‘சிட்னி கத்திக்குத்து சம்பவம்’ – கொலையாளியை துணிவுடன் எதிர்கொண்டவருக்கு ஆஸி. குடியுரிமை!

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்தி, அவரை தைரியமாக எதிர்கொண்ட பிரான்ஸ் நாட்டு பிரஜையான Damien Guerot என்பவருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.

“ அவர் விரும்பும்வரை ஆஸ்திரேலியாவில் தங்கலாம். அதற்கான ஏற்பாடு செய்யப்படும்.” – என்று பிரதமர் Albanese தெரிவித்தார்.

கத்திக்குத்து தாக்குதலை நடத்திய Joel Cauchi ஐ, இவர் தடுக்க முற்படும் காட்சிகள் குறித்தான காணொளி வெளியாகியுள்ளது.

Damien Guerot என்பவர் வேலை விசாவிலேயே இருக்கின்றார், இன்னும் இரு மாதங்களில் அது காலாவதியாகவுள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் அவருக்கு ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளார். இந்த யோசனையை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனும் வரவேற்றுள்ளார்.

ஆஸியிலுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. “ விழிப்புடன் இருக்குமாறு” அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிட்னியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

வன்முறை, பயங்கரவாதத்துக்கு ஆஸி. மண்ணில் இடமில்லை…!

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலை பயங்கரவாத செயலாக பொலிஸார் அறிவித்துள்ளனர் எனவும், பயங்கரவாத எதிர்ப்புப் பணிக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது எனவும் பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் மத தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்திய நபர் அரசு மொழியில் பேசும் காணொளியும் வெளியாகியுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ள கிருஸ்தவ மதகுரு, தமது சொற்பொழிவுகளின்போது இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

“ எமது சமூகத்தின் வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு இடமில்லை.” என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிட்னி தாக்குதல் பயங்கரவாத செயல்: விசாரணை வேட்டை தீவிரம்!

சிட்னி மேற்கு பகுதியில் தேவாலயத்துக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயலாக இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அந்த கோணத்தில் விசாரணை இடம்பெற்றுவருவதை நிவ் சவூத் வேல்ஸ் மாநில premier, Chris Minns உறுதிப்படுத்தியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பிஷப் உட்பட நால்வர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் திரண்டதால் வன்முறையும் வெடித்தது. பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்திய 16 வயது இளைஞன் தேவாலயத்துக்குள்ளேயே வைக்கப்பட்டார். அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் கோரினர். பொலிஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

சிட்னியில் மீண்டும் கத்திக்குத்து தாக்குதல்: நால்வர் காயம்

சிட்னி மேற்கு பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கிருஸ்தவ மதகுரு உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி தேவாலயத்தில் இன்றிரவு ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிருஸ்தவ மதகுருமீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 20, 30, 50 மற்றும் 60 வயதுகளுடைய நபர்கள் காயமடைந்துள்ளனர். தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பு நிறை ஆடையில் வந்த நபரே தாக்குதலை நடத்தியுள்ளார்.

சிட்னியில் வணிக வளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்று 48 மணிநேரத்துக்குள் மீண்டுமொரு கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை சிட்னியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமா ஆஸ்திரேலியா?

ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுமாறு ஆஸ்திரேலியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுக்கவுள்ளது என தெரியவருகின்றது.தமது நாடால் இந்த கோரிக்கை முன்வைக்கப்படலாம் என்று ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலின் துணைத் தூதுவர் இன்று தெரிவித்தார்.

சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்விவகாரம் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரான்மீதான தமது தடைகளை ஆஸ்திரேலியா மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் என்று இஸ்ரேல் துணை தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்படும்.
இது தொடர்பில் ஆஸ்திரேலியாவிடம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்படவில்லை.

 

அந்த அசுரனை நேசிக்கின்றேன் – சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரின் தந்தை உருக்கம்

” உங்கள் பார்வையில் அவன் அசுரன். அந்த அசுரனை நான் நேசிக்கின்றேன். அவன் மனநலம் பாதிக்கப்பட்ட பையன்….”

இவ்வாறு சிட்னியில் கொடூர கத்திக்குத்து தாக்குதலை நடத்திய Joel Cauchi இன் தந்தை தெரிவித்துள்ளார்.

40 வயதான Joel Cauchi நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் உலுக்கியுள்ளது.

“ இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். மிகவும் பயங்கரமான சம்பவம்.” எனவும் Joel Cauchi இன் தந்தை கூறியுள்ளார்.

“ எனது மகன் மனநோயாளி, அவருக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேன். அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றேன். ஏதேனும் அறிகுறி தென்பட்டிருந்தால் அவனை தடுத்திருப்பேன்…” எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

துக்கம் அனுஷ்டிப்பு: அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

சிட்னி கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலிய கொடிகள் இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதி, அரச கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

அத்துடன், சிட்னி opera house , சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் ஒளிரச்செய்யப்படும்.

ஈரானுக்கு பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்? அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

சுமார் 200 இற்கு அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99 வீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியான எந்த திட்டமும் இல்லையென இஸ்ரேல் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கலந்துரையாடியுள்ளார். அப்போது, ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் நாங்கள் உதவ மாட்டோம் என்று பைடன் தெளிவுப்படுத்திவிட்டார். இருவருக்குமான உரையாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தாலும், என்ன பேசினார்கள் என்பது குறித்து வெளிப்படையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெள்ளை மாளிகை மற்றும் டெல் அவிவின் நெருங்கிய வட்டாரங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவ முன்வரவில்லை என்கிற தகவலை தெரிவித்திருக்கின்றன.

ஏற்கெனவே ஹமாஸை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்திய எல்லா தாக்குதலுக்கும் அமெரிக்கா துணை நின்றிருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். இந்த சூழலில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா உதவினால், அது நிச்சயம் 3ம் உலகப் போராக வெடிக்கும்.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை வரிசைகட்டி நிற்கும். எனவே இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜோபைடன் கூறியுள்ளார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு ஈரான் ஏவிய ஏவுகணைகளை சமாளிக்க 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செலவு செய்திருக்கிறது.

எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதல் என இறங்கினால் ஈரான் சும்மா இருக்காது. இவையெல்லாம் செலவுகளை இழுத்துவிட்டுவிடும் என்பதாலும், அமெரிக்கா இதில் மௌனம் காக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. எனவே இஸ்ரேல், ஈரான் மீதான பதிலடி தாக்குதலை கைவிட்டுள்ளது.

சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் சீன பல்கலைக்கழக மாணவரும் பலி!

சிட்னி கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் சீன பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ஆறாவது நபர் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதுடைய Yixuan Cheng என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிட்னி வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கர கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அறுவர் பலியாகினர். அத்துடன், தாக்குதல் நடத்திய குயின்ஸ்லாந்து வாசியும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

கொல்லப்பட்டுள்ள அறுவரில் ஐந்து பெண்கள் உள்ளடங்குகின்றனர். எனவே, இது பெண்களை இலக்கு வைத்த தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கின்றது.

ஈரானின் பதிலடி தாக்குதல் பேரழிவுக்கு வழிவகுக்கும் – ஆஸி. எச்சரிக்கை!

இஸ்ரேல்மீதூன ஈரானின் பதிலடி தாக்குதல் மத்திய கிழக்கு முழுவதும் பேரழிவை அதிகரிக்கக்கூடும் – என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தாக்குதல் சம்பவத்தையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

“ இந்த பொறுப்பற்ற தாக்குதல்களைத் தொடர வேண்டாம் என்று ஈரானுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்திருந்தது. மேலும் பல நாடுகளும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தன. இந்நிலையில் இதனை புறக்கணித்து ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஏற்க முடியாது.” -எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“ இந்த விரிவாக்கம் இஸ்ரேல் மற்றும் முழு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இது மத்திய கிழக்கு முழுவதும் அதிக உறுதியற்ற தன்மை மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.” எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரம்: இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது
சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டு இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், கோபமடைந்த ஈரான் இந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேல் மீது தற்போது வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போர் பதற்றத்தை நிலவிவருகிறது. இந்நிலையில், ஈரானிய ட்ரோன்களை அமெரிக்கா இராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. மேலும், சிரியாவிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்காவில் தனது கடற்கரை இல்லத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை இத்தாக்குதல் காரணமாக இரத்து செய்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பினார். இந்நிலையில், இத்தாக்குதலை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

ஏற்கெனவே, இஸ்ரேல் – காசாவிற்கு இடையே போர் நிலவியபோது இஸ்ரேலுக்கு தேவையான போர் உதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை அமெரிக்கா தொடர்ந்து வழங்கியது. இதேபோல தான், தற்போது ஈரான் நடத்திய தாக்குதலிலும் அமெரிக்கா எல்லவித உதவிகளையும் இஸ்ரேலுக்கு வழங்குவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன்காரணமாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரோன்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக 50 இற்கு மேற்பட்ட ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேயலை நோக்கி ஏவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்கா கடற்படை கப்பல்கள் இத்தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. இதனால், சிரியா , ஈரான் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் கச்ச எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, இஸ்ரேலின் கப்பல் ஒன்று ஈரான் இராணுவத்தால் கைப்பற்ற நிலையில் போர் மேகங்கள் வளைக்குடாப் பகுதிகளை சூழந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஈரானை எதிரி நாடாகவும் , இஸ்ரேயலை தனது நட்பு நாடாகவும் கருதுவதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

‘சிட்னி தாக்குதல்’ – குழந்தையைக் காக்க உயிரைவிட்ட வீரத்தாய்!

சிட்னி கத்திக்குத்து தாக்குதலின்போது தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்கு போராடி தாக்குதலில் உயிரிழந்த பெண், வீரத்தாயென அனைவராவும் புகழப்பட்டுவருகின்றார்.

38 வயதான Ashlee Good என்ற இளம் தாயே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இவரின் 9 மாத குழந்தை அறுவை சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றது.

குழந்தைமீது தாக்குதல் நடத்த முற்படும்போது அவரை பாதுகாப்பதற்கு தாய் முற்பட்டார் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் பலரும் மலரஞ்சலி செலுத்திவருகின்றனர்.

 

 

கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் கடந்த காலம் பற்றி தீவிர விசாரணை: பெண்களை இலக்கு வைத்தா தாக்குதல்?

சிட்னி நகரில் அருகே Bondi Junction இல் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த என்பவரே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். 40 வயதான குறித்த நபருக்கு மனநலப் பிரச்சினை இருந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரின் கடந்தகால தொடர்பாடுகள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

சிட்னியில் அவர் தற்காலிகமாகவே குடியேறியுள்ளார், தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் இவருக்கு தெரிந்தவர்களா என்பது பற்றியும் ஆராயப்படுகின்றது.

உயிரிழந்த 6 பேரில் நான்கு பேர் பெண்கள், காயமடைந்த 12 பேரில் எட்டு பேர் பெண்கள், எனவே, இது பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுகின்றது.

 

இடைத்தேர்தலில் Cook தொகுதியை தக்கவைத்தது லிபரல் கட்சி

முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் தொகுதியான சிட்னி தெற்கில் உள்ள Cook தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர் Simon Kennedy வெற்றிபெற்றுள்ளார்.

ஸ்கொட் மொரிசன் அரசியலில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விலகினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரின் தொகுதியான Cookஇல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பசுமைவாதிகள், சுயேச்சைக்குழுக்கள் என்பன போட்டி இட்டிருந்தாலும் இத்தேர்தலில் லேபர் கட்சி களமிறங்கவில்லை.
1975 முதல் இத்தொகுதி லிபரல் கட்சி வசம் உள்ளது. எனவே, லிபரல் கட்சி வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

 

 

 

 

‘சிட்னி தாக்குதல்’ – பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு’

சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலை நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்படி இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாகும்.

https://ethiroli.com/articles/Australia/92161

 

சிட்னி கத்திக்குத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

சிட்னி கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்திய நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பிற்பகல் 3.10 மணியளவிலேயே தாக்குதல் நடத்தியவர் வணிக வளாகத்துக்குள் சென்றுள்ளார். இவ்வாறு உள்நுழையும்போது கத்தியால் நபர்களை குத்தியபடியே சென்றுள்ளார்.

இதனை கண்டவர்கள் அலறயடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

9 பேர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நிலையில், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், உயிரிழந்தவர்களில் குழந்தையொன்றும் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

அவர் தனிநபராகவே இச்செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும், அவர் பின்னணியில் குழுவொன்று இருக்காது எனவும் பொலிஸார் கருதுகின்றனர். எனினும், பலகோணங்களில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. எதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவத்தை பிரதமர் கண்டித்துள்ளார். பெடரல் பொலிஸாரும் தரவுகளை சேகரித்துவருகின்றனர்.

 

 

கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி: சிட்னியில் பயங்கரம்!

சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது. இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. கத்திக்குத்து தாக்குதலில் குழந்தை உட்பட ஏழுபேர்வரை காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.உயிரிழந்த நால்வரில், தாக்குதல் நடத்திய நபரும் இருக்கலாம் என தெரியவருகின்றது.

 

 

 

 

Tasmania வில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மர்ம மரணம்: விசாரணை ஆரம்பம்

Hobart இல் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Tasmanian அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் ஒழுக்கமற்ற முறையில் செயற்படுகின்றார் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் Moonah பகுதியில் வைத்து அதிகாலை 1.55 மணியளவில் 29 வயதான குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் Hobart சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தாலும் அவர் அதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெறுகின்றது. மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மரண பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அது பற்றி கூறமுடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

NSW, Gulgong பகுதியில் கொள்கலனுக்குள் இரு சடலங்கள்: விசாரணை வேட்டை ஆரம்பம்

New South Wales மத்திய மேற்கு பகுதியில் கப்பல் கொள்கலனில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு சோதனை நடத்தியபோது கொள்கலனுக்குள் இருந்து சடலங்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சிட்னியில் இருந்து இரசாயன தடயவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது கொலைச்சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.