன்று வசூல் செய்து சாதனை புரிவீர்கள். மனசு சந்தோஷம் அடையும். சேமிப்பு இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்களுடன் பேசும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர வேண்டாம்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவலையோடு தான் இருக்கப் போறீங்க. மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிக கவனத்தோடு இருந்தால் மட்டுமே பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவு சரியாகும். நிதிநிலைமை கொஞ்சம் பின்னடைவாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகலாம். செலவை குறைக்கவும்.

கடகம் – கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்க போகின்றது. செய்த வேலையில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப விஷயத்தில் பொறுமை தேவை.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்களுடைய நண்பர்கள் தான் காரணமாக இருக்கப் போகிறார்கள். அவர்களுக்கும் ஒரு நன்றியை தெரிவித்து விடுங்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் என்று உற்சாகமாக உங்களுடைய வேலையை செய்யப் போகிறீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் அடுத்தவர்களை பற்றி புறம் பேசக்கூடாது. உங்களுடைய வேலையை மட்டும் பார்க்கவும். கணவரோடு சண்டை போடாதீங்க. விட்டுக்கொடுத்து நடக்கவும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரும் நாள் இது.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். இதனால் கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். கோபப்படுவீங்க, இதனால் தலைவலி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக வேலையை செய்யவும். அவசரப்படாதீங்க. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களுடைய பிரச்சனையை மனைவி புரிந்து நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய அறிவாற்றலை பார்த்து அடுத்தவர்களும் ஆச்சரியப்படுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். நீண்ட நாள் பகை ஒரு முடிவுக்கு வந்துவிடும். இதனால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகிவிடும். எதிர்பாராத வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். பெரிய தலைபாரம் குறைந்தது போல இருக்கும். மனசு லேசாகும். இரவு நல்ல தூக்கம் வரும். தொழிலில் கூடுதல் கவனத்தோடு இருக்கணும். மொத்த பொறுப்பையும் மூன்றாவது நபரை நம்பி ஒப்படைக்க கூடாது.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சேமிப்பு இரட்டிப்பாகும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு உங்களுடைய வேலைகளை கவனிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பெண் குழந்தைகளின் மூலம் மனசு சந்தோசம் பெறும். உற்றார் உறவினர்கள் எல்லோரையும் ஒன்றாக சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தையும் நல்ல மேம்பாடு இருக்கும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் பொறுப்பு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்கள் மீது யாராவது தேவையில்லாத பழியை சுமத்துவார்கள். அதிலிருந்து வெளிவர போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் மீது தவறு இல்லை என்றால் யாருக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். மனதில் பட்டதை பேசுவும். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குழப்பத்திலிருந்து வெளிவர குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

கடைசி உரையிலும் சீனாவை விளாசித்தள்ளிவிட்டு விடைபெற்றார் Scott Morrison!

ஆஸ்திரேலியாவின் இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் Scott Morrison சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் Scott Morrisonநாடாளுமன்றத்தில் இன்று நன்றியுரை ஆற்றினார்.

இதன்போது தான் கடந்துவந்த பாதை, அரசியலில் எதிர்கொண்ட சவால்கள், படைத்த சாதனைகள், தமக்கு பக்கபலமாக இருந்தவர்கள் என முக்கிய பல விடயங்களை எடுத்துரைத்ததுடன், சீனா தொடர்பிலும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Morrison ஆட்சிகாலத்தில் சீனாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்திருந்தது. கன்பராவுக்கு எதிராக பீஜிங் கடுமையான பொருளாதார தீர்மானங்களையும் எடுத்திருந்தது. தென்சீனக் கடல் விவகாரம் உட்பட அரசின் செயற்பாடுகளை சீனா கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் தான் கடைசியாக ஆற்றிய உரையிலும் சீனாவை விளாசித்தள்ளிவிட்டு விடைபெற்றுள்ளார் Scott Morrison.

லேபர் அரசின் ஆட்சியின்கீழ் கன்பராவுக்கும், பீஜிங் இற்கும் உடையிலான உறவு கட்டியெழுப்பட்டுவந்த நிலையில், ஆஸ்திரேலிய எழுத்தாளருக்கு சீனாவில் ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ சீனா சுதந்திரத்தைவிட அதிகாரத்தை அதிகம் விரும்புகிறது. சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக எமது அரசு உறுதியாக நின்றது. அழுத்தங்களுக்கு பணியவில்லை. சீனா விடயத்தில் எச்சரிக்கை தேவை.” – எனவும் Scott Morrison குறிப்பிட்டுள்ளார்.

 

மாயமாகியுள்ள குடும்ப பெண்ணை தேடும் நடவடிக்கை காட்டுத் தீயால் ஒத்திவைப்பு!

காணாமல்போயுள்ள மூன்று பிள்ளைகளின் தாயான Samantha Murphy (51) ஐ தேடும் நடவடிக்கை, காட்டுத் தீ காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ballarat கிழக்கு பகுதியில்  Eureka தெருவில் உள்ள தமது வீட்டில் இருந்து பெப்ரவரி 4 ஆம் திகதி வெளியில் சென்ற Samantha Murphy மீண்டும் வீடு திரும்பவில்லை. நடை பயிற்சிக்காகவே காலையில் வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேடுதல் வேட்டை இடம்பெற்றது. சிசிரிவி கமராக்காட்சிகளும் ஆராயப்பட்டன. தொலைபேசி தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் இடம்பெற்றன. எனினும், இன்னும் தடயம் ஏதும் சிக்கவில்லை.

அவர் உயிருடன் இருப்பதற்கு சாத்தியம் இல்லை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேற்கு விக்டோரியாவில் காட்டு தீ பரவி வருகின்றது. Ballarat பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

amantha Murphy காணாமல் போயுள்ளசம்பவம் அவர் வாழ்ந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச வாசிகள், தன்னார்வ பணியாளர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில், காட்டுத் தீயால் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

“அமைச்சு பதவியை துறப்பேன்” – டக்ளஸ் அதிரடி

“எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன்.”

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மர்மமான முறையில் மாயமான இரு இளைஞர்களும் சடலங்களாக மீட்பு!

சிட்னியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணாமல்போய் இருந்த இரு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Ten அலைவரிசையின் முன்னாள் தொகுப்பாளர் Jesse Baird மற்றும் Qantas நிறுவனத்தில் பணியாற்றும் அவரின் துணையாகக் கருதப்படும் Luke Davies என்பவருமே இவ்வாறு காணாமல்போய் இருந்தனர்.

இவர்கள் காணாமல்போயுள்ள சம்பவத்துடன் மூன்றாவது நபர் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், சிட்னி புறநகர் பகுதியான உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அதன்பின்னர் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இரத்தம் தோய்ந்த ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

“ கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களும் ஆகியோருடையவையாக இருக்கலாம் என நம்புகின்றோம்.” – என்று பொலிஸ் ஆணையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிட்னியின் தென்மேற்கில் Bungonia பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வைத்தே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.