சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

குயின்ஸ்லாந்து Gold Coast பகுதியில் நண்பர்களுடன் இணைந்து தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பெண்ணே, ‘Drug cocktail’ சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Danielle Whittaker என்ற குறித்த பெண் தனது ஆறு நண்பிகளுடன் இணைந்து தனது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாட தயாராகியுள்ளார். இதற்காக ‘பார்ட்டி’யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ‘Drug cocktail’ அருந்திய பெண்கள் சுவாசிக்க சிரமப்பட்டுள்ளனர். இதனையடுத்து சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.

எழுவரில் மூவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட 43 வயது பெண் தற்போது குணமடைந்துள்ளார். மற்றைய பெண்ணும் நிலையான நிலையில் உள்ளார்.

யுவதிமீது கத்திக்குத்து தாக்குதல்: பிரிஸ்பேனில் பயங்கரம்!

பிரிஸ்பேனில் யுவதியொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்தே கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த 22 வயது யுவதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்து இல்லை. தாக்குதல் நடத்திய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிணை மறுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

தெற்கு அரசியலில் பரபரப்பு: இறுதி அஸ்திரத்தை ஏவ தயாராகும் பஸில்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் இறுதி அஸ்திரத்தை ஏவுவதற்கு பஸில் ராஜபக்ச தயாராகிவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எனினும், இதற்கான ஆதரவு தளம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே இந்நடவடிக்கையில் அவர் இறங்குவார் எனத் தெரியவருகின்றது.

முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கவில்லை. அரசமைப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல்வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்ந்துவருகின்றது.

அவ்வாறானதொரு யோசனை நிறைவேறுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதுகூட 117 வாக்குகளே ஆளுங்கட்சிக்கு இருந்தது.

மொட்டு கட்சியில் சிலர் ரணில் பக்கம் நிற்கின்றனர். நிமல் லான்சா, அநுரயாப்பா உள்ளிட்ட குழுவினரும் ரணில் பக்கம் நிற்கின்றனர். சுதந்திரக்கட்சியினரும் ஜனாதிபதி பக்கமே உள்ளன.

எனவே, குறித்த பிரேரணைக்கு 113 பேரின் ஆதரவை பெறமுடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில் இதொகா உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள்கூட ரணில் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளன.

இந்நிலையில் 113 ஐ பெறமுடியுமா என ஆராயப்பட்டுவருகின்றது, அதற்கான வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏப்ரல் இண்டாம்வார நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த யோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு கடத்தல் சட்டமூலத்தை தாமதப்படுத்திய எதிரணிகள்மீது வெளிவிவகார அமைச்சர் சொற்கணை தொடுப்பு!

நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு செனட் சபையில் ஆதரவு வழங்க மறுத்துள்ள லிபரல் கூட்டணியினரையும், பசுமை வாதிகளையும் வெளிவிவகார அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல் நலனைவிடவும் தேசிய நலனுக்கே முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு கடத்தல் சட்டமூலம் செனட்சபைக்கு வந்தபோது – அது பற்றி ஆராய வேண்டும் எனக்கூறி விவாதத்தையும், வாக்கெடுப்பையும் எதிரணிகள் ஒத்திவைத்தன. இதனால் மே 7 ஆம் திகதியே சட்டமூலத்தை மீள முன்வைக்க முடியும்.

இந்நிலையில் லிபரல் கூட்டணி, பசுமைக்கட்சி ஆகியவற்றின் தலைமைகளின் முதிர்ச்சியற்ற செயற்பாடு காரணமாகவே சட்டமூலம் பிற்போடப்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

“ குடியேற்ற கட்டமைப்பை வலுவாக மாற்றுவதற்கான ஒரு கருவியே அச்சட்டமூலம். வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியே அதன் அதிகாரங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

அகதிகள் அல்லாதவர்கள் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கு எதிராகவே சட்டம் பயன்படுத்தப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரி அது பயன்படுத்தப்படமாட்டாது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஆஸி. படை அதிகாரி காயம்!

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஐ.நா. அமைதிப்படையில் சேவையாற்றும் ஆஸ்திரேலிய படை அதிகாரியொருவர் காயம் அடைந்துள்ளார்.

அவரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும், தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து, இஸ்ரேல், ஜோர்தான், லெபனான் மற்றும் சிரியாவில் போர் நிறுத்த ஏற்பாடுகளை கண்காணிக்கும் ஐ.நாவின் ‘ஒப்பரேஷனுக்கு’ ஆஸ்திரேலியா ஆதரவு வழங்கியுள்ளது.
லெபனானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதற்றத்தை கண்காணிப்பதற்கான படையி தெற்கு லெனானில் நிறுவப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பயணின்போதே குண்டு வெடித்ததில் அவர் காயம் அடைந்துள்ளார். ஐ.நா. அமைதிப்படையை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலை ஐ.நாவும், ஆஸ்திரேலியாவும் கண்டித்துள்ளன.

சமரசத்துக்கு இஸ்ரேல் பச்சைக்கொடி – ஆஸி. மகிழ்ச்சி

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுகளை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த கலந்துரையாடலில் கட்டார் மத்தியஸ்தம் வகிக்கின்றது.

காஸா எல்லையில் போர் நிறுத்தத்தை அறிவித்தல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் என்பன இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக உள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரத்தில் நிலையான போர் நிறுத்தத்திற்கான கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்திருந்தது.

எனினும்,இந்த பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு இஸ்ரேல் தற்போது தயாராகியுள்ளது.

அத்துடன், ஆஸ்திரேலியாவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்திவருகின்றது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தைக்கூட ஆஸ்திரேலியா வரவேற்றிருந்தது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (31.03.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கப் போகின்றது. மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். விடுமுறை நாள் என்பதால் இன்று குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். இன்று மாலை சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமான இந்த நாளில் மறக்காமல் வீட்டை சுத்தம் செய்யும் வேலையையும் முடிச்சிடுங்க.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப பொறுமையா இருப்பீங்க. உங்களுடைய வேலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. மற்ற நாளை விட இந்த நாள் ரொம்ப ரொம்ப சூப்பராக கடந்து போகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். வெளியூர் பயணங்கள் நன்மையை கொடுக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஏதாவது வேலை செய்து அதில் தோல்வி அடைந்து விட்டால் உடனே மன வருத்தப்படக்கூடாது. தோல்வியை தூக்கி தூர போட்டு விட்டு அடுத்து என்ன வேலையையோ அதை செஞ்சிருங்க. நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும், அதை சகஜமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களிடத்தில் வரவேண்டும். ஏதாவது பிரச்சனை என்றால் உடனே துவண்டு போய் அப்படியே உட்காராதிங்க. பிரச்சனைக்கு உண்டான வழியை தேடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மனதிருப்தியை கொடுக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். மன நிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உயர் பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சில பேருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடிய உணவு பண்டங்களை சாப்பிடுவதை இன்று தவிர்க்கவும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.எதிரி தொல்லை நீங்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எதையாவது புதுசாக சாதிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டே இருப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதுப்புது ஐடியாக்களை எடுத்து விடுவீங்க. இதனால் எதிராளிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். நாலு பேர் மதிக்கத்தக்கும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகள் இன்று இருக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாகவே இருக்கும். கொஞ்சம் கோபத்தோடு சிடுசிடென்னு இருப்பீங்க. உங்கள் வீட்டில் இருப்பவர்களோடு சண்டை சச்சரவுகள் வரும். அதை சமாளிக்க வேண்டும் என்றால், உங்களுடைய கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். மூன்றாவது நபர்களை முழுசாக நம்பாதீங்க.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் உங்களுடைய கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அடுத்த தேர்வுக்கு தயாராகும் போது அலட்சியமாக இருக்கக் கூடாது. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துருங்க வாக்குவாதம் செய்யாதீங்க.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். எதிர்பார்க்காத பணவரவு இருக்கும். நல்ல பெயர் எடுப்பீங்க. சந்தோஷத்தில் மனது நிரம்பி இருக்கும். மனைவிக்கு புடிச்ச பொருட்களை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். நிம்மதியாக உங்களுடைய இந்த நாள் நகர்ந்து செல்ல போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையை சமாளிக்க சில பேருக்கு திண்டாட்டம் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். செலவை குறைக்கவும்.

சூடானில் பட்டினி சாவு அபாயம்: 50 லட்சம் பேர் பாதிப்பு!

சூடானில் பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், உடனடி உதவிகள் அவசியமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக உணவுப் பொருட்களின் விநியோகம் தடைப்பட்டமையே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுடானில் சுமார் 5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வௌியிட்டுள்ளது.

அவர்கள் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3.6 மில்லியன் பேர் சிறுவர்கள் எனவும் 1.2 மில்லியன் பேர் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளே பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சூடானில் எதிர்வரும் மாதங்களில் பட்டினி நிலை மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 மற்றும் புலிகள் குறித்து கனடாவில் அநுர கூறியது என்ன?

“ மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் மீண்டுமொரு போர் ஏற்படாது, புலிகள் மீண்டெழுவார்கள் என தெற்கில் மாயை உருவாக்கப்படுகின்றது, அதற்கான சாத்தியமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், 13 பிளஸ் என்றெல்லாம் கதைக்கப்படுகின்றது. மாகாணசபை முறைமை இதற்கு தீர்வு அல்ல என்றே நாம் கருதுகின்றோம். எனினும், மாகாணசபை முறைமை தற்போது அம்மக்களின் (தமிழ் மக்களின்) உரிமை. எனவே, அதனை தற்போது இல்லாது செய்ய முடியாது. அப்படியானால் தற்போது என்ன செய்ய வேண்டும்?

மாகாணசபை முறைமை தமது அரசியல் உரிமையென அம்மக்கள் (தமிழ்மக்கள்) ஏற்கின்றனர் எனில், அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதனை அம்மக்களின் உரிமையாக உறுதிப்படுத்த வேண்டும். நாம் அதைச் செய்வோம். இந்த முறைமை தீர்வா, இல்லையா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.

தமது அரசியல் உரிமைகளை பாதுகாக்கப்படும் வியூகம் மாகாணசபை முறைமையென மக்கள் கருதினால் அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

எமது நாட்டில் வடக்கில் மீண்டுமொருமுறை யுத்தம் ஏற்படவே ஏற்படாது. வடக்கில் உள்ள பெற்றோர், போருக்காகவே பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்ற மாiயை தெற்கில் தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

அதன்காரணமாகவே புலிகள் மீண்டெழுவார்கள் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றனர். அவ்வாறு நடக்காது.

வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை போருக்கு அனுப்ப முற்படவில்லை. தெற்கில் உள்ள பெற்றோர்போலவே கல்வி வழங்கவும், சிறந்த தொழிலை பெற்றுக்கொடுக்கவும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்வுமே எதிர்பார்க்கின்றனர். அதற்கான கதவு மூடப்பட்டுள்ளது. தெற்கில்போன்று வடக்கிலும் பிரச்சினைகள் உள்ளன. 30 வருடகால போரால் வடக்குக்கான நிறைய வாய்ப்புகள் இல்லாமல்போயுள்ளன. எனவே, அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டம் அவசியம். ஏனெனில் 30 வருடங்கள் இழக்கப்பட்டுள்ளன.

அரசியல் பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினைகள் என இரண்டுக்கும் தீர்வுகள் அவசியம். வடக்குக்கு சென்றாலும், தெற்கில் இருந்தாலும் இதையே நாம் கூறிவருகின்றோம். வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களுடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயார்.” – என்றார்.

அமெரிக்க ஊடகரை உடன் விடுதலை செய்க: ரஷ்யாவிடம் ஆஸி. வலியுறுத்து

ரஷ்யாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஊடகவியலாளர் Evan Gershkovich உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் Evan Gershkovich சிறை வைக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது.

இந்நிலையிலேயே Evan Gershkovich இன் விடுதலைக்காக பாடுபடுபவர்களுடன் ஆஸ்திரேலியாவும் இணைகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் Penny Wong தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரமின்றி தொடர்ந்து தடுப்பு வைத்திருப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியவருக்கு சிறை!

Tasmaniaவில் செயற்கை நுண்ணறிவு (AI ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான ஆவணங்களை தயாரித்த நபருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

48 வயதான Gravelly Beach என்பவருக்கே Tasmania மாநில உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. 10 மாதங்கள் அவர் கட்டாயம் சிறையில் இருக்க வேண்டும். பிணைக்கு விண்ணப்பிக்க முடியாது.

கடந்த மே மாதம் குறித்த நபரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அவரது கணினியில் சிறுவர் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் நூற்றுக்கணக்கான கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் கணிசமான அளவு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இப்படியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமைக்காக இடம்பெற்றுள்ள முதலாவது கைது இதுவாகும்.

சிட்னியில் டக்‌ஷி சாரதிமீது கத்திக்குத்து தாக்குதல்!

சிட்னி மேற்கு பகுதியில் டக்‌ஷி சாரதிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் சென்ற பயணி ஒருவரே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.

டக்‌ஷி சாரதியின் கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர். சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

‘Drug cocktail’ அருந்திய பெண்களில் ஒருவர் பலி: மேலும் இருவர் ஆபத்தான நிலையில்!

குயின்ஸ்லாந்து Gold Coast பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் வைத்து ‘Drug cocktail’ அருந்திய ஏழு பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

‘Drug cocktail’ அதிகளவு அருந்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். 7 பெண்கள் அங்கு சுவாசிக்க சிரமப்பட்டுகொண்டிருந்துள்ளனர்.

அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு பெண்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஏனைய நான்கு பெண்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

மெல்பேர்ணில் இளைஞர்களுக்கான குரல் மௌனித்தது

மெல்பேர்ணில் சமூகநீதிக்காக 4 சதாப்தங்களுக்கு மேலாக குரல் கொடுத்தவந்த Les Twentyman 76 ஆவது வயதில் காலமானார்.

இளைஞர்ளுக்கான வீடில்லா பிரச்சினை, சமூக நலன் உள்ளிட்ட விடயங்களுக்காக 4 சதாப்தங்களுக்கு மேலாக இவர் குரல் கொடுந்து வந்துள்ளார்.

இளைஞர்கள் சீர் திருத்தம், அவர்களுக்கான கல்வி, போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்தல் போன்ற பிரசாரங்களிலும் அவர் ஈடுபட்டுவந்துள்ளார்.

சிறந்த விக்டோரியருக்கான விருது 2006 இல் இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன், தேசிய விருதும் வென்றுள்ளார்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? (30.03.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் கொண்ட நாளாக இருக்கும். சிரமங்கள் வந்தாலும் அதை சமாளித்து இந்த நாளை நல்லபடியாக நகர்த்திச் செல்லும் அளவுக்கு திறமையும் உங்களிடத்தில் இருக்கும். கடவுளின் ஆசீர்வாதத்தை கொண்டவர்கள் நீங்கள். ஆகவே பிரச்சினைகளை கண்டு துவண்டு போய் நிற்காதீர்கள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்று துணிவோடு வேலைகளை செய்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக பிறக்கப் போகின்றது. இதுநாள் வரை வாழ்க்கையில் இருந்து வந்த தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி நிறைந்த நாளாக இருக்க போகின்றது. இதனால் வேலையில் பின்னடைவு ஏற்படும். அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாக கூட சில பேருக்கு வரும். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியத்தை பெற தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். காலையில் எழுந்தவுடன் மனதை ஒரு பத்து நிமிடம் அமைதியாக வைத்து தியானம் செய்துவிட்டு பிறகு வேலையை தொடங்கவும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சின்ன சின்ன சண்டைகளும் பிரச்சனைகளும் வரும் நாளாக இருக்கப் போகின்றது. முழுசாக வேலையில் ஆர்வம் செலுத்த முடியாது. கொஞ்சம் மூட் அவுட் ஆகவே இருக்கப் போகிறீர்கள். இதனால் அடுத்தவர்களிடம் எரிஞ்சி விழுவீங்க. உங்களைப் பார்த்தாலே நண்பர்கள் கூட தெறித்து ஓடுவார்கள் அந்த அளவுக்கு இன்று உங்களுடைய நாள் சுடச்சுட இருக்கும். பார்த்து கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நம்பிக்கையின் பேரில் யாராவது கடன் கேட்டால் தூக்கி கொடுத்துறாதீங்க. திரும்பி வராமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். இருக்கக்கூடிய வேலையை பக்குவமாக செய்தால் மட்டும் போதும். புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. நஷ்டத்தில் இருந்து தப்பிக்க கவனம் தேவை.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்த முடியாது. இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கலாம். தொழிலில் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். மாறாக அதிகாரம் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வருமானம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வசூல் ஆகும். புதுசாக வண்டி வாகனம் சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். மாமியார் மருமகள் உறவுகள் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். எல்லா வேலையிலும் திறமையாக செயல்பட வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு தகுந்த ஊதியமும் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றம் நிறைந்த நாள் இது. புதுசு புதுசா நாலு விஷயங்களை கற்றுக்கொண்டு அதை நாலு பேருக்கு பயன்படும் படி செய்யக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன துன்பங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடித்தவர்களே உங்கள் மனசை கஷ்டப்படுத்தலாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சின்ன ரத்த காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இல்லத்தரசிகள் காய்கறி நிற்கும்போது, அடுப்பில் சமைக்கும்போது ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனங்கள் இருந்தால் வரும் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. யாரைப் பார்த்தாலும் கோபம்தான் முன்பு வந்து நிற்கும். பொறுமையை இருக்காது. இதனால் நிறைய எதிரிகளை சம்பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நண்பர்கள் கூட எதிரியாக மாறலாம். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்யாதீங்க. பொறுமையா இருங்க. கோபத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த பாருங்கள்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். கூடுமானவரை அதிக வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்யாதீங்க. சின்ன சின்ன வியாபாரிகள் கூட நிறைய லாபத்தை ஈட்டக்கூடிய நாள் இது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுப காரியம் நிகழ்ச்சிகளை பற்றி பேச தொடங்குவார்கள்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பிரஷர் இருக்கும். சின்ன சின்ன பொய் சொன்னதால் சில பேர் மாட்டிக் கொள்வீர்கள். கூடுமானவரை எந்த சூழ்நிலையிலும் உண்மையை சொல்லி பழகுவது நல்லது. இல்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தொழிலில் புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.

 

பஸில் ராஜபக்ச முதலில் பொதுத்தேர்தலை கோருவது ஏன்?

படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால் எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – என்று பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மொட்டு கட்சிக்கு ஆதரவு உள்ளது, மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கிவருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பஸிலுக்கு தெரியும். எனவே, ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். அதனால் மொட்டு தரப்பினரும் மேலும் பின்னடைவு ஏற்படும். இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களை தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே பொதுத்தேர்தல் கோரப்பட்டுள்ளது.

இரண்டாவது அரச ஊடகம் மற்றும் அரச அதிகாரிகள், பொலிஸார் ஊடாக ஏதேனும் ஒத்துழைப்பை பெறலாம் என பஸில் கருதுகின்றார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் இந்த ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறமாட்டாது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி.” – என்றார்.

ஊரடங்குக்கு மத்தியிலும் அரங்கேறும் குற்றங்கள்!

NT மாநிலத்தில் பூர்வக்குடி மக்கள் செறிந்து வாழும் Alice Springs பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் குற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன என்று தெரியவருகின்றது.

கூரிய ஆயுதங்களுடன் வந்த இளைஞர்கள் குழுவொன்று நேற்றிரவு வீடொன்றை உடைத்து கொள்ளையடித்துள்ளது என பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

“ புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்குரிய காட்சிகளும் உள்ளன. எனவே, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையும் கடையொன்று உடைக்கப்பட்டுள்ளது என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

Alice Springs பகுதியில் இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை இளைஞர்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தடுப்பதே இதன் நோக்கம்.

Alice Springs பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளில் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

 

புடினை வாழ்த்தியதால் மேற்கு ஆஸ்திரேலிய அரசியல் வாதிக்கு நேர்ந்துள்ள கதி….

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற புடினுக்கு வாழ்த்து தெரிவித்த மேற்கு ஆஸ்திரேலிய அரசியல்வாதியொருவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலிய கவுன்சிலரான Adrian McRae என்பவரே இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார், இது தொடர்பான செய்தி ரஷ்ய அரச ஊடகத்திலும் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் நீதியாக நடக்கவில்லை என மேற்குலகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாலும் ரஷ்யாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை என விமர்சித்திருந்தது.

உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது சட்டவிரோதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இவ்வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நகரசபைக்கு தெரிவாகியுள்ள Adrian McRae , ரஷ்ய ஜனாதிபதி புடினை புகழ்ந்து பேசியுள்ளார்.

“ ரஷ்ய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சுதந்திர சர்வதேச பார்வையாளராக நான் அங்கு சென்றேன்.” – எனவும் Adrian McRae கூறியுள்ளார்.

எனினும், எதிராக சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

அவர் இன்னும் உள்ளாட்சபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கான தென்கொரிய தூதுவர் இராஜினாமா!

ஆஸ்திரேலியாவுக்கான தென்கொரிய தூதுவராக நியமிக்கப்பட்ட Lee Jong-sup , ஒரு மாத காலத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தென்கொரியாவில் ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான Lee Jong-sup , ஆஸ்திரேலியாவுக்கான தூதுவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடற்படை சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பில் அவருக்கு குற்றச்சாட்டு இருந்தது. இதனையடுத்து பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. அந்த பயணத்தடை கடந்த மாதம் நீக்கப்பட்ட நிலையிலேயே அவர் கன்பராவுக்கு வந்திருந்தார்.

இவரின் நியமனத்தை தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்கான ஒருவரை இராஜதந்திர சேவைக்கு நியமிப்பது ஏற்புடையது அல்ல எனவும் சுட்டிக்காட்டின.

மேயராகிறார் செய்தி தொகுப்பாளர் Rosanna Natoli!

தொலைக்காட்சி தொகுப்பாளரான Rosanna Natoli , Sunshine Coast Councilமேயருக்கான போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.

இதன்படி குயின்ஸ்லாந்தில் மிகப்பெரிய கவுன்சில்களில் ஒன்றாக Sunshine Coast இற்கு அவர் தலைமை தாங்குவார்.

தனக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தRosanna Natoli , மக்கள் சேவையை முழுவீச்சுடன் முன்னெடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி என்பவற்றை விரைவில் துறக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.