சிட்னி கத்திக்குத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

சிட்னி கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்திய நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பிற்பகல் 3.10 மணியளவிலேயே தாக்குதல் நடத்தியவர் வணிக வளாகத்துக்குள் சென்றுள்ளார். இவ்வாறு உள்நுழையும்போது கத்தியால் நபர்களை குத்தியபடியே சென்றுள்ளார்.

இதனை கண்டவர்கள் அலறயடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

9 பேர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நிலையில், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், உயிரிழந்தவர்களில் குழந்தையொன்றும் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

அவர் தனிநபராகவே இச்செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும், அவர் பின்னணியில் குழுவொன்று இருக்காது எனவும் பொலிஸார் கருதுகின்றனர். எனினும், பலகோணங்களில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. எதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவத்தை பிரதமர் கண்டித்துள்ளார். பெடரல் பொலிஸாரும் தரவுகளை சேகரித்துவருகின்றனர்.

 

 

கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி: சிட்னியில் பயங்கரம்!

சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது. இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உட்பட ஏழுபேர்வரை காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.உயிரிழந்த நால்வரில், தாக்குதல் நடத்திய நபரும் இருக்கலாம் என தெரியவருகின்றது.

 

 

 

 

Tasmania வில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மர்ம மரணம்: விசாரணை ஆரம்பம்

Hobart இல் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Tasmanian அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் ஒழுக்கமற்ற முறையில் செயற்படுகின்றார் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் Moonah பகுதியில் வைத்து அதிகாலை 1.55 மணியளவில் 29 வயதான குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் Hobart சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தாலும் அவர் அதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெறுகின்றது. மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மரண பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அது பற்றி கூறமுடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

NSW, Gulgong பகுதியில் கொள்கலனுக்குள் இரு சடலங்கள்: விசாரணை வேட்டை ஆரம்பம்

New South Wales மத்திய மேற்கு பகுதியில் கப்பல் கொள்கலனில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு சோதனை நடத்தியபோது கொள்கலனுக்குள் இருந்து சடலங்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சிட்னியில் இருந்து இரசாயன தடயவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது கொலைச்சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நபரொருவரை சுட்டுக்கொலை செய்து இருவரை கடத்தியவருக்கு 28 வருடங்கள் சிறை தண்டனை!

நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, மேலும் இருவரை கடத்திய நபருக்கு 28 வருடகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Christopher Hillman என்ற 45 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

2021 செப்டம்பர் 18 ஆம் திகதியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலைக்குற்றத்துக்கு 23 வருடங்களும், தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 5 வருடங்களும் இவ்வாறு விக்டோரிய உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம்கோரி ஆஸியில் இன்று பேரணிகள் முன்னெடுப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் வார இறுதியில் மீண்டும் வீதிகளில் இறங்கி, போராட ஆரம்பித்துள்ளனர். காசாவில் பொதுமக்களின் அவலநிலை குறித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், சிட்னி, மெல்பேர்ண் மற்றும் கன்பராவில் இன்று பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் உட்பட ஐ.நா. தொண்டு நிறுவன பணியாளர்கள் எழுவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது விடயம் தொடர்பில் பொறுப்புகூறல் அவசியம் என இஸ்ரேலை ஆஸ்திரேலிய வலியுறுத்தியுள்ளதுடன், இஸ்ரேலின் நகர்வுகளைக் கண்காணிக்க விசேட ஆலோசகர் ஒருவரையும் நியமித்துள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு மனிதாபிமான செயற்பாட்டாளர்மீது காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சற்று ஓய்ந்திருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் மீண்டும் பழைய உத்வேகத்துடன் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (13.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கையை விட்டு பணம் தானாக கரையும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அனாவசிய செலவு எது, அவசியம் செலவு எது என்று பார்த்து கையில் இருக்கும் படத்தை வெளியே எடுங்கள். இல்லையென்றால் பாக்கெட் காலி. பிறகு இந்த மாதம் கடைசி வரை திண்டாட்டம் இருக்கும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பி உங்கள் கையில் இருக்கும் பணத்தையும் கொடுக்க வேண்டாம் ஜாக்கிரதை.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். சுறுசுறுப்பாக வேலை நடக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஒற்றுமை நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. அதாவது உங்களுடைய உறவுகள் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய கதையை பேசி நேரத்தை கடத்துவீர்கள். குறிப்பாக இன்று கலைஞர்களுக்கு நிறைய நல்லது நடக்கும். உங்களுடைய திறமையை பாராட்டும் வகையில் சில பரிசுகளும் கிடைக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேரு மத்தியில் உங்களுடைய கெத்தை காண்பிக்கலாம். உங்களை தரை குறைவாக பேசியவர்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடப்பதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். தலைகனம் வரக்கூடாது. அதே சமயம் நம்மை தலைகுனிய வைத்தவர்கள் முன்பு தன்னிச்சையாக நம்மை காண்பித்துக் கொள்வதில் தவறு கிடையாது.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக செல்லப் போகின்றது. மனநிறைவோடு அமைதியாக ஓய்வு எடுப்பீர்கள். நிறைய சிக்கல்களில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். இறை வழிபாட்டில் மனது ஈடுபடும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் உறவுகளை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எடுத்த வேலை உடனடியாக முடியாது. கொஞ்சம் இழுவரியாகத்தான் இருக்கும். ஆகவே புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பாலின நட்போடு ரொம்பவும் நெருக்கமாக இருக்க வேண்டாம். உங்களுடைய மனதில் எந்த தவறான எண்ணமும் இல்லை என்றாலும் சில சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். நிதி நிலைமை சீராகும். வீட்டிற்கும் மனைவிக்கும் தேவையான ஆடம்பரமான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கையில் இருக்கும் சேமிப்பு கொஞ்சம் குறையும். இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்தோ அறியாமலோ என்னைக்கோ செய்த நல்லதின் மூலம் இன்று பெரிய சந்தோஷம் உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களை தரை குறைவாக பேசியவர்கள் கூட, உங்கள் திறமையை புரிந்து கொள்வார்கள்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய அன்புக்குரியவர் உங்களிடம் வந்து காதலை வெளிப்படுத்துவார்கள். மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்க போகின்றது. காதல் திருமணம் வரை செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நேர்வழியில் செல்லுங்கள். தாய் தந்தைக்கு தெரியாமல் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். எவ்வளவு பிரச்சனைகளாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. அதை தேடி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ராஜா தான்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சின்ன சின்ன தவறுகள் செய்து பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர்கள் கூட, அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் இருந்து கூட உங்களுக்கு அழைப்பு வரலாம். வாய்ப்புகளை தவற விடாதீர்கள். தகுதிக்கு உயர்ந்ததாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். எதையோ இழந்தது போல யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். மன உலைச்சலால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. திறமையில் கொஞ்சம் பின் தங்கி தான் இருப்பீர்கள். உங்களை பார்த்து நீங்களே திட்டிக் கொள்ளும் அளவிற்கு சில சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாள் நல்லது நடந்தால், மூன்றாவது நாள், அந்த நல்லதே பிரச்சினையாக வந்து முடியும். அப்படித்தான் நீங்கள் நல்லது என்று நினைத்து செய்த சில காரியங்களின் மூலம் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. யாரையும் கண்மூடித்தனமாக முழுசா நம்பாதீங்க. கூடுமானவரை இறைவழிபாடு செய்வதில் முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் எழுந்து கடவுளை கும்பிட்டு விட்டு இந்த நாளை தொடங்கினால் நல்லது நடக்கும்.

வடகொரியாவை காக்கும் ரஷ்யாமீது ஐ.நாவில் ஆஸி. பாய்ச்சல்!

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அப்பட்டமாமீறி செயற்பட்டு பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படும் வடகொரியாவை பாதுகாக்கும் நோக்கில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஐ.நாவுக்கான ஆஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடப் பிரதானியான James Larsen இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“ வடகொரியாமீது தடைகளை விதித்து நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களையும் ஆஸ்திரேலியா ஆதரிக்கின்றது.
வடகொரியாவின் செயற்பாடுகள் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி, உலக அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நடைமுறைகளையும் வடகொரியா அப்பட்டமாக மீறிவருகின்றது.

அந்நாட்டுடன் ரஷ்யா சட்டவிரோத கொடுக்கல் – வாங்கல்களில் ஈடுபட்டுவருகின்றது. இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – எனவும் ஆஸ்திரேலிய பிரதிநிதி James Larsen குறிப்பிட்டுள்ளார்.

இளைஞன் குத்திக்கொலை – சிட்னியில் பயங்கரம்

சிட்னியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கத்திக்குத்து தாக்குதலில் மேலும் ஒரு இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.40 மணியளவிலேயே இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தையடுத்து அவசர சேவை பிரிவுகள், சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டன.

காயமடைந்த இரு இளைஞர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சரமாரியாக வெட்டு காயங்களுக்கு உள்ளான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றையவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் தொடுப்பதை தடுக்க அமெரிக்கா களத்தில்!

இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.

சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி ஒருவர் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.

இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கும் எனவும், இஸ்ரேல்மீது ஏவுகணை தாக்குதல் அல்லது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள தமது நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மறுபுறத்தில் ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது.

சிலவேளை ஈரான் தாக்குதலை நடத்தினால் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்கும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

Cook தொகுதியில் நாளை இடைத்தேர்தல்!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் அரசியல் கோட்டையெனக் கருதப்படும் Cook தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. எனினும், முன்கூட்டிய வாக்கு பதிவில் குறைந்தளவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இடைத்தேர்தலில் வாக்களிக்க Cook
தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் தகுதிபெற்றுள்ளனர்.

கூட்டாட்சி தேர்தலைவிடவும் இடைத்தேர்தலின்போது வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுவது இயல்பு என்றபோதிலும் இது மிகவும் குறைவாக உள்ளது எனவும் கண்காணிப்பு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஏப்ரல் 10 ஆம் திகதிவரை 18 ஆயிரத்து 447 பேரே முன்கூட்டிய வாக்கு பதிவில் ஈடுபட்டுள்ளனர். சரியான காரணங்கள் இன்றி இடைத்தேர்தலில் வாக்களிக்க தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Cook தொகுதியில் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்கொட் மொரிசன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் பதவி விலகி, அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.

 

Alice Springs இல் ஊரடங்கு தளர்தப்பட்டதும் பாதுகாப்பு நடைமுறை எவ்வாறு அமுலில் இருக்கும்?

NT மாநிலத்தில் Alice Springs பகுதியில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (16) தளர்த்தப்பட்டாலும் பொலிஸ் கண்காணிப்பு தொடரும் என்று NT முதல்வர் Eva Lawler தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்ட பின்னர் கடைபிடிக்கப்படும் நடைமுறை குறித்து முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் இறுதிவரை இல் கூடுதல் பொலிஸ் பிரசன்னம் இருக்கும் என அவர் இன்று தெரிவித்தார். இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை கூடுதல் பொலிஸார் சேவையில் இருப்பார்கள்.

வணிக வளாகங்களில் சமூக பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பூர்வக்குடி மக்கள் செறிந்துவாழும் Alice Springs
பகுதியில் இளைஞர் ஒருவரின் மரணத்தையடுத்து வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இளைஞர்களை இலக்கு வைத்து இருவாரகால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவு மேலும் 6 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா மரணங்கள் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது. அத்துடன், வைரஸ் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

2020 இல் கொரோனா பெருந்தொற்று ஆரம்பமான காலப்பகுதியில் இருந்து கடந்த மார்ச் மாதமே வாராந்த கொரோனா மரணம் விகிதம் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது என்று சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சுகாதார துறையில் சிறந்த முன்னேற்றம் என கூறப்பட்டாலும் புள்ளிவிவரம் தொடர்பில் சில நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

“ குறிப்பிட்ட வாரத்தில் கொவிட் மரணம் பூஜ்ஜியம் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.” – என்று நிவ் சவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் விவகாரம் தொடர்பான பேராசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இறப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தடுப்பூசி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல்மீதான ஈரானின் பதிலடி தாக்குதலை தடுக்க ஆஸ்திரேலியா முயற்சி!

இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதலை தொடுக்கவுள்ளது எனக் கூறப்படும் நிலையில், அவ்வாறானதொரு நகர்வில் ஈடுபடவேண்டாம் என ஈரானிடம் வலியுறுத்தியுள்ளது ஆஸ்திரேலியா .

இவ்விவகாரம் தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசி ஊடாக உரையாற்றியுள்ளார்.

“ இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பதற்றநிலைமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படவேண்டாம். பிராந்தியத்தில் ஸ்தீரத்தன்மையை மேம்படுத்துவதற்கே தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்த வேண்டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம்மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்காவிட்டாலும் இஸ்ரேல்தான் இந்த செயலில் ஈடுபட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (12.04.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். எந்த இடத்தில் சென்றாலும் உங்களுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கும். இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உங்களை பார்த்து பொறாமைப்படுபவர்களை சமாளிப்பதில் கொஞ்சம் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். அதை எல்லாம் நீங்கதான் உங்க திறமையை வைத்து சரி கட்டணும்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்கள் இன்று நண்பர்களோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். குறிப்பாக நடுத்தர வயதை கடத்தவர்கள், அதாவது 40 வயதை கொண்டவர்கள் உங்களுடைய பழைய நண்பர்களோடு சேர்ந்து பழைய கதைகளை பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனசு சந்தோஷமடையும். மற்றபடி சிறு வயது உடையவர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் அவரவருடைய வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த முயற்சியையும் செய்யக்கூடாது.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அதிரடியாக காலை வைக்க மாட்டீங்க. ஒரு விஷயத்தை ஒன்றுக்கு பலமுறை சிந்தித்தாலும், அந்த விஷயத்தில் சரியான முடிவை உங்களால் எடுக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் போன்ற பதவி உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சுகள் நடந்தாலும் அந்த இடத்தில் வெளிப்படையாக உங்களால் பேச முடியாது. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். எந்த ஒரு வேலையையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக தான் இருக்க போகின்றது. இருந்தாலும் உங்களுடைய குழப்பத்தை தெளிவை வைக்க உறவுகளும் நண்பர்களும் இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணையான பேச்சு மனதிற்கு இதமாக இருக்கும். எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகளை கைவிடாதீர்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களோடு நல்லவிதமாக பழகுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்பது நல்லது. புதிய வேலை தேடும் முயற்சி செய்ய வேண்டாம். இருக்கின்ற வேலையை சரியாக செய்தாலே உங்களுக்கு நல்லது நடக்கும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும்போதே உஷாராக இருக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்பவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லாம் உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை அதிக பணத்தை இன்று கையில் வைத்துக் கொள்ள வேண்டாம். விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்ல வேண்டாம்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நிறைய நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியை பேச்சுகள் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். இரவில் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் உறவுகளுக்குள்ளேயே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். சகோதர சகோதரிக்குள், நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற சண்டை வரலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிகமாக முன்னுரிமை கிடைத்தால், அதை தடுப்பதற்கும் நான்கு பேர் வருவாங்க. இவர்களையெல்லாம் சமாளிக்கவே இன்றைய நாள் சரியா போகப் போகின்றது. கொஞ்சம் சிரமம் தான் அனுசரித்து செல்லுங்கள்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவு கொஞ்சம் கையை கடிக்கும். சம்பளம் எல்லாம் செலவாகி முடிந்திருக்கும். இனி வரக்கூடிய நாட்களை எப்படி கடத்திச் செல்வது என்ற யோசனை சில பேருக்கு டென்ஷனை உண்டாக்கும். கவலைப்படாதீங்க. உங்களுக்கான நல்லதை அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான். முயற்சிகளை கைவிடாதீர்கள். கூடுமானவரை அனாவசிய செலவை குறைத்துக் கொள்வது நல்லது. அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசு குழப்பமாகவே இருக்கும். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உங்களுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கும். யாரிடமாவது சண்டை போட்டு இருந்தால், யாருக்காவது துரோகம் செய்திருந்தால் அவர்களிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டு விடுங்கள். தவறு கிடையாது. செய்த தவறுக்கு உண்டான பிரயாச்சிட்டத்தை தேடி கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு எப்போதும் அதையே நினைத்து மனசை போட்டு குழப்பிக் கொள்வது நல்லது அல்ல. உங்களுடைய வேலையும் கெடும் பாத்துக்கோங்க.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நெருக்கடியான நாளாக இருக்கும். கொஞ்சம் செலவுகளை சமாளிக்க சிக்கல்கள் உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒரு புரிதல் இல்லாமல் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற நாசுக்கான சில விஷயங்களை கற்றுக் கொண்டால் தான் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். செலவை சமாளிப்பதற்கு உண்டான நிதி வசதி தானாக கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். ஆனால் இந்த சமயத்தில் தான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்துவதன் மூலமாகத்தான் மாதம் முழுவதும் உங்களால் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும். ஒரே நாளில் அதிக காசு செலவு செய்யும் பழக்கத்தை தவிர்த்துக் கொள்ளவும்.

 

அமைச்சு பதவியை துறந்தார் Geoff Brock! சபாநாயகரும் இராஜினாமா!!

தெற்கு ஆஸ்திரேலிய அரசின் அமைச்சரவையில் இருந்து Geoff Brock வெளியேறியுள்ளார். தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததுடன், இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக Geoff Brock இன்று அறிவித்தார்.

பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அவர் வெளியிடும்போது அழுதுவிட்டார். அவரின் விலகலையடுத்து அமைச்சரவையை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

74 வயதான Geoff Brock அமைச்சரவையில் இருந்து விலகினாலும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார். அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிப்பார்.

அதேவேளை லிபரல் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் Dan Cregan ,லேபர் அரசின் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படுவார் என தெரியவருகின்றது. அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக அவர் சபாநாயகர் பதவியை துறக்கவுள்ளார்.

சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: அதிகாரம் யார் வசம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக்கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக்கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவுசெய்யப்பட்டார். இக்கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது.

சிட்னியில் இரட்டை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம்: 25 வயது இளைஞன் கைது!

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் தம்பதியினர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பொன்றிலேயே நேற்றிரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அலறல் சத்தம் கேட்டதும் அயலவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இது தொடர்பில் அவசர சேவை பிரிவு, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

46 வயது பெண் மற்றும் 53 வயது ஆண் ஆகியோர்மீதே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

‘காசா போர்’ – இஸ்ரேலை கை விடுமா அமெரிக்கா?

இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர்.

அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

” காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். காசாவுக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு, மருந்து பொருட்கள் செல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் இடையே போர் நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘குடும்பப் பெண் கொலை’ – சடலத்தை தேடி இன்றும் தேடுதல் வேட்டை

கொலை செய்யப்பட்டுள்ளார் என கருதப்படும் மூன்று பிள்ளைகளின் தாயான Samantha Murphy இன் சடலத்தை தேடும் பணி இன்றும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Ballarat ல் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Enfield State பூங்கா பகுதியில் தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.

காணாமல்போனோர் தேடும் விசேட பிரிவினர், மீட்பு குழுவினர், மோப்ப நாய் படை பிரிவு அதிகாரிகள், பிராந்திய பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திவருகின்றனர்.

விக்டோரிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Samantha Murphy கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதியே மர்மமான முறையில் காணாமல்போயிருந்தார். காலை நடை பயிற்சிக்கு சென்றிருந்த நிலையிலேயே அவர் காணாமல்போனார்.

பல நாள் விசாரணைகளின் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர். இது தொடர்பில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் இவர் மீண்டும் முற்படுத்தப்படவுள்ளார்.